வெளியிடப்பட்ட நேரம்: 16:34 (07/09/2016)

கடைசி தொடர்பு:16:33 (07/09/2016)

மும்மதத்தினரின் விநாயகர் ஊர்வலம்... பெருமித கிராமம்!

நாகை : வேதாரண்யம் அருகே மத ஒற்றுமையை வளர்க்கும் வகையில், இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ மதத்தினர் பங்கேற்ற மதநல்லிணக்க விநாயகர் ஊர்வலம் நடந்தது. கடந்த 20 ஆண்டுகளாக இப்படித்தான் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகிறார்கள் இந்த கிராம மக்கள்.
விநாயகர் சதுர்த்தி விழாவினையொட்டி, விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பின்னர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்படும். ஒரு மதத்திற்கான விழாவாக கொண்டாடப்பட்டு வந்த இந்த விழா, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மதநல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி, கருப்பம்புலம் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சிற்றம்பலம் விநாயகர் கோயிலில் விநாயகர் சிலை நிறுவப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நேற்று (செவ்வாய்கிழமை) நடந்தது. இந்த ஊர்வலத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என மும்மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

இது குறித்து அக்கிராம மக்களிடம் பேசினோம். "எங்க கிராமத்துல 25 வருஷமா விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடிட்டு வர்றோம். சுமார் ஒரு டன் எடை கொண்ட விநாயகர் சிலையைஒரு வாரத்துக்கு முன்பே கோயிலில் வைச்சிடுவோம். அந்த விநாயகருக்கு மத நல்லிணக்க விநாயகர்னு பெயர் வைச்சு, மத நல்லிணக்க விநாயகர் சதுர்த்தி விழா என அழைப்பிதழ்கள் அடித்து எல்லா மதத்தை சேர்ந்தவர்களுக்கும் கொடுப்போம். தினமும் இரவு கிராம மக்கள் சிறப்பு பூஜைகள் செய்வர். எங்கள் கிராமத்தை சேர்ந்த பெண்கள் கும்மி பாட்டு பாடி விநாயகருக்கு புகழ் சேர்ப்பார்கள்.

விநாயகரை ஊர்வலமாக எடுத்து சென்று தண்ணீரில் கரைக்கும் ஊர்வலத்துல இந்துக்கள் மட்டுமல்லாது, கிறிஸ்த்துவர்கள், முஸ்லீம்கள் என மும்மதத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்வோம். சிறப்பு அழைப்பாளர்களா கிறிஸ்துவ பாதிரியார்கள், ஜமாத் தலைவர்கள் என எல்லாரும் கலந்துக்குவாங்க. எல்லா மதத்தை சேர்ந்த இளைஞர்களும் ஒன்று கூடி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துட்டு போய், கிராமத்தின் வடக்கு பகுதியில இருக்குற மருதம்புலம் ஏரியில் கரைப்போம். கடந்த 20 வருஷத்துக்கு மேல விநாயகர் சதுர்த்தி விழாவை இப்படித்தான் கொண்டாடிட்டு வர்றோம்.

15 வருஷத்துக்கு முன்னாடி தமிழகத்தின் ஒரு பகுதியில் மத பிரச்னை நடந்து இருக்கு. அப்போது உயர்நீதிமன்ற நீதிபதி ஒருத்தர் எங்க ஊரில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை எடுத்துக்காட்டா சொல்லி சண்டை சச்சரவுகள் இல்லாமல் ஒற்றுமையுடன் இருக்கணும் என சொன்னார். அந்த அளவுக்கு நாங்கள் இந்த விழாவை சிறப்பா நடத்தீட்டு வர்றோம்," என்றனர் மகிழ்ச்சியுடன்.               
விநாயகர் சதுர்த்தி விழாவை மையப்படுத்தி மதகலவரங்கள் ஏற்படும் நிலையில், இது போன்ற விழாக்கள் வரவேற்கப்படுபவையே.
 

- கே.குணசீலன்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்