Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டைரியால் வீழ்ந்த ஐ.பி.எஸ்கள்!

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 27 பேர்களுக்கு செப்டம்பர் 6-ம் தேதியன்று மெகா மாறுதல் லிஸ்ட் வந்தது. அடுத்த நாளே..ஐ.பி.எஸ்-களுக்கும் கண்டம் காத்திருந்தது. 2014-ம் வருடம் நவம்பர் 11-ம் தேதியுடன் ஒய்வு பெற்றிருக்க வேண்டியவர் அசோக்குமார். அவருக்கு இரண்டு ஆண்டுகள் பதவி நீடிப்பு தரப்பட்டது. அதன்படி, வருகிற நவம்பர் 11-ம் தேதியன்று வரை அசோக்குமாருக்கு பதவியில் இருந்திருக்கவேண்டும். ஆனால், செப்டம்பர் 6-ம் தேதியன்றே விருப்ப ஒய்வில் சென்றுவிட்டார். அதேநேரம், சென்னை மாநகர போலீஸுன் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் பதவியில் இருந்த அருணாசலம் டம்மியான பதவிக்கு தூக்கி அடிக்கப்பட்டிருக்கிறார். 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லை. தினம் தினம் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து விட்டன. இவற்றை கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருக்கும் அசோக்குமார் சரிவர செயல்படவில்லை என்று மீடியாக்கள், எதிர்கட்சிகள் புகார் பட்டியலை வாசித்தன. ஒய்வுப் பெற்ற பிறகு பதவியில் இருப்பதால் தனது வாய்ஸ்க்கு போலீஸ் துறையில் உரிய மரியாதை இல்லை என்று கடந்த சில நாட்களாகவே அசோக்குமார் புலம்பி வந்ததாக பேசிக்கொள்கிறார்கள். அதன் எதிரொலிதான் அவராக முன்வந்து விருப்ப ஒய்வில் போய்விட்டார் என்று அசோக்குமாரின் ஆதரவு போலீஸ் அதிகாரிகள் சொல்கிறார்கள். இன்னோரு தரப்பினரோ, சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றில் அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய கட்டுரை வெளியானது. அந்த கட்டுரையாளரிடம் அசோக் குமார் பேசி சில தகவல்களை கொடுத்தார். இதனை அறிந்த அரசு மேலிடம் அவர்மீது கோப பார்வையை வீசியது. அதனால் தான் அவரை விருப்ப ஓய்வில் போகும்படி சொல்லியிருக்கிறார்கள் என்றும் பேசிக்கொள்கிறார்கள்

அதே போல், சென்னை மாநகர போலீஸுன் மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் கமிஷனர் பதவியில் இருந்த அருணாசலம் முன்பு சி.பி.ஐ-யில் அசோக்குமாருடன் இணைந்து பணி செய்தவர். அந்த வகையில், அருணாசலத்தின் மீது அசோக்குமாருக்கு நல்ல நட்பு உண்டு. இந்த நிலையில், சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த  டி.கே.ராஜேந்திரனுக்கும் அருணாசலத்திற்கும் சில விவகாரங்களில் கருத்து மோதல் ஏற்பட்டது. கமிஷனர் சொன்ன பல அசைன்மெண்ட்களை அவர் சரியாக செய்யவில்லை. குறிப்பிட்ட தி.மு.கவின் எம்.எல்.ஏ ஒருவரை கைது செய்ய கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அவர் அதை செய்யாமல் இழுத்தடித்துள்ளார். இதனால் டி.கே.ராஜேந்திரன், அருணாசலம் இடமாறுதலுக்கு அப்போதே பிள்ளையார் சுழியை போட்டார். அதன்படி, அருணாசலத்தை தற்போது மாற்றியிருக்கிறார்கள். இதுதான் நடந்தது என்கிறார்கள் சென்னை மாநகர போலீஸ் வட்டாரத்தினர்.
இப்படியிருக்க... 

'நன்றியுடைய தமிழக காவலர் சங்கம்' என்கிற பெயரில் அதிர்ச்சிகரமான வாட்ஸ்-அப் செய்திகள் உலா வர ஆரம்பித்திருக்கின்றன. இதில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறும்போது, 

" பான் குட்கா போதை பாக்குகளை தமிழகத்தில் தடை செய்தவர் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் அந்த போதை பாக்குகள் வெளிப்படையாகவே கடைகளில் விற்கப்பட்டு வந்தன. சில மாதங்களுக்கு முன்பு, போதைப் பாக்குகளை விற்கும் இந்த இரு வியாபாரிகளின் வீடு, வாசல், ஆபிஸ், குடோன் என்று எல்லா இடங்களிலும் வருமான வரித்துறை (ஐ.டி) ரெய்டு செய்தது. அந்த சோதனையில் சிக்கிய ஆவணங்களில் டைரி ஒன்றும் அடக்கம். அந்த டைரியை கைப்பற்றிய வருமான வரி அதிகாரிகள், அதை திறந்து பார்த்த போது யாருக்கெல்லாம் மாமூல் கொடுத்த விவரம் குறிப்பிடப்பட்டு இருந்ததாம். அதில் சில ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பெயர்களும் இருந்தனவாம். 

சென்னை மாநகர காவலில் முக்கிய பொறுப்பை குறிப்பிட்டு மாதம் 20 லட்சம் ரூபாய் மாமூல் தரப்பட்டதாகவும், வேறு சில அதிகாரிகளின் பதவிகளை குறிப்பிட்டு பத்து லட்சம், ஏழு லட்சம்..என்று விவரம் இருந்தாம். அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, டைரியில் இருந்த விவரங்கள் தொடர்பான ஆதாரங்களை வருமான வரித்துறையினர் சேகரிக்க ஆரமிக்க.. விஷயம் எப்படியோ டி.ஜி.பி. ஆபீஸ் வரை போயிருக்கிறது. அங்கிருந்து மாநகர போலீஸ் உயர் அதிகாரி ஒருவரை களத்தில் இறங்கி துப்பறியும் படி உத்தரவு வந்ததாம். இந்த இருவரும் அந்த டைரியின் சாரம்சங்களை ரகசியமான வழியில் வாங்கி தமிழக முதல்வரிடம் காட்டி விட முனைப்பு காட்டியிருக்கிறார்கள். ஆனால் அந்த டைரியை வருமானவரித்துறையினர் கொடுக்கவில்லை. இதற்கிடையே, டைரியில் பெயர் அடிபடும் இன்னொரு உயர் போலீஸ் அதிகாரிக்கு சற்று லேட்டாக  தகவல் போயிருக்கிறது. 'அந்த டைரி சிக்கினால் தனக்கு சிக்கல் வரும்' என்று பயந்து போயிருக்கிறார். உடனே, அரசு மேலிடத்துக்கு நெருக்கமான ஒருவரிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார். 'தனக்கும் மாமூலுக்கும் துளிகூட சம்மந்தமில்லை. ஆனால், வேண்டுமென்றே மாட்டிவிடப்பார்க்கிறார்கள்' என்று சொல்லியிருக்கிறார். இவரின் புலம்பலும் அரசு மேலிடத்துக்கு தெரிவிக்கப்பட்டதாம். இதையடுத்து, தமிழக உளவுத்துறையினர் விசாரித்து ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். இந்த நிலையில்தான், டி.ஜி.பி. விருப்ப ஒய்வில் சென்றார். மாநகர உயர் அதிகாரி டம்மியான பதவிக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இந்த நிகழ்வுகளுக்கும் அந்த டைரி விவகாரத்துக்கும் தொடர்பு இருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் செய்திகள் றெக்கை கட்டி உலா வர ஆரம்பித்தது இப்படித்தான் " என்கிறார்.
  
இதுபற்றி இன்னொரு உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ''பான், குட்கா வியாபாரி வீட்டில் நடந்த ரெய்டில் கைப்பற்றப்பட்ட டைரி விவகாரத்தை கிளறினால் பெரிய பெரிய போலீஸ் தலைகள் உருளும். போலீஸ் அதிகாரிகளுக்கு மாமூல் தந்த ஏஜண்டுகள் இருவர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை வருமான வரித்துறையினர் தேடி வருகிறார்கள். அவர்கள் அகப்பட்டால் முழு விஷயமும் அம்பலமாகும். இதற்கிடையில், வருமான வரித்துறையினர் தங்கள் ரெய்டில் கிடைத்த ஆவணங்களில் உள்ள விஷயங்கள் குறித்து மத்திய உளவுப்பிரிவு, மத்திய விஜிலென்ஸ் பிரிவு..இரண்டுக்கும் தகவல் அனுப்பியுள்ளனர். அங்கிருந்து உறுதியான  நடவடிக்கை உத்தரவு வரவில்லை என்றால், இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர் யாரவது நீதிமன்றத்தை நாடவும் வாய்ப்பு இருக்கிறது. முன்பு இதே போல்தான், கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் சில போலீஸ் அதிகாரிகளின் தலை உருண்டது. அதேபோல், பான், குட்கா விவகாரத்திலும் சில போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் இப்போது அடிபடுகின்றன. பொறுத்திருந்து பாருங்கள்'' என்கிறார்.

 -  நமது நிருபர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement