இளைஞர்களை திண்டாட வைக்கும் டி.என்.பி.எஸ்.சி தளம்!

ளநிலை உதவியாளர், வரி வசூலிப்பாளர், நில அளவையாளர், டைப்பிஸ்ட், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட 5,451 ‘குரூப்-4’ பணியிடங்கள் தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை  ஆகஸ்ட் 9-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (செப்-8) கடைசி நாளாகும். இந்தப் பணியிடங்களுக்கு இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், கடைசித் தேதி நெருங்கியதால் லட்சக்கணக்கான இளைஞர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க முயன்றனர்.

கடந்த சில நாட்களாக டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தின், ‘ஆன்லைன்’ விண்ணப்பப் பிரிவு முடங்கி உள்ளது. இதனால் விண்ணப்பம் தொடர்பான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய முடியாமல் இளைஞர்கள் தவிக்கின்றனர். ‘அனைத்துத் தகவல்களையும் பதிவு செய்த பிறகு, ‘சமர்ப்பிக்கவும்’ என க்ளிக் செய்தால், அடுத்த பக்கத்துக்குச் செல்லாமல் லோடு ஆகிக்கொண்டே இருக்கிறது’ என விண்ணப்பதாரர்கள் கூறுகின்றனர்.

‘‘ஏழாவது ஊதியக் குழு அறிவிப்பு போன்ற அரசின் நடவடிக்கைகளால் அதிக ஆர்வம் உள்ளது. இதனால் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொடும் என டி.என்.பி.எஸ்.சி நம்புகிறது. ஆனால், இதற்கு ஏற்றாற்போல ஆன்லைன் சர்வர்களை டி.என்.பி.எஸ்.சி  தயார் செய்ய தவறியுள்ளது. இணையதளம் முடங்கியதால் பல விண்ணப்பங்கள், அரைகுறையாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தகுதியுள்ள ஏழை இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, விண்ணப்பத் தேதியை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும்’’ என டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான பயிற்றுநர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

இன்று நள்ளிரவுடன் (11.59) குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி முடிகிறது. விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று டி.என்.பி.எஸ்.சி நல்ல முடிவை எடுக்குமா?

- ஆ.நந்தகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!