Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இரண்டு வருட பதவி நீட்டிப்பு ரேஸ்: டி.கே.ராஜேந்திரன். vs ஜார்ஜ்

தமிழக காவல்துறையின் ஹெட் ஆஃப் ஃபோர்ஸ் என்று அழைக்கப்படும் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி பதவியில் யார் அமர்வது என்கிற போட்டி கடுமையாக இருக்கும். ஆளுங்கட்சியின் ஆசி பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிக்கே அந்தப் பதவிக்கான வாய்ப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வரிசையில் சீனியர்கள் சிலர் இருந்தும், அவர்களை புறம் தள்ளிவிட்டு, அசோக்குமாரை டி.ஜி.பி பதவியில் அமர வைத்து அழகு பார்த்தார் முதல்வர் ஜெயலலிதா. அசோக்குமார் ஒய்வு பெறுவதற்கு முன்பே, கடந்த 2014-ம் வருடம் நவம்பர் மாதம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி பதவி நீட்டிப்பும் அளிக்கப்பட்டது. இரண்டு வருடங்கள்... அதாவது, வருகிற நவம்பர் மாதத்தில்தான் முறைப்படி அவர் பதவிக் காலம் முடிகிறது. ஆனால், செப்டம்பர் 6-ம் தேதியே அரசிடம், விருப்ப ஓய்வு கடிதம் கொடுத்தது காவல்துறை வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. 

'டைரி' மர்மம்... ஐ.டி. மவுனம்...! 

திடீரென ஏன் இந்த முடிவை எடுத்தார் அசோக்குமார்? என்பது பற்றி பட்டிமன்றமே நடக்கிறது. இதுபற்றி டி.ஜி.பி அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். '' வாட்ஸ் அப்பில் வலம் வரும் ஒரு தகவல் என்னவென்றால், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான், குட்கா போன்ற போதைப் பொருட்களை திருட்டுத்தனமாக கடைகளுக்கு சப்ளை செய்த ஆந்திர தொழிலதிபர்கள் வீட்டில் நடந்த ஐ.டி. ரெய்டில் சிக்கிய டைரி விவகாரம்; ஜனாதிபதி விருதுக்கு தி.மு.க ஆசி பெற்ற சில ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தது என விரல் விட்டு எண்ணும் வகையில் அசோக்குமார் மீது சில குற்றச்சாட்டுக்கள் சொல்லப்படுகின்றன. இதற்கெல்லாம் டி.ஜி.பியை வீட்டுக்கு போகச் சொல்வார்களா என்ற கேள்வி, ஐ.பி.எஸ் அதிகாரிகள் மனசுக்குள் எழுகிறது.
அந்த டைரிக்காக அசோக்குமார் மீது நடவடிக்கை என்றால், அந்த டைரியில் இடம் பிடித்த இதர ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதில் இல்லை. சென்னை மாநகர காவல்துறையில் முக்கிய பொறுப்பில் இருந்த ஐ.பி.எஸ் அதிகாரிக்கு, 2013-ம் ஆண்டில் இருந்து முதல் மாமூல் வழங்கப்பட்டதாக அந்த டைரி குறிப்பு தெளிவாகச் சொல்கிறது. அப்படியென்றால் அந்த டைரியைக் கையில் வைத்திருக்கும் வருமான வரித்துறை ஏன் நடவடிக்கையில் இறங்கவில்லை. பொதுவாக, இதுமாதிரி ஒரு சந்தர்ப்பம் சாதாரண பிரமுகர்கள் யாருக்காவது நேர்ந்தால், அவர்கள் வீட்டை உடனே ஐ.டி. அதிகாரிகள் ரெய்டு நடவடிக்கையில் இறங்கியிருப்பார்கள். கறுப்பு பணத்தை வைத்திருந்ததாக குற்றம்சாட்டி அலைக்கழித்திருப்பார்கள. ஆனால், ஐ.பி.எஸ். அதிகாரிகள் விஷயத்தில் ரெய்டு ஏதும் நடத்தாமல் இருப்பதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்?" என்றார் விரிவாக. 

அசோக்குமாருக்கு வந்த கிளைமாக்ஸ் மெசேஜ் 

கடந்த சட்டமன்ற தேர்தலின் கருத்துக்கணிப்பு முடிவுகள், தி.மு.கவுக்கு சாதகமாக இருந்ததால் பதவி ஆசையால் கோபாலபுரத்துக்கு ஆதரவாக டி.ஜி.பியின் செயல்பாடுகள் இருந்தாகவும், அதையொட்டி உளவுப்பிரிவு அதிகாரியின் கார் பறிமுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் சொல்கின்றனர். இது, கார்டன் வட்டாரத்தில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவு ஒவ்வொரு செயல்பாடுகளிலும் தெரிந்தது. ஆட்சி மேலிடத்தின் கோபத்தை குறைக்க, ' இந்த பிரச்னைக்கு எல்லாம் காரணம் இன்னொரு அதிகாரிதான்' என்று அசோக்குமார் தரப்பினர் போட்டுக்கொடுத்தார்களாம். உடனே அந்த அதிகாரி தூக்கியடிக்கப்பட்டார். நொந்துபோன அந்த அதிகாரி வெளியில் இருந்தபடியே, அசோக்குமாரின் இன்னொரு பக்கத்தை அரசு மேலிடத்துக்கு வேறு சானல்கள் மூலமாக ஆதாரத்துடன் தெரிவித்து நிலைமையை விளக்கினாராம். இந்த வகையிலும், அசோக்குமார் மீது ஆட்சி மேலிடத்தின் கோபப் பார்வை அதிகமானது. 

காவிரி நீர் பிரச்னை தொடர்பாக சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்த ஆலோசனை கூட்டம், சில நாட்களுக்கு முன்பு கோட்டையில் நடந்தது. அந்த கூட்டத்திற்குக் கூட அசோக்குமார் அழைக்கப்படவில்லை. கூட்டத்தில் பங்கேற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் முதல்வர் ஜெயலலிதா, அசோக்குமார் குறித்து சில தகவல்களைச் சொல்லியுள்ளார். அவரது வார்த்தையில் அனல் பறந்துள்ளது. இந்த தகவல் உடனடியாக அசோக்குமாருக்கு சொல்லப்பட்டவுடன், முதல்வரை சந்திக்க அவர் உடனடியாக விரைந்துள்ளார். ஆனால் முதல்வர் ஜெயலலிதாவோ, அவரை சந்திக்கவில்லை. இதன்பிறகே, அசோக்குமார், பதவியில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்துள்ளார் என்கின்றனர் டி.ஜி.பி அலுவலக அதிகாரிகள். இன்னொரு தகவலையும் சொல்கிறார்கள். ஏற்கனவே 2001 அ.தி.முக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பியாக இருந்த ரவீந்திரநாத்துக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. சில காரணங்களை சுட்டிக்காட்டி அவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ' அதுபோல உங்களுக்கும் நடக்கலாம்' என்று அசோக்குமாரிடமும் தகவல் சொல்லப்பட்ட பிறகே அவர் இந்த முடிவை எடுத்தாகச் சொல்கிறார்கள்.

அசோக்குமார் பதவி காலியானதும், அந்த இடத்தைப் பிடிக்க சீனியர் ஐ.பி.எஸ் அதிகாரிகள் முட்டி மோதத் தொடங்கி விட்டனர். அதில் டி.கே.ராஜேந்திரனுக்கும் ஜார்ஜுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. ராஜேந்திரன் கவனிக்கும் உளவுத்துறை ப்ளஸ் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி(பொறுப்பு) ஆகிய இரண்டிலும் படு தீவிரமாக இறங்கிவிட்டார். அதேபோல், மூன்றாவது முறையாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் பதவியில் அமர்ந்துள்ள ஜார்ஜ், க்ரைம் சம்பவங்களை அறவே குறைக்க அடுத்தடுத்த நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார். இருவரில் யார் ஆட்சி மேலிடத்தின் 'சபாஷ்' பெறுவது என்கிற போட்டியில் குதித்துவிட்டனர். ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பிடிக்க ஐ.பி.எஸ் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோர் தயராகிவிட்டனர். மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ள டி.ஜி.பி பதவிக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் டி.கே. ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோரின் பெயர்கள் நிச்சயமாக இருக்கிறது. இவர்களைத்தவிர, வேறு சிலரின் பெயர்கள் இருந்தாலும் அவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. 

" ஜார்ஜ் ஓய்வு பெறும் நாள்...14.9.2017. அதாவது, இன்னும் ஒரு வருடம் உள்ளது. டி.கே. ராஜேந்திரன் ஓய்வு பெறும் நாள்..15.6.2017. அதாவது, இன்னும் ஒன்பது மாதங்கள்தான். தற்போது மத்திய அரசு தரப்பில் யாருக்கு டிக் அடித்தாலும், அந்த நாள் முதல் இரண்டு ஆண்டுகள் டி.ஜி.பி பதவியில் தொடரலாம். உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி எப்படி ராமானுஜம் மற்றும் அசோக்குமார் பதவி நீட்டிப்பு பெற்றார்களோ, அதே பாணியில் தற்போது போட்டியில் உள்ள ஜார்ஜ் அல்லது டி.கே. ராஜேந்திரன் ஆகிய இருவரில் ஒருவருக்கு சான்ஸ் அடிக்கலாம். அதற்காகத்தான் இருவரும் வரிந்துகட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள்" என்கிறார் நிலைமையை கவனித்து வரும் சீனியர் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர். 

பதவிப் போட்டிக்கான மியூசிக்கல் சேரில் யார் அமரப் போகிறார்கள் என்பது சில வாரங்களில் தெரிந்துவிடும். 


- நமது நிருபர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement