Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"ஏப்பே...பச்சரிசிக்கும் புழுங்கல் அரிசிக்கும் வித்தியாசம் தெரியுமா?’’ - லகலக ஞானசம்பந்தன்

‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2016’ கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, ஈரோட்டில் இன்று (செப்டம்பர் 9 -ம் தேதி) இனிதே தொடங்கியது. செப்டம்பர் 12-ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த மாபெரும் வேளாண் கண்காட்சியை இயற்கை வேளாண்மை ஆர்வலர் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக ‘பஞ்சகவ்யா சித்தர்’ கே.நடராஜன், விவசாயிகள் சங்கத் தலைவர் காசியண்ணன் கவுண்டர் ஆகியோர் கலந்து கொண்டனர். விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். 

துவக்க விழாவில் பேசிய கே.நடராஜன், "இயற்கை உணவுகளை மறந்து, செயற்கை உணவுகளை நோக்கி ஓடிட்டிருக்கோம். இது சாவை நோக்கி ஓடுறதுக்கு சமம். இதை உணர்ந்து சிலர் சிறுதானியம், ஆர்கானிக் உணவுனு மாறிட்டு வர்றாங்க. நம் நாட்டுக் கம்பை சாதாரணமா நினைக்கிறோம். ஆனா, அந்த கம்பில்தான் மெக்னீசியம் சத்து அதிகம் இருக்கிறதா உலக சுகாதார நிறுவன அறிவிச்சிருக்கு. இது சர்க்கரை நோய்க்கும், இருதய பாதுகாப்புக்கும் நன்மை பயக்கக்கூடியது. அதனால் சிறுதானியங்கள சாதாரணமா நினைக்க வேணாம். வீட்டுக்கு ஒரு மாடு வளர்த்துட்டு வந்தா, கிடைக்கும் நன்மைகள் ஏராளம். இயற்கை விவசாயத்துல முக்கிய இடுபொருளான பஞ்சகவ்யா தயாரிப்புக்கு மாடுதான் மூலப்பொருள்ங்கிறத மறந்துட வேணாம்” என்று முத்தாய்ப்பாகக் குறிப்பிட்டார்.

பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசும்போது, “மழை வர்றதகூட வானிலை ஆராய்ச்சி மையம் சொன்னாதான் இன்னிக்கு நமக்கு தெரியுது. ஆனா, இதுக்கு முன்ன பல அறிகுறிகள வெச்சே மழை வர்றத கணிச்சிருக்கோம். ஆடு, மாடுக மேய்ஞ்சுக்கிட்டே இருக்கும்போது மேயுறத நிறுத்துனா, மழை வர்றத அறியலாம். காக்கைகள் வேப்ப மரத்துல கூடு கட்டும்போது மரத்தோட உள்பகுதியில கட்டுனா, அந்த ஆண்டு மழை அதிகமா வருமாம். வெளி பகுதியில கூடு கட்டுனா குறைவான மழை பெய்யுமாம். தவளை தொடர்ந்து கத்திக்கிட்டே இருந்தா மழை பெய்யும்கிறது நிறைய பேருக்குத் தெரியும். நண்டு, தான் வாழுகிற குழியை சுத்தி மண் கட்டுனா மழை வரப் போறதுனு அர்த்தம். இப்படி உயிரினங்களோட செய்கைகள வெச்சே மழையை கண்டுபிடிச்சுவங்கதாம் நாம. ஆனா, இன்னிக்கு மழை முன்னறிவிப்புக்கு டி.வி., வானொலியை எதிர்பார்த்துட்டு இருக்கோம். விவசாயம்தான் இதுபோன்ற விஷயங்கள உயிர்ப்போட வெச்சிட்டு இருந்தது.

பாரம்பர்ய விவசாய குடும்பம் எங்களுடையது. மதுரைக்கு பக்கத்துல சோழவந்தான் எங்க ஊரு.  மாடு இருந்தது. நிலம் இருந்தது. அப்பாதான் விவசாயம் பாத்துட்டு இருந்தாரு. அதனால, பக்கத்துல இருந்தே விவசாயத்த கவனிச்சிருக்கேன். பள்ளிக்கு செல்லும்போது காலையில 8 மணிக்கெல்லாம் கிளம்பிடுவோம். படிக்கிற ஆர்வத்துல இல்ல. ஊர்ல எந்த மாடு கன்னு போட்டிருக்கு. எந்த நாய் குட்டி போட்டிருக்கு. எங்க, எந்த மரம் காய்ச்சிருக்குனு பாத்துட்டு போவோம். இந்த மாதிரி அனுபவங்கள் மூலமா நம்மோட மண்ண மட்டுமில்லாம, உயிரினங்கள பத்தியும் புரிஞ்சுக்க முடியுது.

இன்னிக்கு பள்ளி மாணவர்களுக்கு இப்படியொரு அனுபவமே கிடைக்கிற வாய்ப்பு இல்ல. அதனாலதான் பச்சரிசிக்கும், புழுங்கல் அரிசிக்கும் இருக்கிற வித்தியாசம்கூட தெரியம வளர்கிறார்கள். பள்ளியிலே விவசாயத்தைக் கத்துக் கொடுக்கிற பணிகள தொடங்க வேண்டும். அதேசமயம் நாமும் பிள்ளைகளுக்கு விவசாயத்தை சொல்லிக் கொடுக்கத் தொடங்கணும். அப்போதான் நம்ம மண்ண பத்தி அவர்ங்களும் புரிஞ்சிக்க முடியும். பாரம்பர்ய விவசாயத்தையும், பழைமையான விஷயங்களையும் நமக்குத் திருப்பி கற்றுக் கொடுக்குற பணிகளை பசுமை விகடன் செஞ்சிட்டு வருது. அதனால, பசுமை விகடனை பாடத்திட்டத்தில் சேர்க்கணும்ÕÕ என்று அரசாங்கத்துக்கு வேண்டுகோள் வைத்தவர், "இதேபோல விவசாயத்துக்குனு வேளாண் தொலைக்காட்சியை விகடன் குழுமத்தார் தொடங்கணும்" என்றும் கேட்டுக் கொண்டார்.

கண்காட்சியின் ஓர் அங்கமாக நடைபெற்று வரும் கருத்தரங்குகள் தொடர்ந்து நான்கு நாட்களும் நடைபெறும். மீன் வளர்ப்பு, இயற்கை இடுபொருள், கால்நடை வளர்ப்பு என பல்வேறு தலைப்புகளில் முன்னோடி விவசாயிகள், வல்லுனர்கள் உரையாற்ற இருக்கின்றனர். கண்காட்சியில் பண்ணைக் கருவிகள், ஆடு வளர்ப்பு கருவிகள், இயற்கை உணவு பொருட்கள், நர்சரிகள், விதைகள், மாடித்தோட்ட இடுபொருட்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொன்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

இதோடு பசுமை விகடன் சார்பில் ஒவ்வொரு பயிருக்கும் ஆலோசனை வழங்க அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னோடி விவசாயிகள் அந்த அரங்குகளில் அமர்ந்து ஆலோசனை வழங்கி வருகிறார்கள். தொடர்ந்து நான்கு நாட்களுக்கும் இந்த ஆலோசனை அரங்குகள் செயல்படும்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், இந்திய பயிர் பதனீட்டுக் கழகம், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி ஆகியவை இந்த கண்காட்சிக்கு தங்களுடைய ஆதரவை வழங்கியுள்ளன.

-பசுமைக் குழு

படங்கள்: க.தனசேகரன், க.ரமேஷ் கந்தசாமி, தே.தீட்சித்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement