ரூ.5.72 கோடி கொள்ளையில் ரயில்வேயை திணறடித்த ஆர்.டி.ஐ கேள்விகள்!

சேலத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்ட சென்னை எக்ஸ்பிரசில் கடந்த  ஆகஸ்ட் 8ம் தேதி ரூ.5.72 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்தாலும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. வடமாநிலங்களில் முகாமிட்டுள்ள தனிப்படை அதிகாரிகள் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். இந்தநிலையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஆர்.டி.ஐ போராளியும், வழக்கறிஞருமான பிரம்மா, ஆர்.டி.ஐ. மூலம் கேள்வி கணையை ரயில்வே நிர்வாகத்திடம் தொடுத்துள்ளார். வழக்கம் போல வழக்கு விசாரணையில் இருப்பதாகச் சொல்லி பதிலை இன்று அனுப்பி இருக்கிறது ரயில்வே நிர்வாகம். ஆர்.டி.ஐ.யில் பிரம்மா கேட்ட கேள்விகள் இதுதான்.

* சேலம் ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு எந்த ரயிலில் பணம் கொண்டு வரப்பட்டது. வண்டி எண், ஓட்டுநர் பெயர், உள்ளிட்ட விவரம் தர வேண்டும்.

* ரயிலில் வங்கிக்குரிய பணத்தை சேலம் ரயில் நிலையத்தில் பார்சல் அனுப்பிய அலுவலர்களின் பெயர், பணி பொறுப்பு விவரம் வேண்டும்.

* சேலம் ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட பணத்தின் பார்சல் பிரிவு புக்கிங் செய்த போது கொடுக்கப்பட்ட ரசீது நகல் வேண்டும். 

* அனுப்பப்பட்ட பணத்தின் மதிப்பு எவ்வளவு குறிப்பிடப்பட்டுள்ளது என்ற விவரம் வேண்டும்.

* அதற்கு கொடுக்கப்பட்ட பார்சல் எண் விவரம் வேண்டும். பார்சல் அலுவலகத்திலிருந்து ரயிலில் பணப்பெட்டிகள் ஏற்றப்பட்ட போது பதிவான கேமராவின் குறுந்தகடு தர வேண்டும்.

* ரயில் நிலையத்திலிருந்து பணம் எந்த தேதி, எத்தனை மணிக்கு புக்கிங் செய்யப்பட்டது என்ற விவரம் வேண்டும்.

* பணம் ஏற்றப்பட்ட பெட்டி சீல் வைக்கப்பட்டதை உறுதி செய்து  கையொப்பமிட்ட அலுவலர்களின் ஆவண நகல் தர வேண்டும். 

* சேலத்திலிருந்து புறப்பட்ட ரயில் சென்னை வருவதற்கு முன்பு எந்தெந்த ரயில் நிலையங்களில் எத்தனை நிமிடங்கள் நிறுத்தப்பட்டது என்ற விவரம் தர வேண்டும்.

* அவ்வாறு ரயில் நிலையங்களில் நின்ற போது அதை ஆய்வு செய்த ரிப்போர்ட்டின் நகல் தர வேண்டும்.

* ரயிலில் பண பெட்டிகளை ஏற்ற எத்தனை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். அவர்களின் பெயர் தர வேண்டும்.

* பணம் ஏற்றப்பட்ட ரயில் சென்னையில் எவ்வளவு நேரம் தனியாக நிறுத்தப்பட்டு இருந்தது என்ற விவரம் தர வேண்டும்.

* திருட்டு சம்பவத்தை முதலில் தகவல் கொடுத்த நபரின் பெயர், முகவரி, பணி பொறுப்பு தர வேண்டும். அவர் கொடுத்த புகார் மனு தர வேண்டும்.

* ரயிலில் பணம் கொண்டு வந்த போது பாதுகாப்பு பணியில் எத்தனை காவலர்கள் ஈடுபட்டு இருந்தார்கள். அவர்களின் பெயர், பணி பொறுப்பு, அவர்கள் பயணம் செய்த பெட்டி, மற்றும் இருக்கை எண் விவரம் தர வேண்டும்.

* பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாருக்கு டிக்கெட் எந்த தேதியில் வழங்கப்பட்டது. டிக்கெட் நகல் தர வேண்டும். பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடுத்த உத்தரவின் நகல் தர வேண்டும்.

* பாதுகாப்பு பணியில் நியமனம் செய்ய வேண்டும் என சேலம் வங்கி கொடுத்த கோரிக்கை மனுவில் நகல் வேண்டும். பணியில் இருந்த காவலர்கள் இதற்கு முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்களா என்ற விவரம் தர வேண்டும். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் பணியின் போது யாருடன் செல்போனில் பேசினார்கள் என்ற விவரம் வேண்டும்.

* பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களில் எத்தனை பேருக்கு குடிப்பழக்கம் உள்ளது என்ற விவரம் வேண்டும். அன்றைய தினம் குடிபழக்கம் இல்லை என்று மருத்துவர் கொடுத்த சான்றிதழின் நகல் வேண்டும். கொள்ளை போன ரயிலின் மேற்கூரையில் எந்த இடத்தில், எவ்வளவு அளவில் துளை போடப்பட்டுள்ளது என்ற விவரம் வேண்டும்.

இந்த கேள்விகளுக்கு திருச்சி ரயில்வே கோட்ட ஆபரேசன்ஸ் மேலாளர் இன்று பதில் அனுப்பி உள்ளார். அதில் வழக்கு விசாரணையில் இருப்பதால் பதில் அளிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கறிஞர் பிரம்மா, உடனடியாக மேல்முறையீடு செய்துள்ளார். 

எஸ்.மகேஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!