Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சமகாலத்துக்கு கை கொள்ள வேண்டிய பாரதியின் ரெளத்திரம்!

பாரதியைப் புரிதல் என்பது வாழும் உயிர்களை, மனிதநேயத்தை, ரௌத்திரத்தை, ஒற்றுமையை, ஆன்மீகத்தை, பகுத்தறிவை,காதலை, பண்பாட்டை, சமநிலைச் சமூகத்தைப் புரிவதற்குச் சமம்.


39 ஆண்டுகளே வாழ்ந்தாலும் தான் வாழ்ந்ததன் அடையாளத்தைப் பதியம் செய்து கிளைப் பரப்பியவன் பாரதி. பாரத நாட்டை தன் கட்டுக்குள் வைத்து சிதைத்துக் கொண்டிருந்த வெள்ளையனை எதிர்த்து குரல் கொடுத்தான் அன்று. இன்றும் அவன் எழுதியப்  பாடல்கள் ஏட்டோடு நிற்காமல் இச்சமூகத்தை சாடும் ஏவுகனையாகவே எழுந்து நிற்கின்றன.

என்ன செய்தான் பாரதி?!

உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்றும் ஏழை, பணக்காரன் என்றும் பாகுபாட்டில் மிதந்து கொண்டிருந்த சமூகத்தின் மீது தன் கருத்தை வைக்கிறான். கொஞ்சம் பாரதியைப் படித்து, அவன் சொன்னதை நினைப்போம் வாருங்கள்.

‘’ஏழையென்றும் அடிமையென்றும்
      எவனும் இல்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனிதரென்பது
      இந்தியாவில் இல்லையே ’’

பாரதி சொன்னதெல்லாம் இன்றென்ன பொய்த்தா போயிருக்கிறது?
கட்டிய மனைவியை புதைக்கப் பணமில்லாமல் பல மைல் தூரம் வரை அவளை தூக்கி தோளில் சுமந்து நடந்தே போகிறான் ஒடிசாவில் ஓர் ஏழைக் கணவன்.
மருத்துவம் காசு, கல்வி காசு, வேலைவாய்ப்பு காசு, அரசியல் காசு, உண்ண காசு, உடுத்த காசு, உறங்க காசு, செத்தாலும் காசு என்று காசுக்கு கூப்பாடு போடும் இந்த மானுடத்தில் காசு பணம் இல்லை என்றால் எல்லாமே இழிவு தானே!

சாதி மதங்களைப் பாரோம் - உயிர்
ஜன்மம் இத்தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தவரா யினும் ஒன்றே!
சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு
தன்னில் செழித்திடும் வையம்
சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!

பிறக்கும் போதே ஜாதியின் அடையாளத்தை இந்த மனித குலத்திற்குப் பச்சைக் குத்தி அனுப்பியது யார்? பூனைகளுக்கு ஜாதிகள் உண்டா? கூவும் குயிகளுக்கு ஜாதிகள் உண்டா? ஊர்ந்து செல்லும் பாம்புகள், நீந்தும் மீன்கள் யாவும் சாதியின் பெயரால் சணடையிட்டுக் கொள்வதில்லை. காதலில் சாதி, கல்யாணத்தில் சாதி, கடவுளின் கருவறையில் சாதி, குடிநீரில் சாதி, அரசியலில் சாதி, குடும்பம் நடத்த சாதி, சுடுக்காட்டில் சாதி, சுவாசிக்கும் காற்றில்கூட நாளை கலந்துவிடலாம் சாதி. சாதியின் பெயரால் அடுக்கடுக்காய் அரங்கேறுகின்றன ஆணவக் கொலைகள்.

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’

இங்கே மாதரை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்தாமல் சில மூடர்கள் மாதரையே அல்லவா கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள். வரதட்சனைக்கு இரையாகி, ஒருதலைக் காதல் என்கிற சொல்லாடலில் திராவகம் வீசப்பட்டு, குடும்ப வன்முறையில், பாலியல் தாக்குதலில், சமூக கொடுமைகளால் எனக் கட்டுக்கடங்காத வன்கொடுமைத் தீயில் பொசுங்கிக் கொண்டிருக்கிறது பெண் இனம்.

’’முப்பது கோடி முகமுடையாள், உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் - இவள்
செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற்
சிந்தனை ஒன்றுடையாள் .’’

அன்று 30 கோடி இருந்த இந்த தேசத்தின் மக்கள் தொகை இன்று நூறு கோடிக்கும் மேல். மாநிலங்கள் வேறு, மொழிகள் வேறு, கலாசாரம் வேறு எல்லோரும் ஓரே சிந்தனையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?! மாநிலம் விட்டு மாநிலம் தாண்டினால் பல நேரங்களில் உயிருக்கில்லை உத்தரவாதம் இங்கே.

கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
 
கேரளத்து முல்லைப் பெரியாறு, கர்நாடகாவின் காவேரி, ஆந்திராவின் பாலாறு, என நதிகள் யாவும் அணைகளால் வெட்டுண்டு கிடக்க நீர்ப் பரிமாற்றம் கூட சாத்தியம் இல்லாத இந்தத் தேசத்தில் அன்பைப் பரிமாறிக் கொள்வதெல்லாம் எப்போது?

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

எல்லோரும் இவ்வுலகில்  படைக்கப்பட்ட நன்மனிதர்களே.. நல்லெண்ணங்களை விதைக்காமல் தீயதை தன்னுள் விதைத்துக் கொண்டு, மனிதாபிமானத்தைப் புதைத்துக் கொண்டு, புழுதியில் எறிந்த வீணையாய் நல்லிசையைப் புதைத்துக் கொண்டிருக்கிறோம்.

அக்னிக் குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ?

உள்ளிருக்கும் தீயை, நியாயம் கொண்ட ரௌத்திரத்தை, அநீதிக்கு எதிராய்ப் பொங்க இயலாமல் பொசுங்கிக் கிடக்கும் நம் மனசாட்சியை பாரதியின் அக்னிக் குஞ்சாய் நமக்குள் விதை செய்வோம்.

இந்த தேசம் தன்மானத்துடன், சமநிலையுடன் இருக்க தன் ரௌத்திரத்தை எழுதினான் பாரதி. நமக்குள் இருக்கும் சின்னச் சின்னக் கேள்விகளை கொஞ்சம் தட்டிவிட்டி சீர்தூக்கிப் பார்க்கலாமே!

-பொன்.விமலா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement