வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (12/09/2016)

கடைசி தொடர்பு:11:22 (12/09/2016)

நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் அதிரடி சஸ்பெண்ட்!

சென்னை:  தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் பொதுச்செயலாளர் விஷால், துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு காவிரி நீரை பெற்றுத் தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா, எந்த முடிவு எடுத்தாலும், அதற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் உறுதுணையாக இருக்கும் என்றும் சங்கத்தின் தலைவர் நாசரும், பொதுச்செயலாளர் விஷாலும் கூட்டாக அறிவித்தனர்.

காவிரி விவகாரத்தில், முதலமைச்சர் ஜெயலலிதாவை ஒரு பெண் என்றும் பாராமல், முதலமைச்சர் என்றும் பாராமல், அநாகரிகமான முறையில் உருவ பொம்மை எரிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர்களைத் தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் நாசர் தெரிவித்தார்.

மேலும், தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து முன்னாள் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் உள்ளிட்ட 3 பேரையும் தற்காலிகமாக  நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நடிகர் சங்க நிதியில் பல கோடி ரூபாய் வரை முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் மீது இவர்கள் மூவர் மீதும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக நடிகர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு புரிந்திருப்பதாக சரத்குமார் மீது சமீபத்தில் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகாரும் அளிக்கப்பட்டது. அதற்கு, தாம் எந்த தவறும் புரியவில்லை என்றும், இந்த புகார் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் சரத்குமார், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விளக்கமும் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்