'15 நாட்களுக்குப்  பிறகு...!' -அலறும் அரசு மருத்துவமனைகள்

மிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்து கையிருப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ' மருந்து கொள்முதலிலில் நடக்கும் முறைகேடுகளும் எட்டு மாதமாக டெண்டரை உறுதி செய்யாததும்தான் தட்டுப்பாட்டுக்குக் காரணம்" என்கின்றனர் சுகாதாரத்துறை ஊழியர்கள். 

தமிழகம் முழுவதும் 43 மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்த மருத்துவமனைகள், 31 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 239 வட்ட மருத்துவமனைகள்,  1,750 ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள், 8,760 துணை சுகாதர நிலையங்கள், 134 நகர்ப்புற ஆரம்ப சுகாதர நிலையங்கள என 10 ஆயிரம் மருத்துவமனைகள்  செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தினமும் ஐந்து லட்சம் வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர். மாநிலம் முழுவதும் 82 ஆயிரம் பேர் உள் நோயாளிகளாக  அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு 16 லட்சம் அறுவை சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. ஆனால், கடந்த சில மாதங்களாக அரசு மருத்துவமனைகளில், போதிய மருந்து கையிருப்பு இல்லாமல் தத்தளித்து வருகின்றன. ' வெளிக் கடைகளில் மருந்து வாங்கிச் சாப்பிடுமாறு பரிந்துரைக்கிறோம். மருந்து ஸ்டாக் இல்லை என்று சொல்வதையும் மக்கள் நம்ப மறுக்கின்றனர்' என வேதனைப்படுகின்றனர் மருத்துவர்கள். 

என்ன நடக்கிறது தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தில்? 

" மருத்துவப் பணிகள் கழகத்தின் மூலம் 400 வகையான அத்தியாவசிய மருந்துகள், அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வந்தன. இதுதவிர, சிறப்பு சிகிச்சைகளுக்கான 350 மருந்துகளும் அம்மா பிறந்தநாள் பரிசு பெட்டகமும் வழங்கி வருகிறோம். மருந்து கொள்முதல் தொடர்பாக, கடந்த ஜனவரி மாதம் போடப்பட்ட டெண்டர் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. எட்டு மாதங்களாக எந்தவித பர்சேஸும் செய்யப்படவில்லை. அப்படி செய்யப்படாமல் இருப்பதைத்தான் உயர் அதிகாரிகள் விரும்புகின்றனர்" என அதிர வைக்கிறார் அரசு மருத்துவர் ஒருவர். தொடர்ந்து நம்மிடம், 

" மருந்து தட்டுப்பாடு என்பதை செயற்கையாக உருவாக்கிவிட்டார்கள். அரசிடம் ஸ்டாக் இல்லையென்றால், லோக்கல் பர்சேஸ் என்ற அடிப்படையில் அந்தந்த அரசு மருத்துவமனையின் டீன், வெளிச் சந்தையில் இருந்து மருந்து வாங்கிக் கொள்ளலாம். 'லோக்கல் பர்சேஸ்' என்பதையே மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். இதன்மூலம், மருத்துவப் பணிகள் கழகத்தின் மூலம் 2 பைசாவுக்கு வாங்கப்படும் ஒரு மாத்திரையை, லோக்கல் பர்சேஸ் என்ற அடிப்படையில் 2 ரூபாய்க்கு வாங்குகிறார்கள். மருந்து கொள்முதலுக்காக போடப்பட்ட அரசு நிர்ணயித்த டெண்டரின் மதிப்பு 500 கோடி ரூபாய். தற்போது லோக்கல் பர்சேஸ் என்ற வழிமுறை மூலம் ஆயிரம் கோடிகளுக்கும் அதிகமாக, மக்கள் பணம் சூறையாடப்படுகிறது. இவற்றில் கோலோச்சுபவர்கள் அனைவரும், ஆளுங்கட்சி புள்ளிக்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள். 

மருத்துவமனை டீன்களும் இதைக் கண்டுகொள்வதில்லை. அடுத்த 15 நாட்களுக்குப் பிறகு, 'உள்ளூர் கொள்முதல்' என்ற வார்த்தையே நிரந்தரமாக இருக்கும் வகையில் திட்டமிட்டுள்ளனர். அதிக விலைக்குக் கொள்முதல் செய்யப்படும் மருந்துகள், தடையின்றி மக்களுக்கு விநியோகிக்கப்படுமா என்பதும் கேள்விக்குறிதான். அந்த மருந்துகள் மீண்டும் வெளிச்சந்தை விற்பனைக்குச் செல்லவே வாய்ப்பு அதிகம். கண்ணுக்குத் தெரிந்தே மிகப் பெரிய மோசடியை அரங்கேற்றி வருகிறது தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம். இதுகுறித்து அமைச்சர் விஜய பாஸ்கரும் கவலைப்படவில்லை. சுகாதாரத்துறை செயலர் தலையிட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும்" என்கிறார் ஆதங்கத்தோடு. 

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத்திடம் பேசினோம். " அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்து தட்டுப்பாடு இருப்பதும் மிகப் பெரிய அளவில் மோசடிகள் நடப்பதும் உண்மைதான். முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் மருந்துகளை வாங்கச் சொல்கின்றனர். காப்பீட்டுத் திட்டத்தின் பணத்தில் இருந்தே மருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறுது. மருந்துகளை வாங்கும்போது, எந்தக் கம்பெனி அதிக கமிஷன் கொடுக்கிறதோ, அந்தக் கம்பெனிக்கே மருந்து கொள்முதலுக்கான உத்தரவை வழங்குகிறார்கள். 

வெளிச்சந்தையில் மருந்துகளை வாங்குவதை விடவும், அரசே தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். அம்மா மருந்தகம் மூலம் குறைவான விலைக்கு அரசுத் தயாரிப்பு மருந்துகளை விற்றால், மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொள்முதல் செய்யும் மருந்துகளின் விலையைக் கணக்கிடும்போது, ஏராளமான தயாரிப்பு நிறுவனங்களை அரசே உருவாக்கலாம். இதன்மூலம் பல கோடி ரூபாய்களை மிச்சப்படுத்தலாம். இதற்கான பணிகளில் அரசு இறங்க வேண்டும். மருந்து தட்டுப்பாட்டை நீக்குவதற்கு போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்றார் நிதானமாக. 

-ஆ.விஜயானந்த்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!