வெளியிடப்பட்ட நேரம்: 14:57 (14/09/2016)

கடைசி தொடர்பு:14:56 (14/09/2016)

காதலிக்காக 'களவாணி'யான காதலன்! (அதிர்ச்சி வீடியோ)

காதலிக்காக தாஜ்மஹால் கட்டியது எல்லாம் அந்தக்காலம். இன்றைய கலியுகத்துக்கு ஏற்ப காதலிக்காக இருசக்கர வாகனத்தை திருடியிருக்கிறார் இந்த விநோத காதலன். பனையூரில் ஒரு பைக்கை திருடும் போது அந்த நிகழ்வு சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியும் அதைக் கானத்தூர் போலீஸார் கண்டுக்கொள்ளவில்லை என்பதுதான் வினோதம்.

பனையூர் கிழக்கு கடற்கரை சாலையில் டீ கடை நடத்தி வருபவர் அபுதாகிர். இவர் வழக்கமாக கடையின் முன்னால் தன்னுடைய பைக்கை நிறுத்தி விட்டு இரவில் கடைக்குள் தூங்குவது வழக்கம். அதுபோல சில தினங்களுக்கு முன்பு கடைக்குள் தூங்கிய அவர், காலையில் பார்த்த போது இருசக்கர வாகனம் திருட்டு போனது தெரியவந்தது. இதனால் அவர், இருசக்கர வாகனத்தை பல இடங்களில் தேடினார். இதுகுறித்து கானத்தூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். போலீஸார், வழக்கம் போல புகாரை வாங்கி கொண்டு விசாரிப்பதாக கூறி அபுதாகிரை அனுப்பி வைத்தனர்.

போலீசை நம்பாமல் இருசக்கர வாகனத்தை தேடி அபுதாகிர் கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் அலைந்தார். அப்போது அக்கரை செக் போஸ்ட், ராஜீவ்காந்தி நகர், கிழக்கு கடற்கரை சாலையில் தனது இருசக்கர வாகனம் அனாதையாக நிற்பதை அவர் பார்த்துள்ளார். சந்தோஷத்தில் துள்ளி குதித்த அவர், இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கானத்தூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு இருந்த போலீஸாரிடம் விவரத்தைச் சொல்ல, போலீஸாரும் நிம்மதியடைந்தனர். அடுத்து, மேல் நடவடிக்கை வேண்டாம் என்று அபுதாகிரிடம் எழுதி வாங்கிய போலீஸார் அந்த வழக்கை முடித்து வைத்தனர்.

முன்னதாக அபுதாகிர் இருசக்கர வாகனம் திருடப்பட்டதும், அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆராய்ந்த போது நள்ளிரவில் ஒரு வாலிபர் அவ்வழியாக வருவதும், பிறகு இருசக்கர வாகனத்தின் லாக்கை உடைத்து விட்டு பிறகு சர்வசாதாரணமாக இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு செல்வதும் போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர், கிழக்கு கடற்கரை சாலையை சேர்ந்தவர் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் ஏனோ கண்டுக்கொள்ளவில்லை.

 

 

இதுகுறித்து பேசிய அந்த பகுதியை சேர்ந்த ஒருவர், "இருசக்கர வாகனத்தை திருடியவர் குறித்த விவரத்தை போலீஸிடம் சொல்லியும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து அந்த நபர் குறித்த விசாரித்தால், இருசக்கர வாகனம் திருடுவது அவருக்கு தொழில் அல்ல. காதலிக்கு பிடிக்கும் இருசக்கர வாகனத்தை திருடி அவருக்கு பரிசாக கொடுப்பதை அந்த வாலிபர் வாடிக்கையாக வைத்துள்ளார் என்ற தகவல் தெரிந்தது. திருடச் செல்லும் இடத்தில் லேடிஸ் ஓட்டும் இருசக்கர வாகனம் கிடைக்கவில்லை என்றால் ஜென்ஸ் ஓட்டும் இருசக்கர வாகனத்தை திருடி அதை விற்றும் அந்த பணத்தில் காதலிக்கு பார்ட்டியும் கொடுப்பாராம். கானத்தூர் போலீஸ் எல்லைக்குள் மட்டும் கடந்த சில மாதங்களில் 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளன. ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது வேதனையாக இருக்கிறது" என்றார். 

எஸ்.மகேஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்