Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சிறை' ஜெயலலிதா, ஜோக்கர் க்ளைமாக்ஸ், காவிரிக்கு காரணம் காமராஜர் ! - விளாசும் டிராஃபிக் ராமசாமி

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த விழா ஒன்றில் சார்க் நாடுகளுக்கான சர்வதேச பொருளாதாரப் பல்கலைகழகம் சார்பாக டிராஃபிக் ராமசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. மதுரையில் சமீபகாலமாக ஷேர் ஆட்டோக்களை எதிர்ப்பது, பேனர்களை அகற்றுவது என்று பிஸியாக இருந்தவரை... இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

''டாக்டர் பட்டம் கிடைத்தது பற்றி எப்படி உணர்கிறீர்கள்?''

''எனக்கு இந்த அமைப்பைப் பற்றி இப்போது வரை ஒன்றும் தெரியாது, மூன்று நாட்களுக்கு முன்பு என்னை இமெயில் மூலம் தொடர்புகொண்டு டாக்டர் பட்டம் கொடுக்க உள்ளதாகவும், ஏற்றுக்கொள்ள விருப்பம் உள்ளதா எனவும் கேட்டனர். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பின்பு, மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன்.''

''சமீபகாலமாக மதுரையில் உங்களின் சமூகப் போராட்டங்கள் பிரபலமடைந்துள்ளன. இந்தத் திடீர் மதுரை பிரவேசத்தின் காரணம் என்ன?''

''சில வழக்கு விஷயமாக மதுரை உயர் நீதிமன்ற கிளைக்குச் சமீபகாலமாக வர வேண்டியிருந்தது. அப்போது, மதுரையில் நடந்த சட்ட விதிமீறல்களைக் காண நேர்ந்தது. அதை எதிர்க்க ஆரம்பித்தேன். நான் எந்த ஊர் சென்றாலும் அங்கு ஒரு தவறு நடக்கிறதென்றால் அதை எதிர்ப்பேன், இதுவே என் கொள்கை.''

 

''மதுரையில் நீங்கள் பெரிதும் எதிர்த்த ஷேர் ஆட்டோக்கள் பற்றி?''

இது முழுக்க முழுக்க RTO துணையுடன்  நடக்கும் திருட்டுத்தனம். இந்த ஆட்டோ, 3 பயணிகளை மட்டுமே ஏற்ற பர்மிட் அளிக்கப்பட்டுள்ள ஒன்று, இதில், பட்டப்பகலில் 10 பேரை ஏற்றிச் செல்கின்றனர். பயணிகள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை, சாலைப் போக்குவரத்தும் ஷேர் ஆட்டோக்களால் பெரிதும் பாதிப்படைகின்றன. காவல் துறையினர்  அபராதம் விதித்தும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்ந்து சட்டத்தை மீறுவதாகச் சமாதானம் கூறுகின்றனர்.இதில் பெரும்தொகை RTO மூலம் மந்திரிகளுக்குச் செல்கிறது.இது தொடர்பாக நான் போட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. அதனை விசாரித்த நீதிபதி ஷேர் ஆட்டோக்களின் பர்மிட்களை ரத்து செய்தால் என்ன என்ற கேள்வி எழுப்பியுள்ளார். தீர்ப்பு விரைவில் வரும்.''

''காவிரிப் பிரச்னை பற்றி?''

''காவிரிப் பிரச்னை ஒரு பிரச்னையே அல்ல. 1954-ல் காமராஜர் காலத்தில் மொழிவாரி மகாணமாக பிரித்ததால் வந்த விளைவுதான் இது.''

''இதைப் பிரச்னை இல்லை என்று எப்படிக் கூறமுடியும்? துணை ராணுவம் வரவழைக்கப்பட்டு, துப்பாக்கிச் சூடு நடக்கும் அளவுக்குப் பிரச்னை தீவிரமாக உள்ளதே?''

இதற்குக் காரணம் தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை. இங்கு சரியான தலைமையும் இல்லை. அவரவர்கள் தன்னைத்தானே தலைவன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அங்கே கன்னடர்கள் ஒற்றுமையாக உள்ளனர். அந்த ஒற்றுமைக்கு அங்குள்ள ரவுடிகள் பயப்படுகின்றனர். மாற்றுப் பயிர்களைப் பற்றி நாம் பரிசீலிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் போதிய அணைக்கட்டுகள் இல்லை. ஆனால் நம் அண்டை மாநிலத்தவர்கள் அணைகள் கட்டுவதில் முனைப்புக் காட்டி தண்ணீரைச் சேமிக்கின்றனர். இந்தக் குறைகளைச் சீர் செய்வதே இதற்கான சரியான தீர்வாகும்.''

''கர்நாடக முதலமைச்சர் தமிழக வாழ் கன்னடர்களின் பாதுகாப்புக் கோரி கடிதம் எழுதியுள்ளாரே? அதைப் பற்றி உங்கள் அபிப்பிராயம்?''

''ஜெயலலிதாவும்தான் கடிதம் எழுதுகிறார். பிரச்னையை அமர்ந்து பேசி தீர்வுகாணுவதை விட்டுவிட்டுக் கடிதங்கள் எழுதுவது பயனற்றது. அரசியல்வாதிகள் எழுதும் இந்தக் கடிதங்கள் குப்பைக்குத்தான் போகும், மக்கள் இவர்களிடம் கொடுக்கும் மனுக்களைப்போல.''

 

''ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு எந்தவகையில் இருக்கும் என்று எதிர்பார்கிறீர்கள்?''

''ஜெயலலிதா சிறை செல்வதைத் தடுக்க முடியாது. நீதிபதிகளை இவர்கள் விலைக்கு வாங்கலாம். ஆனால், நீதியை விலைக்கு வாங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாது. வருமானத்துக்கு மேல் சொத்துச் சேர்ப்பது எப்படிச் சரியாகும்? அது, ரூ.10 கோடியாக இருந்தாலும் சரி... 1 ரூபாயாக இருந்தாலும் சரி, சொத்தாகத்தான் கருதவேண்டும். இந்த வழக்கை சாதாரண சொத்துக் குவிப்பு வழக்காக மட்டுமே பார்க்க வேண்டும். அரசியல் வழக்காக அணுகக் கூடாது. ஆனால் இதன் தீர்ப்பு ஓர் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்.''

'' 'ஜோக்கர்' படம் பார்த்தீர்களா... அதுபற்றி?''

''முதல் பாதி முழுவதும் என் கருத்துகளைப் பிரதிபலிப்பதுபோல் உள்ளது. ஆனால், படத்தின் முடிவில் எனக்கு உடன்பாடில்லை. இதை நான் ராஜுமுருகனிடமே அலைபேசியில் கூறினேன். சமூகசேவை செய்யும் கதாநாயகன் இறப்பதுபோல் காட்டுவது மக்களிடையே சமூகசேவையில் இறங்க ஓர் அச்சத்தை உருவாக்கும். நான் பல அரசியல்வாதிகளை எதிர்க்கிறேன். இன்னும் நான் இறக்கவில்லையே? தனிமனிதக் கொள்கையுடைய யாரும் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை.''

- க.விக்னேஷ்வரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement