Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீக்குளிப்புகள் தொடர்கின்றன, தீர்வுகள்?

தீயை எதிர்ப்பின் அடையாளமாக்கித் தன் உடலைக் கொளுத்திக்கொள்வது என்பது தமிழக மக்களின் போராட்ட வரலாற்றில் அழிக்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது. நிகழ்ந்துகொண்டிருக்கும் காவிரி நதிநீர் பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, கர்நாடகாவின் இனச் செயல்பாட்டு அமைப்புகள் சில... அங்குள்ள தமிழர்களுக்கு எதிராக வன்முறையில் களமிறங்கின. தமிழகப் பேருந்துகள் தீக்கிறையாக்கப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டார்கள். தமிழகத்தில், இன அமைப்புகள் சில போராட்டம், வன்முறை எனக் களமிறங்கின. மாநில எல்லையில் விரிசல் அதிகரித்தபடி இருந்தது. இந்த நிலையில் நதிநீர் பிரச்னைக்கு எதிராக நேற்று சென்னையில் நாம் தமிழர் கட்சி நடத்திய போராட்டத்தில் அந்தக் கட்சியின், ‘இளம்புலிகள்’ எனப்படும் மாணவர் அமைப்பைச் சேர்ந்த விக்னேஷ் பாண்டியன் தீக்குளித்துள்ளார். யார் இந்த விக்னேஷ் பாண்டியன்? அவரது முகநூல் பக்கத்தில் லைன் இன்ஸ்பெக்டராக டி.ஐ.டி.சி. நிறுவனத்தில் வேலை செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார். நிறுவனத்தைத் தொடர்புகொண்டால் அப்படி யாரும் தங்களிடம் பணி புரியவில்லை எனக் கைவிரிக்கிறது. விக்னேஷ் பாண்டியனின் பதிவுகளில் ஒன்று இப்படி இருக்கிறது..

விக்னேஷ் பாண்டியனின் முகநூல் பதிவு!

‘‘ ‘கட்சி உனக்கு என்ன செய்யப்போகிறது’ என்று அப்பா சொல்ல...
‘வேலைக்கே போகமாட்டியா’ என்று அம்மா திட்ட...
‘உன்கிட்ட காசு இல்லை’ என்று காதலி வெறுக்க...
‘இவனுடன் போனால் கட்சி, கொள்கை என்று பேசுகிறான்’ என்று நண்பர்கள் விலக...
போட்டுக்க இரண்டு சட்டைகளும் (அதுவும் கறுப்புச் சட்டை) இரண்டு பேன்ட்களும் மட்டும் இருக்க, மாற்று உடைக்கே வழி இல்லாமல் இருக்க...
தொலைபேசியில் பேசப் பணம் இல்லை...
வண்டிக்கு எரிபொருள் போட பணம் இல்லை...
பசித்தால் சாப்பிடக்கூடப் பணம் இல்லை, அதனால் பட்டினியாகவே இருக்க...
‘இவ்வளவு பிரச்னை இருந்தும் இவனுடைய திமிரு அடங்க மாட்டேங்குது’ என்று பக்கத்து வீட்டுக்காரன் நினைக்க...
‘எவ்வளவு பிரச்னை இருந்தாலும் பரவாயில்லை நமது கொள்கையும் லட்சியமும்தான் முக்கியம்’ என்று இருப்பவன்தான்டா நாம் தமிழர் கட்சியின் இளம்புலிகள்...’’

தீக்குளிப்பதற்கு முந்தையநாள்கூட தனது அதே முகநூல் பக்கத்தில், ‘‘காவிரி நீருக்காக நாம் தமிழர் கட்சியின் போராட்டத்தில் சில தற்கொலை (கொடை) நடைபெறும்’’ என செய்தி வெளியிட்டுருக்கிறார்.
இவர் செய்தது அனைத்தும் பிரச்னைக்கா... கட்சிக்கா என்கிற தெளிவற்ற கேள்வி எழுகிறது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானோ, ‘‘கட்சி இதுபோன்ற செய்கைகளை ஊக்குவிப்பதில்லை’’ எனக் கூறியுள்ளார். ஆனால், முதல்நாளே இடப்பட்ட எச்சரிக்கை பதிவை, கட்சியைச் சேர்ந்த ஒருவர்கூடவா பார்க்கவில்லை?

இதுவரை இறந்தவர்கள்!

விக்னேஷ் போராட்டத்தில் பங்கேற்பதைத் தடுத்து நிறுத்தி இருந்தாலே, சம்பவத்தை குறைந்தபட்சம் நிகழாமல்கூடத் தடுத்திருக்க முடியுமே என்கிற கேள்வி எழுகிறது. ஆனால், தமிழகத்தில் தீக்குளிப்புகள் இன்று, நேற்று நடப்பது அல்ல. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலைக்காக 2011-ல் காஞ்சிபுரத்தில் நடந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் தீக்குளித்து இறந்த செங்கொடி, அதற்கு முன்பு 2009-ல் ஈழத்தமிழர் பிரச்னைக்காக சென்னையில் சாஸ்திரி பவன் முன்பாக தீக்குளித்த பத்திரிகையாளர் முத்துக்குமார், அவரைத் தொடர்ந்து அதே ஈழத்தமிழர் பிரச்னைகாகவும் முத்துக்குமாருக்கு ஆதரவாகவும் தீக்குளித்த தமிழர்கள் பதினேழு பேர் எனத் தமிழக மக்களின் வரலாறு, பிழம்புகளின் படிமங்களாகத்தான் உருவாகி இருக்கிறது.

செங்கொடி இறந்ததன் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் அவரது சொந்த ஊரில்  மக்கள் மன்றத்தால் அனுசரிக்கப்பட்டது. ஆனால், அவர் இறப்புக்குப் பின் ஏழு பேர் விடுதலையில், எந்த மாதிரியான நகர்வுகள் இருந்தன... அவரின் இறப்பு, தாக்கத்தை ஏற்படுத்தியதா?

‘‘தீக்குளிப்பை நியாயப்படுத்தவில்லை!’’

மக்கள் மன்றத்தின் செயற்பாட்டாளர் கீதா சாருசிவம் கூறுகையில், ‘‘செங்கொடியின் இறப்புக்குப் பிறகுதான் இங்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேர்ந்து, அதில் மூன்று பேருக்கான தூக்குத்தண்டனைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். உயர் நீதிமன்றமும் தூக்குத்தண்டனைக்குத் தடை விதித்தது. அவர், இறப்புக்குப்பின்தான் இவ்வளவும் நிகழ்ந்தது. செங்கொடி இறந்த சிலகாலங்களிலேயே அவரது தாய் இறந்துவிட்டாலும் அவரது தந்தையும், சகோதரியும் மக்கள் மன்றத்தின் செயல்பாடுகளில் தொடர்ந்து பங்கேற்றபடி இருக்கின்றனர். 10 வயதில் மக்கள் மன்றத்தின் செயல்பாடுகளில் இணைந்து இருந்த செங்கொடி, 11 ஆண்டுகள் அந்த மன்றத்தில்தான் இருந்தார். நாங்கள் பார்த்து எங்களுடன் வளர்ந்தவர். அவரால் எழுவர் விடுதலையில் மாற்றம் ஏற்பட்டதை நாங்கள் வரவேற்றாலும், தீக்குளிப்பு, பட்டினிப் போராட்டம் போன்றவற்றை என்றுமே நாங்கள் நியாயப்படுத்தவில்லை’’ என்றார்.

முத்துக்குமாரின் இன்றைய நிலை!

முத்துக்குமார் இறந்து எட்டாண்டுகள் கடந்துவிட்டன.  ஆனால், போர் பற்றிய பேச்சு எங்கெல்லாம் எழுகிறதோ... அங்கெல்லாம் முத்துக்குமாரின் இறப்பும் பேசப்படுகிறது.   இறந்த முத்துக்குமாரின் வீட்டில் இன்றைய நிலை என்ன? அவரது அப்பா சென்னை கொளத்தூரில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஆனால், முத்துக்குமார் இருந்திருக்கக்கூடிய இடம் இன்றளவும் அவர்கள் வீட்டில் வெற்றிடமாகத்தான் இருக்கிறது.

செங்கொடி, முத்துக்குமார் போன்றவர்களின் இறப்பு தொடர்புடைய பிரச்னையில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அதற்கான முழுத்தீர்வை இன்றுவரை எட்டமுடியவில்லை. அவர்களது இறப்பை தியாகம் என வரையறுத்தாலும் பல அரசியல் கட்சிகளும் அதன் செயல்பாடுகளும் தலையீடுகளும் கருத்து முரண்பாடுகளும்தான் அந்தத் தியாகத்துக்கு முன்பாக வரிசைகட்டி நிற்கின்றன. காவிரி நதிநீர் பிரச்னையில் விக்னேஷ் பாண்டியனின் தீக்குளிப்பு இனிவரும் காலங்களில் பல அரசியல் மேடைகளில் பேசப்படும். ஆனால், நதிநீருக்கான தீர்வு கிடைத்துவிடுமா?

தீக்குளிப்புகள் தொடர்கின்றன, தீர்வுகள்?

- ஐஷ்வர்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement