Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை டூ திண்டிவனம்... அதிகரிக்கும் விபத்துகள்... இது தான் காரணமா...?

சென்னையில் பல்லாவரம் - தாம்பரத்தில் தொடங்கி, திண்டிவனம் வரையில் அகல நெடுஞ்சாலை அந்தஸ்து ஜி.எஸ்.டி. சாலைக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பணத்தைப் பிரதானமாக்கி அதே அகலச் சாலையைப் பல்வேறு தரப்பும் சுருக்கிவிட்டதால், தமிழகத்தில் நடக்கும் பிரமாண்ட விபத்துகளில் ஜி.எஸ்.டி. சாலை தவறாமல் இடம்பிடித்துவிடுகிறது.

வாரச்சந்தை!

‘ஏன் இத்தனை விபத்துகள் இங்கு மட்டும்?’ என்ற கேள்விக்கு விடைதர அதிகாரிகள் யாரும் முன்வருவதில்லை. தமிழகத்தில் எந்தப் பகுதிக்கும் சென்றுவிடக்கூடிய தாம்பரம் பேருந்து முனையம், ரயில் நிலையம் மற்றும் பன்னாட்டு விமான நிலையம்... என்று நாட்டின் மிக முக்கியப் பகுதியாகக் காணப்படுகிறது, ஜி.எஸ்.டி. சாலை.


தாம்பரத்தை அடுத்த பல்லாவரம் வாரச் சந்தையும் இங்கு நடக்கும் விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள். 148 ஆண்டுகளாகத் தொய்வின்றி இந்த வாரச்சந்தை கூடும்போது, இந்தியாவின் பல மாநில வணிகர்களின் வர்த்தகம் இங்கே களைகட்டும்.

‘அண்மைக் காலமாகவே இந்தச் சந்தைப் பகுதியிலும், அதன் சுற்றுப்பகுதிகளிலும் தொடர் விபத்துகள் நடந்து வருகின்றன. இதற்கு என்ன காரணம்?’ தாம்பரம் பகுதியில் விசாரித்தால், “வாரச்சந்தை கூடும் இடம் எங்களுடையது என்று ராணுவ கன்டோன்மென்ட் போர்டு பாதி இடத்தை கையகப்படுத்திக்கொண்டுவிட்டார்கள்.
சந்தை கூடும் இடம் சுருங்கிப்போனதால் வணிகர்கள் பாதிக்கப்பட்டனர்.

தங்களுக்கான இடத்தை ராணுவத்திடம் கொடுத்துவிட்டதால் உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் போலீஸ் உதவியை நாட ஆரம்பித்தனர். அவர்களும் தங்களுக்குத் ‘தேவையானதை’ வாங்கிக்கொண்டு சந்தையை, வாகனங்கள் சீறிப்பாயும் வீதிக்குக் கொண்டுவர வழிவிட்டனர். அடிக்கடி நடக்கும் விபத்துகளுக்கு இதுவும் ஒரு காரணம்” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

‘‘விபத்துகள் சாதாரணமாக நடக்கின்றன!’’


“ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கூடும் இந்த வாரச்சந்தையில்... பொருட்களை விற்கவும், வாங்கவும் வருகிறவர்கள் மட்டுமே குறைந்தபட்சம் ஒரு லட்சம் பேர் இருப்பார்கள். ஆனால், இவ்வளவு காலம் அவர்கள் சந்தைக்கான இடத்தில் இருந்து வணிகத்தைக் கவனித்தார்கள். இப்போது, அவர்கள் வாகனங்கள் செல்லும் மேம்பாலத்தில் கடையை விரித்துவிட்டார்கள்.

அவர்களிடம் ‘டோல் வரி’ வசூல் செய்ய மட்டுமே 25 பேர் சுற்றுவார்கள். கடை விரிக்க தனி வாடகை, அதை வசூலிக்கவும் அதேபோல் ஒரு டீம் வரும். இதனால் விபத்துகள் என்பது மிகவும் சாதாரணமாக நடந்துவிடுகின்றன’’ என்கின்றனர் தாம்பரம் பகுதி மக்கள்.

‘சந்தை கூடும் மேம்பாலத்தை செல்போனில் படம் பிடித்தபோதுதான் பொதுமக்களின் எச்சரிக்கையை உணரமுடிந்தது. குழந்தையோடு டூ-வீலரில் வந்த தம்பதியர், பல்லாவரம் பஸ்ஸ்டாண்ட் பக்கத்தில் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்த ஏ.டி.எம்-மில் 100 ரூபாய் பணம் எடுத்துக்கொண்டு திரும்பியபோது, ‘இது நோ- பார்க்கிங்’ என்று அங்கிருந்த, ஒரு போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர், குழந்தையின் மருத்துவத்துக்கு ஏ.டி.எம்-மில் எடுத்த 100 ரூபாயை அபராதமாக வாங்கிவிட்டார்.

‘நீங்கதான்யா, நியாயம் சொல்லணும்’ என்று அவருக்கு மேலதிகாரியிடம் போய் நியாயமும் கேட்க முடியாது. அவரும் இதே ஸ்டைலில், ‘கறார்’ உத்தியோகம் பார்ப்பவர் என்பதால், அந்த தம்பதியர் அவர்களைச் சாபம் விட்டபடி அங்கிருந்து கிளம்பிப்போனார்கள். இதுபோன மாதத்தில் நடந்தது. ‘‘இப்படிப் பல காட்சிகளை ஜி.எஸ்.டி. சாலையில் அன்றாடம் பார்க்கலாம்’’ என்கின்றனர் நடைபாதை வியாபாரிகள்.

‘நோ-பார்க்கிங்’ விதிகளில் சிக்குவதில்லை!


தாம்பரம் தொகுதி மாஜி எம்.எல்.ஏ-வின் கம்பெனியின் ‘கேட்’ வாசலின் முன்னால் யார் வண்டிகளை பார்க்கிங் செய்தாலும் அது நோ-பார்க்கிங் லிஸ்ட்டில் வந்து அபராதத்தில் சிக்கிக்கொள்ளும். அந்த வேலையை போலீஸார் சரியாகக் கவனிப்பார்கள். அதே வேளையில், பஸ்ஸ்டாண்ட் உள்ளேயே வந்து பார்க்கிங் ஆகி நிற்கும் வண்டிகளைப் பற்றி போக்குவரத்துப் போலீஸார் கண்டுகொள்வதில்லை. அதேபோல் பிரியாணி ஹோட்டல்களுக்கு வரும் வாகனங்களும் ‘நோ-பார்க்கிங்’ விதிகளில் சிக்குவதில்லை. இந்த வாகன ஓட்டிகள் பத்திரமாக அந்த ஹோட்டல்களில் இருந்து வெளியே போகும்வரையில் போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்படுமாம்.

போலீஸாரின் வசூல் வேட்டை!


பல்லாவரம் பகுதி டாக்சி - ஆட்டோ தொழிற்சங்க (சி.ஐ.டி.யு) தலைவர் எல்.காந்தியிடம் பேசியபோது, ‘‘பழைய இங்கிலீஷ் எலெக்ட்ரிகல் கம்பெனிப் பக்கம் போய்ப் பாருங்க. டிரெய்னிங் காலத்துல ஓடாத ஓட்டத்தை எல்லாம் அங்கே நம்ம போக்குவரத்துப் போலீஸார் ஓடிக் காட்டிக்கிட்டுக்கு இருப்பாங்க. அது நான்கு வழிப்பாதை. அதில், ஒரு பாதை ஆந்திராவுக்குப் போகும். ‘பல்லாவரம் ஹைவேயில் இவர்கள் (போலீஸ்) நிற்பார்கள்’ என்று நான்கு வழிப்பாதை அமைந்திருக்கும் இந்த இங்கிலீஷ் எலெக்ட்ரிக்கல் கம்பெனி பக்கமா அவங்க லாரியைத் திருப்புவாங்க. நம்ம போலீஸ் அவங்களுக்கு முன்னால அந்த டர்னிங்க்ல போய் நின்று அவர்களை விரட்டிப்பிடித்து வசூலை முடித்துவிடுவார்கள்.

டூ-வீலரில் வருகிறவர்களையும் அப்படித்தான் ஹேண்டில் செய்வார்கள். முதலில் லைசென்ஸ் கேட்பார்கள். அதைக் கொடுத்தால், ஆர்.சி புக் கேட்பார்கள். அதையும் கொடுத்தால்... அடுத்து, அவர்கள் கேட்பது... ‘‘குடித்திருக்கிறாயா? வாயை ஊது’’ என்பதுதான். ஆக எத்தனை வழி உள்ளதோ, அத்தனையையும் கையாண்டு வசூலுக்கு ரூட் போடுவார்கள்.

அப்படியும் ஆள் சிக்கவில்லை என்றால், கடைசியாக ‘‘டூம்-லைட்டில் கறுப்பு ஸ்டிக்கர் ஏன் ஒட்டலை?’’ என்று மடக்கி கறந்துவிடுவார்கள். பல்லாவரத்தில் தொடங்கி, ஜமீன் பல்லாவரம், தாம்பரம், மீனம்பாக்கம் என்று அத்தனை ஏரியாவின் போக்குவரத்துப் போலீஸாரும் இந்த மாதியான வசூல் வேட்டையில்தான் இருக்கிறார்கள்’’ என்றார்.

தாம்பரம், பல்லாவரம், மீனம்பாக்கம் உள்ளிட்ட சென்னையில் தொடங்கி காஞ்சிபுரம் வரையில் நீளும் ஏழு காவல் நிலையங்களுக்கு மொத்த அதிகாரியாக இருப்பவர், போக்குவரத்து உதவி கமிஷனர் எஸ்.கோபால். அவரிடம், அந்தப் பகுதி போக்குவரத்து, வசூலில் கொடிகட்டி பறக்கும் சில எஸ்.ஐ-கள், இன்ஸ்பெக்டர்கள் குறித்து பொதுமக்கள் தந்த விவரங்களைச் சொன்னோம்.

அத்தனையையும், பொறுமையாகக் கேட்டுக்கொண்ட அவர், “எனக்கு ஏர்போர்ட் ஏரியாவில் மிக முக்கியமான மீட்டிங் இருக்கிறது. முடித்துவிட்டு வந்து உங்களிடம் பேசுகிறேன்” என்று முடித்துக்கொண்டார். அதன்பின்னர் அவரை லைனில் பிடிக்க முடியவில்லை.

‘‘டோல் வரிவசூல் ஆசாமி ஒருவர் காட்டிய கெடுபிடியில், டூ-வீலரில் வந்த ஒரு (ஜனவரி -2016) குடும்பமே மினி லாரியில் அடிபட்டு இதே மேம்பாலத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. அதில், அந்த வரி வசூலிப்பவரும் இறந்தார். அந்தச் சூடு ஆறும்வரையில்தான் போலீஸ், ‘டோல் வரி’ ஆட்களை அங்கே அனுமதிக்கவில்லை. மீண்டும் அதே கெடுபிடி வரிவசூல் நடக்க ஆரம்பித்துவிட்டது” என்கின்றனர் ஏரியாவாசிகள்.

அதேபோல் வேண்டப்பட்ட வணிக வளாகம், நிறுவனம் உள்ள இடங்களிலோ, ஏ.டி.எம்., அரசு வங்கிகளின் முன்போ டூ-வீலரை யாராவது பார்க்கிங் செய்தால்... அடுத்த இரண்டாவது நிமிடமே அவற்றின் காற்றைப் பிடுங்கிவிட்டுவிடும் வேலையை போலீஸ் டீம் செய்துவிடுகிறது. இதற்காகச் சிறப்பாக காற்றுப்பிடுங்கும் சில ஆட்களைக் கையில் வைத்துக்கொண்டு அவர்களுக்குக் கணிசமான ஒரு தொகையையும் கொடுத்துவிடுகின்றனர்.


டூ-வீலரில் இருந்து பறந்துபோன காற்றைத்தேடிப் பரிதாபமாக நிற்கும் நபர்கள் உரிய ‘நோ-பார்க்கிங்’ அபராதத்தைச் செலுத்திய பிறகு, வண்டியில் காற்று ஏற்றிவிட ஆட்கள் தயாராக அங்கேயே இருப்பார்கள். மேலோட்டமாக இதைப் பார்த்தால் மிகவும் சாதாரணமாகத் தெரியலாம். அந்தப் பகுதியில் மணிக்கு 20 டூ-வீலர் ஓட்டிகள் ‘காற்றின்றி’ தவிப்பதை நேரில் பார்த்தால் அதன் வலி நிச்சயம் புரியும். இவர்களின் பணியை நம்பி இதே பகுதியில் டூ-வீலர் பஞ்சர் ஒட்டும் வேலைக்கான தெருவோரக் கடைகளும் பெருகிவிட்டன.

சாலை விபத்துகள்!

2015-ல் மட்டும் தமிழகத்தில் 69,059 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளன. அதாவது, இந்தியாவில் நடந்த மொத்த சாலை விபத்துகளில் (2015) 14 சதவிகிதம் தமிழகத்தில் நடந்துள்ளன. மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரப்படி, உத்தரப் பிரதேசம் (17,666 பலி) முதலிடத்தில் இருக்கிறது.

2015-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்தில் 15,642 பேரை பலிகொடுத்து இந்தியாவில் இரண்டாமிடத்தைத் தமிழகம் பிடித்திருக்கிறது. 2015-ல் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 1,300 பேர் வீதம் தமிழகத்தில் சாலை விபத்துகளில் பலியாகியிருக்கின்றனர்.

இது மட்டுமல்ல, சாலை விபத்துகளில் காயமடைந்தவர்கள் எண்ணிக்கையிலும் தமிழகமே முதலிடத்தில் இருக்கிறது. இருசக்கர வாகனங்கள், கார்கள், ஜீப் போன்ற வாகனங்கள் அதிக அளவில் விபத்துக்குள்ளாகி இருக்கின்றன.


தலைநகர் சென்னையில்தான் அதிக அளவு விபத்துகள் நடந்துள்ளன. 2015-ம் ஆண்டு மட்டும் சென்னையில் சாலை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 886. இதற்கு அடுத்தபடியாக கோவையில் 238, திருச்சியில் 156 பேர் சாலை விபத்துகளில் பலியாகியிருக்கின்றனர்.

தாம்பரம், பல்லாவரம் தொட்டு திண்டிவனம்வரை போகும் ஜி.எஸ்.டி. சாலையில் மனசாட்சியுடன் அதிகாரிகள் பயணம் செய்து பார்த்தால் பலநூறு மனித உயிர்கள் ஆண்டுதோறும் காப்பாற்றப்படும்.

ந.பா.சேதுராமன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement