Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறை வைக்கப்பட்டதா மத்திய புழல் 'சிறை' மர்மங்கள் ?


மிகவும் பிரமாண்டமாக கட்டப் பட்டிருக்கும் சிறைச் சாலைகளில் சென்னை மத்திய புழல் சிறைக்கு தனி இடம் உண்டு. 300-க்கு குறையாத தண்டனை  கைதிகள், 2003 விசாரணை கைதிகள், 150 பெண் கைதிகள் மூன்று விதமான கைதிகளுக்கும் தனித்தனியான சிறைகள் என அமைந்துள்ளது இந்த சிறை.


டெல்லியின் திகார் சிறைச் சாலைக்கு இணையான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதாக சொல்லிக் கொண்டாலும், சென்னை புழலில் அமைந்திருக்கும் மத்திய சிறைச் சாலையில், உயிர்பலி காட்சிகள் சாதாரணமான ஒன்றுதான்.


 சிறைக் கலவர பலி என்பது கண் முன்னால் அப்பட்டமாகத் தெரியும்... ஆனால், 'மேலூர் கைதி வயிற்று வலி காரணமாக  சிகிச்சை பெற்று வந்த நிலையில் சென்னை அரசு ராயப் பேட்டை மருத்துவமனையில் இறந்தார்' என்று ஒரு தகவல் சாதாரணமாக வரும்.


அதேபோல  'வயிற்றுவலி காரணமாக, புழல்சிறைக் கைதி தூக்குப் போட்டுத் தற்கொலை' என்றும்  மிகவும் சாதாரணமாக  அடுத்த தகவலைக் கொடுப்பார்கள்.  இப்படி சாதாரணமாக, அடுத்தடுத்து வருகிற கைதிகளின் இறப்பு எண்ணிக்கை மிகவும் அதிகம்.


 புழல் மத்திய சிறைக் கைதிகளுக்காக, வாரத்தில் ஒரு நாள் நான் -வெஜ், பிற நாட்கள் சுத்த சைவம் என்று உணவு வகைகளும், பால், கடலை மிட்டாய், சுண்டல், தேநீர் போன்ற 'இடைச் செருகல்' உணவுகளும் கொடுக்கப் படுவதாக சொல்கிறார்கள்.

 
கைதிகளின் மனதை ஒரு நிலைப் படுத்த, உடல் ஆரோக்கியம் காக்க தியானப் பயிற்சி,  உடற்பயிற்சி வகுப்புகள், மாலை வேளைகளில் கேரம் ஃபோர்டு முதல் பலதரப்பட்ட விளையாட்டுப் பயிற்சிகள்,  இப்படி அவரவர் தகுதிக்கேற்ப கைத் தொழில்கள் செய்ய, பழக வாய்ப்பு கொடுக்கப் படுவதாகச் சொல்கிறார்கள்.


  சிறையில் எல்லாமே  சிறப்பாகத்தான் செயல்படுகிறது என்று சொன்னாலும், அதில் உண்மை என்பது கொஞ்சம்தான் என்பதை நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் உணர்த்தி விடுகின்றன.


 சிறைக் கலவரக் காட்சிகள் : 1

சென்னை மக்களால் மறக்க முடியாத சம்பவம்தான், மத்திய சிறைக் கலவரம். இந்தக் கலவரம் நடந்தது பழைய மத்திய  (புழலில் அல்ல) சிறைச்சாலையில்.  வடசென்னை தாதா பாக்சர் வடிவேலு 1999-ம் ஆண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்டு இருந்தார். வயிற்றுப்போக்கு காரணமாக 16.11.99 அன்றிரவு பாக்சர் வடிவேலுவை சிறை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக  அரசு பொது மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால்  பாக்சர் வடிவேலு  மறுநாள் இறந்தார்.


பாக்சர் வடிவேலுவை சிறை அதிகாரிகள் அடித்துக் கொன்று விட்டதாக சிறைக்குள் தகவல் பரவியது. சிறைக் கைதிகள் கலவரத்தில் குதித்தனர். அதில், சப் - ஜெயிலர் ஜெயக்குமார் , கொல்லப்பட்டார். சிந்தாதிரிப்பேட்டை போலீசில் சிறைக் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் புகார் கொடுத்தார். வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு போனது.


 வெள்ளைரவி, பர்மா சீனு, கொடுக்கு, டிக்கி, திருவள்ளூர் விஜி ஆகிய  கைதிகள் ஜெயக்குமாரை  உணவு கிடங்கில்  தள்ளி,  அரிசி மூட்டையை தூக்கும் குத்தூசியால் அவரைக் குத்தினர்.  பின்னர் அறையில் இருந்த ஆவணங்களில் தீவைத்து, அந்தத் தீயினுள் ஜெயக்குமாரைத் தூக்கிப் போட்டனர். அவர் தீயில் கருகி இறந்தார்.


  போலீஸ் துணை கமிஷனர் ஜஸ்பர் ராஜாசிங் தலைமையில் போலீசார், சிறைக்குள் வந்தனர். அவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஜெயபால், மணி, பாபு, காதர் ஆகியோர் இறந்தனர். கலவரம் அடங்கியது.  கலவரத்தில் 40 போலீசார், 40 சிறை அலுவலர்கள், 63 கைதிகள் காயமடைந்தனர்.  


சென்னை மத்திய சிறைக் கலவரம் மற்றும் அப்போது சிறை ஜெயிலர் ஜெயக்குமார் கொல்லப்பட்ட வழக்கில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பின்னர்  (1999 -2012) 27 பேர் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது.


சிறைக் கலவரக் காட்சிகள் : 2

சில மாதங்கள் முன்னர் நடந்த சம்பவம் இது.  இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார்  கொலை வழக்கு தொடர்பாக  கைதாகி சிறையில் இருக்கும் 16 பேரில் ஒருவரான முகமது ரஃபீக், சிறையில் பயன்படுத்தியதாக   செல்போன் ஒன்றை ஜெயிலர்   இளவரசன் பறிமுதல் செய்தார்.


 அதேபோல் மேலும் சில கைதிகளிடம் இருந்து  போதை பொருட்களும் கைப்பற்றப் பட்டது. இதனால் அவர்கள் அனைவரும் ஜெயிலர் மீது கடும் கோபத்தில் இருந்தனர். ஜெயிலில் உடனிருக்கும்  யாரோ ஒருவர்தான், ஜெயிலருக்கு  தகவல் கொடுக்கின்றனர் என கருதினர்.


  ஜாகீர் உசேன் என்ற கைதி மீது  சந்தேகப்பட்டு  கைதிகள் அடித்தனர். இது புழல் சிறை உயர்  அதிகாரிகளுக்கு தெரிந்ததும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டது. ஜெயிலர்  இளவரசன், சிறை ரோந்து பணியில், உயர் பாதுகாப்பு  அறைக்கு சென்ற போது,  அங்கிருந்த கைதிகள் ஒன்றுகூடி  ஜெயிலர்  இளவரசனை தாக்கினார்கள்.


கைதிகள் தாக்குதலில் நிலை குலைந்த  ஜெயிலர் இளவரசன், கதவை திறந்து கொண்டு வெளியே ஓடி வந்த பின்னும்  அவரை விடாமல் விரட்டிய கைதிகள்,  அங்கிருந்த செங்கல் உருட்டுக் கட்டைகளால் அவரை தாக்கினார்கள்.


சிறைக் காவலர்கள் முத்துமணி, செல்வின் தேவராஜன், சிறை காப்பாளர் ரவிமோகன் ஆகியோர் கைதிகளை தடுக்க முயன்றதால்  கைதிகள் அவர்களையும் கற்கள், கட்டை களால் தாக்கினார்கள். காவலர் முத்துமணியை  இரும்பு கம்பியால் குத்தினர்.


ஜெயிலர் இளவர சன் , முத்துமணி, ரவிமோகன், செல்வின் தேவராஜ் ஆகிய 4 பேரும் இந்த தாக்குதலில் படுகாயம்  அடைந்தனர். படுகாயம் அடைந்த நால்வரும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர்.


தாக்குதலில் ஈடுபட்ட கைதிகளை அறைக் குள் அடைத்த போது,  மடக்கிப் பிடித்து அவர்களை அறையில் அடைத்த  போது, அவர்கள் துணை ஜெயிலர் குமார், சிறை காப்பாளர் மாரி ஆகிய இருவரையும் பிடித்து வைத்துக் கொண்டு  விடுவிக்க மறுத்துவிட்டனர்.


 சிறைத்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி புழல் சிறைக்கு வந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். கைதிகள் பிடியில் இருந்த 2 காவலர்களை  விடுவிக்க  அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியபின் இரவுதான் அவர்கள் விடுவிக்கப் பட்டனர்.


சிறைத்துறை டி.ஐ.ஜி.  ராஜேந்திரன்,  போலீஸ் இணை கமிஷனர் தினகர், மாதவரம் துணை கமிஷனர் விமலா, புழல் உதவி கமிஷனர் மன்னர் மன்னன் ஆகியோர் புழல் சிறைக்கு சென்று விசா ரணை நடத்தினார்கள்.


சிறைக்குள் கைதிகளை கண்காணிக்க  1 டி.ஐ.ஜி, 3 போலீஸ் எஸ்.பி.கள், 2 ஜெயிலர்கள், 11 துணை ஜெயிலர்கள், 112 வார்டன்கள், 81 துணை  வார்டன்கள் தற்போது பணியில்  உள்ளனர். இதை அதிகரிக்க உரிய நடவடிக்கை   எடுக்கப் படும் என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராம்குமார் மர்ம மரணத்தின் பின்னால்...செப்டம்பர் -18, 2016...  பிற்பகல் சென்னை மக்கள் மட்டுமல்லாது சமூக வலைதளங்களின் தொடர்பில் இருந்த அத்தனை பேருக்கும் 'சிறையில் ராம்குமார் பலி' என்ற தகவல் போய்ச் சேர்ந்து விட்டது.


 அடுத்த ரவுன்டில் முதலாவதாக வந்த தகவல் , 'ராம்குமார் அறையில் இருந்த கரன்ட் பாக்சில் செல்லும் மின் வயரைப் பிடித்து வாயால் கடித்ததால் மின்சாரம் பாய்ந்து இறந்தார் ' என்றது.
இரண்டாவது தகவலோ,  'ராம்குமார், சமையலறை  மற்றும் வராந்தாவில் நடந்து போகும் போது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்றது அடுத்து வந்த ஒரு தகவல். எல்லாமே மதிய உணவு இடைவேளையின் போதே முடிவுக்கு வந்து விட்டதாக கூறுகிறது.


 "ராம்குமார் சிறையிலேயே, அவர்  அறையிலேயே இறந்து கிடந்தார், மதிய உணவுக்கு முன்னரும், பின்னரும் அவர் வெளியே வரவில்லை " என்றது, அடுத்து வந்த தகவல்.
"ராம்குமார் முகம் மின்சாரத் தாக்குதலில் சிக்கி கருகி விட்டது என்றும் வாயில் வயரை வைத்துக் கடித்ததால் உதட்டில் பக்கத்தில் காயம், மார்பில் காயம், கை மற்றும் இடுப்பில் காயம் " என்றது இன்னொரு தகவல்.


சென்னை மத்திய புழல் சிறையில் 'முதன் முதலாக' மின்சாரம் தாக்கியதாக ஒருவர்   (ராம்குமார்) உயிரிழந்திருப்பது  இப்போதுதான் நடந்திருக்கிறது என்கிறது சிறைத்துறை வட்டாரம்.


ராம்குமாருடன் பேசுவதற்கும், ராம்குமாரை சகஜ(?) நிலைக்கு கொண்டு வருவதற்கும் இளங்கோவன், வெங்கடேசன் என்ற நன்னடத்தை கைதிகளை ராம்குமார் தங்கியிருந்த அதே அறையில் சிறைத்துறை வைத்திருக்கிறது. இந்த இருவருக்குத் தெரியாமல், ராம்குமார் சிறைக்கு வந்த (18.9.2016- வரையில்) இந்த  75 நாளில் ஒன்றுமே நடந்திருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.


 சமையல் கட்டோ, வராந்தாவோ, சிறை அறையோ எதுவாக இருந்த போதும் கைதிகளின் கைக்கு எட்டும் உயரத்தில் மின்சார வயர்கள் செல்லும் படி  இருக்காது.
 தற்போதைய நிலையில் ராம்குமாரின் பிரேத பரிசோதனை யானது தள்ளி வைக்கப் பட்டிருக்கிறது. பிரேத பரிசோதனை  ஆய்வின் முடிவில் வரப்போகும் உண்மை பலரின் கேள்விகளுக்கு விடையாக இருக்கும் வாய்ப்பு உள்ளது.


அப்போதுதான் சிறைக் கைதிகளுக்கு வருகிற ' திடீர் வயிற்றுவலி' க்கு அர்த்தம் புலப்படும்.

-ந.பா.சேதுராமன்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement