வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (21/09/2016)

கடைசி தொடர்பு:17:14 (21/09/2016)

போலீஸ் ஜீப்பை எரித்த போதை ஆசாமி..! மலைக்க வைத்த 'மனைவி' சண்டை 

'ஸ்கூட்டர்' எங்கே என்று மனைவி கேட்டதால் ஆத்திரமடைந்த போதை கணவர், கோபத்தில் கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டரின் காரை எரித்துள்ளார். இந்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

சென்னை கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்துக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இன்ஸ்பெக்டர் தனராஜின் வாகனம், சில தினங்களுக்கு முன்பு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தீயை அணைத்தனர். போலீஸ் வாகனம் எப்படி தீப்பிடித்து எரிந்தது என்ற விசாரணையில் களமிறங்கியது டீம். அப்போது கிடைத்த தகவல்கள் போலீஸாரையே அதிர்ச்சியடைய வைத்தது. 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "போலீஸ் வாகனம் தீப்பிடித்து எரிந்தது குறித்து விசாரணை நடத்தினோம். அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம். அப்போது ஒரு வாலிபர் போலீஸ் வாகனத்துக்கு தீ வைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. உடனடியாக அந்த நபர் குறித்து விசாரித்தோம். கோட்டூர்புரத்தை சேர்ந்த பிரபாகரன் என்று தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரித்த போது, பிரபாகரனுக்கும், அவரது மனைவிக்கும் ஏற்பட்ட தகராறே போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்தது தெரியவந்தது. உடனடியாக பிரபாகரனை கைது செய்துள்ளோம்" என்றார்.

போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "கடந்த 18ம் தேதி போலீஸார் வாகன சோதனை நடத்திய போது பிரபாகரன், குடிபோதையில் ஸ்கூட்டரில் வந்துள்ளார். அவரைப் பிடித்து விசாரித்தபோது அவரால் பதிலளிக்க முடியவில்லை. இதனால் அவரது முகவரியை வாங்கிக் கொண்டு, வாகனத்தையும் பறிமுதல் செய்தோம். ஸ்கூட்டர் இல்லாமல் வீட்டிற்கு சென்ற பிரபாகரனிடம் அவரது மனைவி தகராறு செய்துள்ளார். இந்த ஆத்திரத்தில் பிரபாகரன், போதையில் போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடியுள்ளார். உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. அவர் மீது அரசு வாகனத்தை சேதப்படுத்தியது என்ற பிரிவில் வழக்குப்பதிவு கைது செய்துள்ளோம்" என்றனர். 

எஸ்.மகேஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்