Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போலீசும்... விடை தெரியாத மூன்று சம்பவங்களும்...!

 

‘‘ ‘உலகின் நம்பர்-1 போலீஸ்’ என்று பாராட்டப்படும் ஸ்காட்லாந்து யார்டு போலீஸாருக்கு அடுத்த இடத்தில் தமிழக போலீஸார் உள்ளனர்’’ என ஒரு செய்தி பரவலாக இருந்துவருகிறது. இதில், எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது எனத் தெரியவில்லை. காரணம், சமீபகாலமாக காவல் துறையில் அவர்களின் பங்கு மிகவும் மோசமாகவே இருக்கிறது. லஞ்சம், ஊழல், காட்டுமிராண்டித்தனம், மேலிட உத்தரவு, அலட்சியம் என அவர்களின் பாதை பெரும்பாலும் மாறிவிட்டது.

நம் நாடு எத்தனையோ விளைவுகளை இவர்களின் மாறுதல்களால் சந்தித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தும் அதன்மீது நடவடிக்கை எடுக்காமல் காலந்தாழ்த்தி, அதனால் ஏற்படும் கொலைகளே அதற்கு முதல் காரணம். ஆனால், இதையெல்லாம்விடக் கடந்த சில மாதங்களில் தமிழகத்தையே அதிரவைத்த மூன்று சம்பவங்களுக்கும் போலீஸார், இதுவரை விடை காணாமல் இருப்பதுதான் மக்களுக்கான பாதுகாப்பில் பெருத்த ஏமாற்றமாக இருக்கிறது.

முதல் சம்பவம்:

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, மே 13-ம் தேதி அன்று, திருப்பூர் அருகில் மூன்று கன்டெய்னர் லாரிகளை பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையத்தின், பறக்கும் படை. அந்த லாரிகளில் ரூ.570 கோடி பணம் இருந்தது. இந்தப் பணத்தைக் கொண்டு வந்தவர்களிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. ரெய்டின்போது கன்டெய்னர் லாரிகளில் வந்தவர்கள் தப்பிச்செல்ல முயற்சித்தனர். பணத்துக்கு யாரும் உரிமை கோரவில்லை என தொடக்கம் முதலே கன்டெய்னர் விவகாரத்தில் சந்தேகம் வலுத்து வந்தது. இதையடுத்து, ‘‘பணம் கொண்டுவந்த 3 கன்டெய்னர் லாரிகளின் பதிவு எண்களும் போலியானவை என்று தெரியவந்தது. இந்தப் பணம் யாருக்காக, எங்கிருந்து எடுத்துச் செல்லப்படுகிறது என்பது குறித்து விசாரித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி ஆர்.சுப்பையா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி யாருக்காக எடுத்துச் செல்லப்பட்டது என்பதில் மர்மம் நீடித்துக்கொண்டே வருகிறது. சி.பி.ஐ. விசாரணை நடத்தினால், இந்த மர்மம் விலகும்” என்று வாதிட்டார். இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘மனுதாரர் கொடுத்த புகார் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அந்தப் புகாரின் நிலை என்ன என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிக்கையாக சி.பி.ஐ. தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை குறித்து 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.

ஆனால், 3 மாதங்களுக்கு மேலாகியும் இந்த விஷயத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் மெத்தனம் காட்டிவருவதாகத் தெரிகிறது. இதன் புதிர் விலகாமல் இருப்பதற்குக் காரணம் என்ன? இதுவரை எந்தத் தடயத்தையும் போலீஸுகெல்லாம் பெரிய போலீஸாகக் கருதப்படும் சி.பி.ஐ போலீஸார் சமர்ப்பிக்கவில்லை. இந்தநேரத்தில்தான் தமிழகத்தில் சுவாதி படுகொலை சம்பவம் நடந்து... அந்த விஷயத்தை இந்த விஷயம் மறைத்துவிட்டது; மறைக்கப்பட்டுவிட்டது.

 

இரண்டாவது சம்பவம்:

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி, அதிகாலை 6.40 மணிக்கு,  மென்பொறியாளர் சுவாதி வெட்டிச் சிதைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழக மக்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதைக் கையில் எடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸார், கொலையாளி யார்... எதற்காக கொலை நடந்தது எனப் பலதரப்பட்ட கேள்விகளை எழுப்பியதோடு சந்தேகப்படும்படியான நபர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். இறுதியில், இதற்கெல்லாம் விடை சொன்னது போலீஸ். நெல்லை மாவட்டம், மீனாட்சிபுரத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ராம்குமார்தான் குற்றவாளி என்றும், கைதுசெய்யப்போன அந்த நேரத்தில் அவர் கழுத்தை அறுத்துக்கொண்டதாகவும் புகைப்படங்களை வெளியிட்டு விசாரணையைத் தீவிரப்படுத்தியது போலீஸ்.

சுவாதியை ஒருதலையாகக் காதலித்ததாகவும், அவருடைய காதலை ஏற்காததோடு, அவரை கீழ்த்தரமாகத் திட்டியதாகவும்... அந்த ஆத்திரத்தில்தான் ராம்குமார், சுவாதியைக் கொலை செய்ததாகவும் மீடியாக்களிடம் போலீஸார் விளக்கினர். சென்னை அழைத்துவரப்பட்ட ராம்குமார், மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்கு மேல் சிறையில் இருந்த ராம்குமார் கடந்த 18-ம் தேதி புழல் சிறையில் மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

அடையாள அணிவகுப்பு... போலீஸ் கஷ்டடி... சிறையில் பாதுகாப்பு என ராம்குமாரைச் சுற்றி போலீஸார் கண்காணித்து வந்தபோதும் அவருடைய மரணம் மட்டும் மர்மமாகவே உள்ளது. மேலும், போலீஸார் ராம்குமாரின் ஒருதலை காதலுக்கான எந்த ஆதாரங்களையும் வெளியிடவில்லை. ராம்குமாரையும் கடைசிவரை மீடியாவிடம் பேசவிடவில்லை.
 
ராம்குமார் காதலித்ததாகச் சொல்லப்படும் சுவாதி குடும்பமும் எதுவும் பேசவில்லை. இதிலும், போலீஸார் ஓர் உண்மையை வெளிக்கொண்டுவரத் தவறிவிட்டார்கள் என்றே தெரிகிறது. இந்தப் பிரச்னை, தமிழகத்தில் பூதாகரமாய் வெடித்துக்கொண்டிருந்தபோதுதான் அடுத்த சோகம் ஆரம்பமானது.

 

மூன்றாவது சம்பவம்:

சேலத்திலிருந்து சென்னைக்குக் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.16 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்த சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில், சேலம் பகுதியில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து அழுக்கான ரூபாய் நோட்டுக்கள் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு தனிப்பெட்டி மூலம் அனுப்பப்பட்டிருந்தன. அதில், 226 மரப்பெட்டிகளில் 342.75 கோடி ரூபாய் இருந்தது. கோடிக்கணக்கான மதிப்பில் பணம் இருந்ததால், ஆயுதப்படை உதவி கமிஷனர் நாகராஜ் தலைமையில் 9 பேர் பாதுகாப்புக்காகத் துப்பாக்கியுடன் அதில் வந்தனர்.

இவர்கள் பயணித்த ரயில் பெட்டிக்கு மூன்று பெட்டிகள் தள்ளி, பணம் ஏற்றப்பட்ட பெட்டி இருந்தது. சென்னை வந்தவுடன் எழும்பூர் பார்சல் அலுவலகத்தில் சீலிடப்பட்ட ரயில் பெட்டி, காலை 10.45 மணியளவில் ரிசர்வ் வங்கியின் உதவி மேலாளர் நடராஜன் முன்னிலையில் திறக்கப்பட்டது. அப்போது, ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிடப்பட்டிருந்தது தெரியவந்தது.

விசாரணையில், 5.75 கோடி ரூபாய் கொள்ளைபோனது தெரியவந்தது. ‘‘விரைவில், கொள்ளையர்களைப் பிடித்துவிடுவோம்’’ என்று அப்போது நம்பிக்கை தெரிவித்தனர் வழக்கை விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி போலீஸார். ஆனால், ஒரு மாததுக்கு மேல் ஆகியும் இந்த வழக்கில் எந்த ஒரு தடயத்தையும் போலீஸார் கண்டுபிடிக்கவில்லை.

பரபரப்பைக் கிளப்பிய இந்த மூன்று சம்பவங்களிலுமே இதுவரை முழுமையான விடை கண்டறியப்படவில்லை. இந்த வழக்குகளில், துப்புத்துலக்குவதில் போலீஸாருக்கு என்ன மாதிரியான இடையூறுகள் இருக்கின்றன அல்லது பெரிய தலைகளின் தலையீட்டால் அதில், முழுமையாக விசாரணை செய்ய முடியவில்லையா என்பது அவர்களுக்கே தெரிந்த விஷயம்.

ஆனால், பொதுவாக ‘குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதைவிட நிரபராதிகள் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது’ என்பதுதான் சட்டத்தின் அடிப்படை நோக்கம்.

- ஜெ.பிரகாஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement