Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொள்ளையர்கள் நகை பறித்த 'அந்த' நிமிடங்கள்! காதை இழந்த கடைக்காரரின் கண்ணீர் வாக்குமூலம் (Exclusive வீடியோ)

கொள்ளையர்களிடம் இருந்து இளம்பெண்ணை காப்பாற்றியபோது மளிகைக்கடைக்காரரின் காதில் வெட்டு விழுந்தது. அதையும் பொருட்படுத்தாமல் கொள்ளை சம்பவத்தை தடுத்துள்ளார். இந்த களேபரம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. இதற்கு அந்த பகுதியில் ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் பணியாற்றுவர்கள் இருப்பதே காரணம். கடந்த 2014, டிசம்பர் 19ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரை சேர்ந்த நீராவி முருகன், கத்தி முனையில், துரைப்பாக்கம் எம்.சி.என் நகரில் குடியிருக்கும் தனியார் பள்ளி ஆசிரியை வேலத்திடம் 14 சவரன் செயினை பறித்தார். இந்த சம்பவம் பதிவாகிய சி.சி.டி.வி கேமரா காட்சிகள் அனைவரையும் பீதிக்குள்ளாக்கியது. இதுபோல கடந்த 18ம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணிடம் மீண்டும் ஒரு பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இதுவும் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருக்கிறது.

கொள்ளையை தடுத்த நபரின் பெயர் சேகர். இவருக்கு தூத்துக்குடி மாவட்டம், ஏரல் சொந்த ஊர். சேகர், நமக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

கடந்த 18ம் தேதி இரவு 7 மணியளவில் ஒரு இளம்பெண்ணை ஆட்டோவில் வந்தவர்கள் பிடித்து இழுத்துச் சென்றனர். அந்தப் பெண் ஹெல்ப் என்று சத்தம் போட்டார். உடனே நான், கடையிலிருந்து ஓடி, அந்த பெண்ணை பிடித்து இழுத்தவனை ஆட்டோவிலிருந்து கீழே தள்ளினேன். அவனோடு சேர்ந்து இளம்பெண்ணும் கீழே விழுந்தார். இருவரையும் ஆட்டோ இழுத்துச் சென்றது. இதில் இளம்பெண்ணும் காயமடைந்தார். அதற்குள் அங்கு பொது மக்கள் கூடினர். இதனால் ஆட்டோவிலிருந்தவர்கள், பட்டாக்கத்தியைக் காட்டி பொது மக்களை மிரட்டினர். இதனால் பொது மக்கள் பயந்து போய் ஒதுங்கி விட்டனர். இதற்குள் ஆட்டோவிலிருந்து இறங்கிய நபர், கையிலிருந்து பட்டாக்கத்தியை கொண்டு என் முதுகில் பலமாக வெட்டினார். அதை நான் தடுத்தேன்.

அடுத்து, அந்த நபர், என்னுடைய முகத்துக்கு நேராக கத்தியை வீசினார். முகத்தை திருப்பியதால் என்னுடைய வலது காதில் கத்தி வெட்டியதில் இரண்டாக அது கிழிந்து ரத்தம் கொட்டியது. இதில் நிலைதடுமாறிய நான், கீழே கிடந்த நபரை விட்டுவிட்டேன். கத்தியை எடுத்துக் கொண்டு கீழே நடந்த நபரையும் தூக்கியவாறே ஆட்டோவில் ஏறி அவர்கள் தப்பி விட்டனர். இதன்பிறகு அந்த இளம்பெண்ணையும், என்னையும் பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு எனக்கு சிகிச்சை அளிக்க ஒன்றரை லட்சம் ரூபாய் கேட்டனர். அந்த தொகை இல்லாததால் ராயபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். கிழிந்த காதில் 23 தையல்கள் போடப்பட்டன. இப்போது நலமுடனும், மனநிம்மதியுடனும் இருக்கிறேன்.

இதற்கு முன்பு கூட இரண்டு கொள்ளையர்களைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளேன். கடந்த ஆண்டு துரைப்பாக்கம் ஓ.எம்.ஆர். சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் கொள்ளையடித்த நபர், எங்கள் பகுதி வழியாக ஓடிவந்தார். அவரைப்பிடித்து விசாரித்த போது செயினைப்பறித்த சம்பவம் தெரியவந்தது. அவர் ஒரு கல்லூரி மாணவர். பிறகு அவரையும், செயினையும் போலீசில் ஒப்படைத்தேன். அடுத்து எம்.சி.என் நகரில் திருடிய ஒருவரையும் போலீசில் பிடித்துக் கொடுத்தேன்" என்றார்.

கொள்ளையர்களிடமிருந்து தப்பிய இளம்பெண்ணின் பெயர் சிநேகலதா. இவர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். இன்ஜினீயரான இவர், துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி உள்ளார். கொள்ளையர்களிடமிருந்து போராடிய சிநேகலதாவுக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று விட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டார். சென்னைக்கு வந்த சிநேகலதாவின் குடும்பத்தினர், நேரடியாக சேகர் வீட்டுக்கு சென்று நன்றி தெரிவித்துள்ளனர். அப்போது, "நீங்கள் இல்லை என்றால் என்னுடைய மகள் இன்று உயிரோடு இருந்திருக்க மாட்டாள்" என்று கண்ணீர் மல்க சொன்னபோது சேகரின் குடும்பத்தினரின் முகம் சோகத்திலும் மகிழ்ச்சியடைந்தனர். 

மளிகைக்கடைக்காரர் சேகருக்கு விருது

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் வெள்ளையன், துரைப்பாக்கம் வியாபாரிகள் சங்க தலைவர் செல்வகுமார், தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர்கள் பொன்சேகர், ஸ்டீபன் மற்றும் வியாபாரிகள் சேகரின் துணிச்சலைப் பாராட்டினர். சேகருக்கு விருது வழங்கவும் வணிக சங்கங்களின் பேரவை முடிவு செய்துள்ளது.

 


இந்த வழிப்பறி சம்பவத்தில் சிநேகலதாவின் செயின் மற்றும் அவரது ஹேண்ட் பைக் ஆகியவை மீட்டுக் கொடுத்துள்ளார் சேகர். ஆனால் அவரது செல்போன் மட்டும் போராட்டத்தின் போது ஆட்டோவுக்குள் விழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக துரைப்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தினர். சி.சி.டி.வி கேமரா பதிவு மூலம் கொள்ளையனை அடையாளம் கண்டு சிந்தாரிப்பேட்டையைச் சேர்ந்த மீன்குழப்பு கார்த்திக்கிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர் மரணமடைய இந்த சம்பவத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ், ஏட்டு விஜயகுமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அடுத்து, மீன்குழம்பு கார்த்திக் மரணம் தொடர்பாக விசாரிக்க மாஜிஸ்திரேட் சச்சிதானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். 

எஸ்.மகேஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement