இப்படித்தான் வளைத்தேன் 11 பெண்களை....! சாமுவேலின் ஃபேஸ்புக் பக்கங்கள்

பேஸ்புக் மூலமாக இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்திய இன்ஜினீயர் சாமுவேலை போலீஸார் கைது செய்தனர். 'இளம்பெண்களை மயக்குவதை ஒரு தொழிலாகவே நடத்தி வந்துள்ளார். அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சத்தில் உள்ளனர்' என்கின்றனர் போலீஸார்.

சென்னை சிந்தாரிப்பேட்டையை சேர்ந்த பாதிக்கப்பட்ட பட்டதாரி பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மயிலாப்பூரை சேர்ந்த இன்ஜினீயர் சாமுவேல் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சிந்தாரிப்பேட்டை போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் இன்ஜினீயரிங் படித்த சாமுவேல் ஃபேஸ்புக் பிரியர். இதனால் அவருக்கு நண்பர்கள் வட்டாரம் அதிகம். அதிலும் பெண் நண்பர்கள் ஏராளம். ப்ரோஃபைல் படத்தை அடிக்கடி மாற்றும் சாமுவேல் தன்னுடைய பெயரை 'சாம்' என்றே சுருக்கி வைத்திருப்பார். ஃபேஸ்புக் சாட்டிங் மூலம் பேசும் அவர், பெண்களிடம் தன்னை வசதிபடைத்தவராகவே பந்தா காட்டிக் கொள்வார். அடுத்து பெண்களை நேரில் சந்தித்து பேசுவார். பிறகு அவர்களுடன் நெருங்கிப் பழகுவார். இதுவே சாமுவேலின் ஸ்டைல்.

இவ்வாறு பழகும் பெண்களுடன் செல்ஃபியில் தொடங்கி நெருக்கமாக பல புகைப்படங்களை எடுத்துக் கொள்வார். அடுத்து வீடியோவும் ரகசியமாக எடுத்து அதன்மூலமே பெண்களை மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் புகாராக தெரிவித்துள்ளனர். சாமுவேலால் இதுவரை 11 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. அதுதொடர்பான பல ஆதாரங்களும் எங்களுக்கு கிடைத்துள்ளது. இதனால் சாமுவேல் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம்.

சாமுவேலை நம்பி பழகிய இளம்பெண்கள் இன்று பயத்தில் இருக்கின்றனர். ஏனென்றால் சாமுவேலின் செல்போனிலிருந்த புகைப்படங்கள் பலருக்கு பகிரப்பட்டுள்ளன. இதனால் எந்தவிதத்திலாவது இந்த புகைப்படங்கள் வெளியில் வந்துவிடுவோ என்ற அச்சத்தில் அவர்கள் ஒவ்வொரு நிமிடங்களும் தவித்துக் கொண்டு இருக்கின்றனர்" என்றனர்.

சாமுவேல் மீது பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகார் போலீஸாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த புகாரில், சாமுவேல் என்னை பின்தொடர்ந்து காதலிப்பதாக தெரிவித்தான். ஒரு மாதமாக என்னை தொந்தரவு செய்தான். நான் காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் பிளேடால் கையை அறுத்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினான். அவன் சொன்னது போல கையை அறுத்து மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டான். இதனால் அவனுடன் பழக ஆரம்பித்தேன். பல இடங்களுக்கு சென்றோம். அப்போது ஒரு நாள் என்னுடைய செல்போனில் பேசிய பெண் ஒருவர், சாமுவேலை நம்பாதே. அவனால் ஏற்கனவே நான் பாதிக்கப்பட்டுள்ளேன் என்றார். இதனால் அதிர்ச்சி அடைந்தேன். பிறகு ஒருநாள் சாமுவேலின் போனை எடுத்துப் பார்த்தேன். அதில் பல பெண்களின் ஆபாசமான புகைப்படங்கள் இருந்தன. இதன்பிறகு அவனிடமிருந்து விலகினேன். இதனால் ஆத்திரமடைந்த சாமுவேல் என்னை போனில் மிரட்டத் தொடங்கினான்.  10 லட்சம் ரூபாய் கேட்டான். பணத்தை தரவில்லை என்றால் சுவாதியைப் போல கொலை செய்துவிடுவதாக கூறினான். இதற்கிடையில் வாட்ஸ்அப் குரூப்பில் என் புகைப்படம் உள்பட பல பெண்களின் புகைப்படங்களை பதிவிட்டான். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்" என்று கூறப்பட்டுள்ளது.

சாமுவேலுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபேஸ்புக் அக்கவுன்ட்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் அதை முடக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 
  
இதுகுறித்து காங்கிரஸ் மகளிரணி தேசிய செயலாளர் ஹசீனா சையத் கூறுகையில், "சாமுவேல் மீது மட்டும் புகார் சொல்ல முடியாது. அவருடன் பழகிய பெண்கள் மீதும் தவறு உள்ளது. முதலில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்து இருந்தால் மற்ற பெண்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு இருக்கும். பொதுவாக அறிமுகம் இல்லாத ஆண்களின் நட்பை ஏற்றுக் கொள்ளக்கூடாது. பெண்கள் எப்போதும் முன்எச்சரிக்கையுடனும், கவனமாகவும் சமூகவலைத்தளத்தில் செயல்பட வேண்டும்" என்றார். 

எஸ்.மகேஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!