முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்து கலங்கிய சசிகலா! - பணியில் இருந்தே நீக்கப்பட்ட அப்போலோ நர்சுகள் | Apollo hospital staffs terminated for checking Chief Minister Report illegally

வெளியிடப்பட்ட நேரம்: 11:42 (29/09/2016)

கடைசி தொடர்பு:14:50 (29/09/2016)

முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்து கலங்கிய சசிகலா! - பணியில் இருந்தே நீக்கப்பட்ட அப்போலோ நர்சுகள்

ப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டு 7 நாட்கள் கடந்துவிட்டன. 'மருத்துவர் சிவக்குமார் தலைமையில் நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் அவருடைய  ஹெல்த் ரிப்போர்ட்டைப் பார்த்ததற்காக மூன்று பேரை வேலையில் இருந்து நீக்கிவிட்டது அப்போலோ நிர்வாகம்' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 22-ம் தேதி இரவு உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ' நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல் காரணமாக முதல்வர் சிகிச்சை எடுத்து வருகிறார்' என மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்பின்னர், சமூக வலைத்தளங்களில் முதல்வரின் உடல்நலம் குறித்து வதந்திகள் பரவின. ' இவ்வாறு வதந்திகள் பரப்புவோர் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என காவல்துறை எச்சரித்தது. நேற்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் முதல்வரை சந்தித்துவிட்டுத் திரும்பினர். ஆனால், இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை அரசு நிர்வாகம் வெளியிடவில்லை. 

என்னதான் நடக்கிறது அப்போலோவில்? 

" மருத்துவமனையில் சி.சி.யூ எனப்படும் க்ரிட்டிகல் கேர் யூனிட்டில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர். அந்தநேரத்தில் அதே யூனிட்டில் முப்பது பேர் சிகிச்சை எடுத்து வந்தனர். படிப்படியாக அவர்கள் அனைவரும் வேறு பிளாக்குகளுக்கு மாற்றப்பட்டுவிட்டனர். தற்போது இரண்டாம் தளத்தில் முதல்வர் மட்டுமே சிகிச்சை எடுத்து வருகிறார். ரத்தக் கொதிப்பு, சர்க்கரை குறைபாடு போன்றவை இயல்பான நிலைக்குத் திரும்பிவிட்டன. தற்போது நுரையீரல் நீர்க்கோர்ப்பு மற்றும் சிறுநீரகத் தொற்று தொடர்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவர் சிவக்குமார் தலைமையில், கார்டியாலஜி, நுரையீரல் தொடர்பான சிறப்பு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகின்றனர்" என விவரித்த கார்டன் ஊழியர் ஒருவர், 

"முதல்வர் எதிர்பார்த்ததைவிட மருத்துவமனையில் அதிக நாட்களைக் கழிப்பதால், சற்றே சோர்வாகவும் ஆதங்கத்திலும் இருக்கிறார். ' 28-ம் தேதியே கார்டன் திரும்பிவிடுவோம்' என நம்பிக்கையாக இருந்தார். ஆனால், இன்னும் சில நாட்கள் அவருக்கு சிகிச்சை தேவைப்படுகிறது. அவருக்கான உடைகள் அனைத்தும் கார்டனில் இருந்தே கொண்டு செல்லப்படுகிறது. நேற்று அவருக்காக கொண்டு செல்லப்பட்ட உடையில், ஒரு துண்டு மாறிவந்துவிட்டது. உடனே, கார்டன் பணிப்பெண்ணிடம், ‘இங்கே இருக்கிற நர்சுகள் எவ்வளவு நல்லா வேலை பாக்கறாங்க...உங்களால இதைக் கூட செய்ய முடியாதா?' என்று சலித்துக் கொண்டார். நேற்று முன்தினம் இரவு நன்றாகச் சாப்பிட்டார். மறுநாள் காலையில் எழுந்தபோது, மூச்சுத் திணறலால் மிகவும் அவதிப்பட்டார்.

பக்கத்து அறையில் இருந்த சசிகலாவிடம் நர்சுகள் சென்று தெரிவித்தனர். உடனே, முதல்வர் அறைக்கு வந்த சசிகலா, அவர் படும் சிரமத்தைப் பார்த்து கலங்கிவிட்டார். இயல்பாகவே சசிகலாவுக்கு தலைசுற்றல், கிறுகிறுப்பு அவ்வப்போது வரும். இந்தச் சூழ்நிலையில் அது இன்னும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அறையில் இருந்த நர்சுகள் அவருக்கு முதலுதவி அளித்தனர். அந்த அறையில் சசிகலா மட்டுமே உடனிருக்கிறார். நேற்று அவரிடம் பேசிய முதல்வர், 'என்னால சரியாக தூங்கக் கூட முடியவில்லை' என வேதனைப்பட்டிருக்கிறார். மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் இருக்கிறார் முதல்வர். விரைவில் பூரண நலம் பெற்று கார்டன் திரும்புவார்" என்றார் விரிவாக. 

"அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அனைத்தும் உளவுத்துறை கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்கள் என அனைவரது செல்போன் எண்களும் பேச்சுக்களும் ஆராயப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் இருந்து எந்தத் தகவலும் கசிந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என விவரித்த காவல்துறை அதிகாரி ஒருவர், "முதல்வரின் உடல்நலன் குறித்த அறிக்கை கணினியில் பதிவேற்றப்படுகிறது. இதற்கான பாஸ்வேர்டு தளத்தின் பொறுப்பாளரிடம் மட்டுமே இருக்கும். மருத்துவர்களைத் தவிர வேறு யாருக்கும் இதைப் பார்ப்பதற்கு அனுமதியில்லை. ஆனால், நேற்று யாரோ ஒருவர் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி, முதல்வரின் ஹெல்த் ரிப்போர்ட்டைப் படித்துப் பார்த்துவிட்டார். இப்படிச் செய்வார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 

' இதைச் செய்தது ஒரு நர்சுதான்' என்பதைக் கண்டுபிடித்துவிட்டோம். 'பாஸ்வேர்டு எப்படித் தெரிந்தது' என தீவிர விசாரணை நடத்தி, இரண்டு நர்சுகள் மற்றும் மருத்துவர்களின் இரண்டு செயலாளர்களை வளையத்தில் கொண்டு வந்தோம். இதற்குக் காரணமான இரண்டு நர்சுகளையும் ஒரு செயலாளரையும் பணியில் இருந்தே நீக்கிவிட்டது அப்போலோ நிர்வாகம். ஒரு மருத்துவரின் செயலாளருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுவிட்டது. எங்களைத் தாண்டி எந்தத் தகவல்களும் வெளியில் சென்றுவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருக்கிறோம். ஒவ்வொரு ஷிப்ட்டுக்கும் மூன்று நர்சுகள் வீதம் பணியில் இருக்கிறார்கள். அவர்கள் பணிக்கு வந்த பின்னரும் வீட்டுக்குச் சென்ற பின்னரும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறார்கள்" என்றார் அவர். 

உடல்நலக் குறைவால் மிகுந்த வேதனையில் இருக்கிறார் முதல்வர். தலைமைச் செயலக பணிகளும் அப்போலோவிலேயே விவாதிக்கப்படுகின்றன. ' முதல்வர் விரைவில் வீடு திரும்ப வேண்டும்' என தீவிர பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர் கட்சித் தொண்டர்கள்.

தமிழக முதல்வர் விரைவில் பூரண நலம் பெற பிரார்த்திப்போம்!

அப்போலோ மருத்துவமனை வாசலில் ரத்தத்தின் ரத்தங்கள்... புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க...

 

-ஆ.விஜயானந்த்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்