வெளியிடப்பட்ட நேரம்: 16:24 (30/09/2016)

கடைசி தொடர்பு:17:28 (30/09/2016)

'கர்நாடகாவுக்கு இறுதி எச்சரிக்கை..!' காவிரி வழக்கில் கொதித்த உச்சநீதிமன்றம்

காவிரி விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத கர்நாடகாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள உச்ச நீதிமன்றம், நாளை முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின்படி காவிரி விவகாரம் தொடர்பான கூட்டம் டெல்லியில் மத்திய நீர்பாசனத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், தண்ணீர் திறப்பது தொடர்பாக எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. மாறாக, கர்நாடகா, தமிழகம் தரப்பில் மாறி மாறி கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, "தமிழகத்துக்கு தண்ணீர் திறந்தால் கர்நாடகாவில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். 2015-16ம் ஆண்டு நீர்பருவ ஆண்டு மிக மோசமானதாக அமைந்துள்ளது என்றார்.

தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் படித்த முதல்வர் ஜெயலலிதாவின் உரையில், "தமிழகத்திற்கு காவிரியில் உள்ள உரிமையை பறிக்கும் வகையில் திட்டமிட்டு கர்நாடகா ஈடுபடுகிறது. மத்திய அரசால் பயனில்லாததால், தமிழக உரிமையைப் பெற நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வழியில்லை. விவசாயத்துக்கு காவிரி நீரை நம்பியுள்ள தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் மூலமே நீதி கிடைத்து வருகிறது. தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க மறுப்பது அரசியல் சாசனத்தை மீறும் செயலாகும்" என்று கூறினார்.

இந்த நிலையில், காவிரி விவகாரத்தில் விவாதிக்கப்பட்டது குறித்த அறிக்கையை மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அக்டோபர் 4ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியத்தில் இடம்பெறும் நிபுணர்களின் குழுவின் பெயர்களை 4 மாநில அரசுகள், மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும். இந்த நிபுணர்களின் பட்டியலை மத்திய அரசு நாளை மாலை 4 மணிக்குள் அளிக்க வேண்டும். மேலும், தமிழகத்திற்கு நாளை முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை  விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும். மீண்டும் மீண்டும் நீதிமன்றம் வருவது வருத்தம் அளிக்கிறது. உத்தரவுகளை மதிக்காத கர்நாடக அரசு இறுதி எச்சரிக்கை விடுக்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

சகாயராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்