உள்ளாட்சி அமைப்புகள் லாபமீட்ட அல்ல! - கடுகடு உயர் நீதிமன்றம்

மிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவி காலம் அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, கடந்த 16-ம் தேதி  உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த அறிவிப்புக்குப் பிறகு 19-ம் தேதி சென்னை மாநகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்புகளில் பழங்குடியின மக்களுக்கு சுழற்சி முறையில் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதைக் கையில் எடுத்த தி.மு.க, அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அந்த மனுவில், தமிழக அரசு அறிவித்துள்ள உள்ளாட்சித் தேர்தல், அரசியல் அமைப்பு சட்டத்துக்கும், பஞ்சாயத்து ராஜ் சட்டத்துக்கும் எதிரானது. எனவே, இதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்துவிட்டு, சுழற்சி முறையை பின்பற்றி முறையாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதுவரை, தற்போது வெளியிட்ட இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது. 

இந்த வழக்கு நீதிபதி என். கிருபாகரன் முன்பு நடைபெற்றது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் ஆஜராகி வாதிட்டார். அவர் தன்னுடைய வாதத்தில், “தற்போதுள்ள அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவதில்லை. தேர்தல் குறித்த அறிவிப்பை கூட எந்த முன்னறிவிப்பும் இன்றி ரகசியமாக வைத்து திடீரென வெளியிட்டுள்ளது. சென்னை தவிர, எந்த மாநகாராட்சியிலும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்புகளையும் அது தொடர்பான தகவல்களையும், இணையதளத்தில் இருந்து பெறமுடியவில்லை. ஊராட்சி ஒன்றியங்களில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் பல இடங்களில் முறையாக இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வில்லை.

 

பழங்குடியினர் இட ஓதுக்கீடு 

காஞ்சிபுரத்தில் பழங்குடியின மக்கள்  1.59 சதவீதம் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு அங்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை. அதேபோல் சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன. அவற்றில் ஒரு வார்டு கூட  பழங்குடியினருக்கு ஒதுக்கப்படவில்லை. தஞ்சை, பெரம்பலூர், அரியலூர் தேனி, மதுரை சிவகங்கை, நெல்லை, குமரி, துத்துக்குடி மாவட்டங்களிலும் யூனியன் பஞ்சாயத்துகளில் ஒரு இடம் கூட  பழங்குடியினருக்கு  வழங்கப்படவில்லை. கூடலூர், பாப்பிரெட்டிப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம் போன்ற பகுதிகளில் மட்டுமே யூனியன் பஞ்சாயத்துகளில் பழங்குடியினருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட பஞ்சாயத்துகளில் காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. நாமக்கல், கோவை, வேலூர் பகுதிகளில் மட்டும் மாவட்ட பஞ்சாயத்துகளில்  பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பில் கடந்த 16-ம் தேதி மாவட்ட வாரியாக  இடஒதுக்கீடு தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது. இதில் எந்த விதிகளும் முறையாக பின்பற்றப்படவில்லை. மேலும், பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீடும் முறையாக வழங்கவில்லை. சுழற்சி முறையிலான இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தவில்லை என வாதிட்டார்.


தமிழக ஊரக வளர்ச்சித் துறை மற்றும் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான தமிழக அட்வகேட் ஜெனரல் ஆர்.முத்துகுமாரசாமி வாதிடுகையில், "தேர்தல் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட பின் வழக்கு தொடர முடியாது என்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்குள் உள்ளாட்சி பதவி இடங்களை நிரப்பும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சி  தேர்தல்  நடத்தப்படவுள்ளது. தற்போது தேர்தலை தள்ளிவைக்க முடியாது. ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும்,  மக்கள் தொகையில் புள்ளி 5 சதவிகிதம் முதல் 3 சதவிகிதம் வரை இருக்கும்பட்சத்தில் பழங்குடியினருக்கு இரு இடம் ஒதுக்கப்படும். அதன்படி தற்போது உரிய இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை பழங்குடியினர் புள்ளி மூன்று சதவீதம்தான் உள்ளனர். எனவே அனுமதிக்கப்பட்ட அளவைவிட குறைவாக இருப்பதால் இட ஒதுக்கீடு வழங்க முடியவில்லை. மக்கள் தொகையின் அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் செயல்படுத்தி வேட்பு மனுத்தாக்கலும் தொடங்கி விட்டது. அதனால் தேர்தலை தள்ளிவைக்க வாய்ப்பில்லை" என்று வாதிட்டார். 

பஞ்சாயத்து அமைப்புகள் லாபம் சம்பாதிப்பதற்காக அல்ல

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி என்.கிருபாகரன் வழக்கின் தீர்ப்பை இன்று அறிவித்தார். அதில், மாநில தேர்தல் ஆணையம் வருகிற 17 மற்றும் 19-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று கடந்த செப்டம்பர் 26-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.

1. புதிய தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு, அதன்படி வருகிற டிசம்பர் 31 தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.

2. தேர்தல் நடந்து முடிந்து புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் வரை பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தமிழக அரசு  சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்.

3. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தங்களது வேட்புமனுவில் குற்றப்பின்னணி குறித்து முழு விபரங்கள் தெரிவிக்க வேண்டும். இதனை தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கப்படுவதுடன், வேட்புமனுவில் குற்றப்பின்னணி தகவல் தெரிவிக்க மறுத்தால் வேட்பு மனுவை நிராகரிக்கலாம்.

4. இதுபற்றி தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு அறிவிப்பு கொடுக்க வேண்டும். விளம்பரம் செய்யவேண்டும். 

5. மேலும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு மீண்டும் வெளியிடும் வரை வாக்காளர் பெயர் நீக்கம், சேர்த்தல், உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம்.

6. பஞ்சாயத்து அமைப்பு லாபம் ஈட்டும் அமைப்பு இல்லை, மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே அரசியல் கட்சியினர் குற்றப்பின்னணி உடையவர்களை வேட்பாளராக நிறுத்தக் கூடாது என்று தீர்ப்பளித்தார். 

 

- ஜோ.ஸ்டாலின்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!