வெளியிடப்பட்ட நேரம்: 20:29 (08/10/2016)

கடைசி தொடர்பு:20:45 (08/10/2016)

நொறுங்கிய வீடுகள்.. சிதறிய சாலைகள்... மேத்யூ பயத்தில் இருக்கும் அமெரிக்கா !

பாதுகாப்பிலும், கட்டமைப்பிலும் வல்லரசு நாடாக விளங்கினாலும் சுமார் 20 லட்சம் மக்களுக்கு மேல் இடமாற்றம் செய்தே தீர வேண்டிய கட்டாயத்துக்கு இப்போது தள்ளப்பட்டிருக்கிறது அமெரிக்கா. பாதுகாப்பு குறைபாடெல்லாம் ஒன்றுமில்லை... கரீபியன் கடலில் உருவாகி மிரட்டிக் கொண்டிருக்கும், "மேத்யூ" சூறாவளி புயல்தான் இதற்குக் காரணம்... 

இன்னும் கரையைக் கடக்கவேயில்லை.ப்ஆனால், மேத்யூ புயல் கொடுத்திருக்கும் 'வடு' மிகப்பெரிது. கை, கால் முறிந்தவர்கள், நொறுங்கிய கட்டிடங்கள், பல நூறு உயிர்கள் என்று 'மேத்யூ' புயலின் டிரெய்லரே அமெரிக்காவை ஆட்டம் காண வைத்திருக்கிறது. வேரோடு பிடுங்கி எறியப்பட்ட பழமையான மரங்களின் எண்ணிக்கையும் சற்று அதிகம்தான் என்கிறார்கள். விடாமல் வாரக் கணக்கில் கொட்டிக் கொண்டிருக்கும் மழைக்கு மட்டுமே பல நூறு மனித உயிர்கள் பலியாகியுள்ளன.

வடகிழக்கு கடற்கரை பகுதியில் கரையை கடக்க உள்ள 'மேத்யூ' வின், வழிப் பாதையில் இருந்து தப்பிக்க, அங்குள்ள வசிப்பிடங்களில் இருந்து இதுவரை 20 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மின்சாரம், தொலைத் தொடர்பு வசதிகள், கியாஸ், உணவுப் பொருள் விற்பனை நிலையங்கள் என அத்தனை வாழ்வாதார அம்சங்களும் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.ஃபுளோரிடாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பினால் மட்டும், 15 லட்சம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

 

                                                           

அவசர கால நிவாரண குழுவினர் அங்கு குவிந்து, முழுவீச்சில் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.. ஃபுளோரிடா மாகாணத்தில் , அதிபர் ஓபாமா அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். ஜார்ஜியா மற்றும் தெற்கு கரோலினாவில் 3 ஆயிரம் பேர் வெளியேற்றப் பட்டுள்ளனர். புயலின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கும் ஃபுளோரிடாவில், நூற்றுக்கணக்கான பாதுகாப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

புயல்பாதித்த பகுதிகளில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டு அவை மூடப்பட்டுள்ளன.

கரீபியன் கடலில் உருவாகி, 'பகாமஸ்' நாடு வழியாக அட்லாண்டிக் கடலுக்குள் ஊடுருவிய 'மேத்யூ'  புயல் அமெரிக்கா, ஹெய்தி, கியூபா, பகாமாஸ் போன்ற பல நாடுகளில் காற்றையும்,மழையையும் கடுமையாகக் காட்டிச் சென்றுள்ளது,மேத்யூ புயலால் அமெரிக்காவும், 'ஹெய்தி'யும்தான் அதிகமாகப் பாதிக்கப் பட்டுள்ளன. அமெரிக்காவின் ஃபுளோரிடா, ஜார்ஜியா, வடக்கு மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களில் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் புயல்காற்றும், காற்றோடு கூடிய பெருமழையும் கொட்டியதால், சாலைகள் துண்டிக்கப் பட்டுள்ளன.

மேத்யூ புயல் 'ஹைதி' நாட்டின் தென்மேற்குப் பகுதியை  தாக்கியதில் நாட்டின் முக்கிய நகரமான ஜெரோம் முற்றிலும் அழிந்துள்ளது.  பலத்த மழை காரணமாக பல்லாயிரக்கணக்கான வீடுகள் தரை மட்டமாகி விட்டன. சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மின்சாரம், தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.ஹைதியில் பெருக்கெடுத்த  வெள்ளத்தால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 910 ஆக உயர்ந்துள்ளது.

வெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்தாலேயே புயல் உருவாகிறது. எப்போதெல்லாம் காற்று சூடாகிறதோ, அது விரிந்து லேசாகிறது. லேசான காற்று மேலே செல்கிறது. அது ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்ப கனமான குளிர்ந்த காற்று ஓடிச் செல்கிறது. இந்தக் காற்று செல்லும் வேகம் காரணமாகவே புயல்கள் உருவாகின்றன.

 

புயலின் வகைகள் :

புயலின் வேகத்தை வகைப்படுத்த அளவுகோலை வைத்துள்ளனர். இந்த அளவுகோலின்படி பூஜ்யம் என்றால் எதுவுமே அசையாது. 5 என்றால் மிதமான தென்றல் காற்று. 8 என்றால் ஓரளவு புயல் காற்று (Gale), மரக்கிளைகள் ஒடியலாம். 10 என்றால் புயல் காற்று (Storm). 11 தொடங்கி 17 வரையிலான வேகத்தில் வீசும் காற்றுகள் வெப்பமண்டலப் புயல்கள். இவை அனைத்துமே மணிக்கு 74 கி.மீ. வேகத்துக்கு அதிகமாக வீசக்கூடியவை.

பல நாடுகளில் புயலின் பெயர்கள்

மேற்கிந்திய தீவுகளில் Hurricane (சூறாவளி), அமெரிக்காவில் Tornado (சுழன்றடிக்கும் சூறாவளி), சீனக் கடற்கரைப் பகுதிகளில் Typoon (சூறாவளிப் புயல்), மேற்கு ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதிகளில் வில்லி- வில்லி, இந்தியப் பெருங்கடல் பகுதியில் Cyclone (புயல்) எனப்படுகிறது. 

புயலை பல்வேறு பெயர்களைச் சொல்லி அழைத்தாலும், அது பெரும் சேதத்தை விளைவிப்பதுடன், மனித உயிர்களையும் எளிதில் பறிப்பதால் புயலை ரசிக்க முடிவதில்லை. ஒருவார காலம் வரை, அமெரிக்காவின் 'ஹைதி' கடற்கரை பகுதிகளில் கடும் சேதத்தை உண்டாக்கிய 'மேத்யூ' , தற்போது அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் கரையை கடக்க உள்ளது. ஆயிரம் பின்லேடன்கள் வந்தாலும் சமாளித்து விடுவோம் என்கிற வல்லரசு அமெரிக்கா, 'மேத்யூ' புயல் கரையைக் கடக்கும் நிமிடத்தை எண்ணி கலங்கிக் கொண்டிருக்கிறது....

ந.பா.சேதுராமன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்