ஃபேஸ்புக்கில் முதல்வர் பற்றி வதந்தி: வங்கி ஊழியர் கைது

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து ஃபேஸ்புக்கில் வதந்தி பரப்பிய தனியார் வங்கி ஊழியர் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. கடந்த மாதம் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வரின் உடல்நிலை குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவி வருகிறது. இதனால், அதிமுகவினர் மற்றும் பொதுமக்களிடையே கடும் பீதி ஏற்படுகிறது.

இந்தநிலையில், முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. இந்த எச்சரிக்கையும் மீறி முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பப்பட்டது.

இதனிடையே, முதல்வரின் உடல்நிலை குறித்து ஃபேஸ்புக்கில் பாலசுந்தரம் மற்றும் திருமணி ஆகியோர் வதந்தி பரப்பியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, சென்னை பம்மலை சேர்ந்தவர் பாலசுந்தரம் என்றும், ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த திருமணி என்றும் தெரியவந்தது. அவர்களை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். இதில் திருமணி தனியார் வங்கி ஊழியர் ஆவார். பாலசுந்தரம், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 42 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!