Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘அவனால்தான் இப்படி ஆனேன்...!' சிறை மீண்ட அனிதா பேட்டி (வீடியோ)

மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு 120 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்த அனிதா,  தன்னுடைய வாழ்க்கை சீரழிந்து போனதற்கு திருச்சியை சேர்ந்த காவலர் கருப்பசாமிதான் காரணம் என்று பரபரப்பான குற்றம்சாட்டை முன்வைத்துள்ளார்.

'ஆடிகார்' அனிதாவை அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க முடியாது. சென்னை உயர்நீதிமன்ற போலீஸ் நிலையத்தில் ராஜபாளையத்தை சேர்ந்த மலையரசன் கொடுத்த புகாரில் அருப்புக்கோட்டையை சேர்ந்த அனிதாவை போலீஸார் கடந்த பிப்ரவரி 9ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது மோசடி, தகாத வார்த்தையால் பேசுதல், மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 120 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்த அனிதா, நம்மை சந்தித்து பேசினார்.

"என்னுடைய சொந்த ஊர் அருப்புக்கோட்டை. அப்பா செல்வராஜ். அங்குள்ள பிரபல தனியார் கம்பெனியில் ஹெச்.ஆராக பணியாற்றுகிறார். பாரம்பரியமிக்க குடும்பத்தை சேர்ந்த நான், எம்.சி.ஏ வரை படித்துள்ளேன். அப்போது குமார் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டேன். எங்களது மணவாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று விட்டோம். இதன்பிறகு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நான் பணியாற்றினேன். அப்போது அங்கு டிரைவராக பணியாற்றிய சுரேசை கரம்பிடித்தேன். எங்களுக்கு சைலேஷ் என்ற ஆண் குழந்தை பிறந்தது.

மகிழ்ச்சியாக சென்ற எங்கள் குடும்ப வாழ்க்கையில் சென்னையை சேர்ந்த ஜோதியால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. பிசினஸ் தொடங்க நான் அவரிடம் கொடுத்த 10 லட்சம் ரூபாயை கேட்டதற்கு என்னைப் பற்றி அவதூறாக வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி இருக்கிறார். இதனால் அவர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 2014ல் புகார் கொடுத்தேன். இந்த சூழ்நிலையில் ராஜபாளையத்தை சேர்ந்த மலையரசன் என்பவரிடம் ஐகோர்ட்டில் நான் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக சென்னை உயர்நீதிமன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா என்னை கைது செய்தார்.  அப்போது கூட என்தரப்பு நியாயத்தை அவரிடம் கூறினேன். ஆனால், அவர் எதையும் கேட்காமல் என்னை பாலியல் வழக்கில் கைது செய்துவிடுவதாக மிரட்டினார். எனக்கு உதவ யாருமே இல்லை. இதற்கிடையில் மீடியாக்களில் நான், பல ஆண்களை ஏமாற்றி பணம் பறித்ததாக செய்திகள் வெளியிட்டன. அது உண்மையல்ல.

 

உண்மையிலேயே என்னை வைத்துதான் பலர் ஆதாயம் அடைந்தனர். ஜோதி, என்னை தன்னுடைய தங்கை என்று சொன்னதோடு பலருக்கு திருமணம் செய்து கொடுப்பதாக கூறி பணம் வாங்கியுள்ளார். அக்காள் என்று நம்பி அவரிடம் பணத்தை இழந்ததோடு, என்னுடைய வாழ்க்கையே கேள்விகுறியாக்கி விட்டேன்" என்ற அனிதாவால் தொடர்ந்து பேச முடியவில்லை.

சிறிது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அடுத்த சப்ஜெட்டுக்குச் சென்றார். என்னுடைய வாழ்க்கையில் அவனை சந்தித்து இருக்கக்கூடாது என்ற அனிதாவின் குரலிலும், கண்களிலும் கோபம் தாண்டவமாடியது. வார்த்தைகள் அனலாக கொட்டின. "2015ஆம் ஆண்டு அருப்புக்கோட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் சென்னைக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்ய அடிக்கடி செல்வேன். அப்போது கண்டக்டர் துளசி என்பவர் அறிமுகமாகினார். ஒருநாள், துளசி, என்னிடம், தன்னுடைய தம்பி வெங்கடேசன், இன்ஜினீயரிங் படித்துள்ளார். அவருக்கு சென்னையில் வேலைவாங்கி கொடுக்க முடியுமா என்று கேட்டார். இதன்பிறகு வெங்கடேசன், என்னுடைய செல்போனில் அடிக்கடி பேசினார். இருவரும் நட்பாகப் பழகினோம். இந்தசமயத்தில் என்னுடைய கடந்தகால வாழ்க்கையை குறித்தும், ஜோதியிடம் பணம் கொடுத்தது குறித்தும் அவரிடம் சொன்னேன். உடனே, என்னுடைய நண்பர் கருப்பசாமி, திருச்சி காவல்துறையில் மோப்பநாய் பிரிவில் பணியாற்றுகிறார். அவனிடம் உங்கள் பிரச்னையைச் சொன்னால் ஏதாவது ஒரு வழிசொல்வான் என்று போன் நம்பரை கொடுத்தார். ஆனால் கருப்பசாமியிடம் நான் பேசவில்லை. இரண்டு நாட்கள் கழித்து கருப்பசாமியே என்னிடம் போனில் பேசினார். அப்போது, காவல்துறையில் தனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னார். அதை நம்பி அவரிடம் என்னுடைய பிரச்னைகள் அனைத்தையும் சொன்னேன். இதன்பிறகு கருப்பசாமி, தன்னுடைய குடும்ப பிரச்னைகள் மற்றும் தன்னுடைய காதல் தோல்வி என அனைத்தையும் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

இதையடுத்து எனக்கு வேலைவாங்கித் தருவதாக கூறி திருச்சி, சுப்பிரமணியபுரத்தில் உள்ள போலீஸ் குடியிருப்புக்கு வரும்படி சொன்னார். அதைநம்பி அங்கே நான் சென்றேன். அப்போது, அவரது குடும்பத்தினர் அங்கு இருந்தனர். அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திய கருப்பசாமி, என்னை தொழில் பாட்டனராக சேர்த்துக் கொள்வதாக கூறினார். இதன்பிறகு என்னுடைய அக்கவுண்ட்டுக்கு கருப்பசாமி குறிப்பிட்ட ஒரு தொகையை செலுத்தியதோடு என்னுடைய ஏ.டி.எம். கார்டையும் வாங்கி கொண்டார். ஏ.டி.எம்மைப் பயன்படுத்தி சில ஜூவல்லரிகளில் தங்க நகைகள், டூவிலர், வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கியுள்ளார். இவ்வாறு நட்பாக பழகிய அவர், திடீரென என்னை காதலிப்பதாக கூறினார். அப்போது நான், என்னுடைய பிரச்னைகளை கூறினேன். அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்வதாக கூறினார். இந்தசமயத்தில் என்னுடைய தங்க நகைகள் ஏலத்துக்கு வந்தது. அதை மீட்ட கருப்பசாமி எனக்கு 1,50,000 ரூபாய் கொடுத்தார். திருச்சியில் கருப்பசாமி வீட்டுக்கு என்னை வரும்படி வெங்கடேஷ் போனில் தெரிவித்தார். அப்போது, தங்க நகை, லேப்டாப்வுடன் சென்றேன். அங்கு வந்த போலீஸாருடன் சேர்ந்து கருப்பசாமி, என்னுடைய நகை, லேப்டாப்பை பறித்துக் கொண்டார். பணத்தைக் கொடுத்தால் லேப்டாப் மற்றும் தங்க நகைகளை திரும்ப தருவதாக அவர்கள் கூறினர். அதை நம்பி 24.12.2015ல் பணத்தை வங்கி மூலம் அனுப்பினேன். இதன்பிறகும் அவர்கள் நகை, லேப்டாப்களை தரவில்லை. அந்த லேப்டாப்பில் கருப்பசாமி மற்றும் அவர்களது நண்பர்கள் செய்துவரும் 'இல்லீகல் பிசினஸ்' விவரங்களும், நாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இருந்தன. 

இந்த சமயத்தில் என்னுடைய மாமியார், சென்னையில் இறந்து விட்டார். அங்கு சென்ற போது கருப்பசாமி என்னை போலீஸில் சிக்க வைத்து விட்டார். சிறையிலிருந்து வந்தபிறகும் கருப்பசாமியிடம் போனில் பேசினேன். அப்போது அவர் என்னை அசிங்கமாக திட்டினார். அதோடு என்னையும், என் குழந்தையையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இவ்வளவு அவமானத்துக்குப் பிறகு என்னை என் குடும்பத்திலும், கணவர் வீட்டிலும் சேர்க்கவில்லை. இதனால் தனிமரமாக நியாயத்துக்காகப் போராடி வருகிறேன். போலீஸ் துறையில் இருந்து கொண்டு காதலிப்பது போல நம்பிக்கை மோசடி செய்த கருப்பசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் கொடுத்துள்ளேன்" என்றவரின் வார்த்தைகளில் அனல் கொட்டியது.

ஆடிகார் குறித்து அவரிடம் கேட்ட போது 'ஆடிமாசத்துல சைக்கிள் வாங்கவே எனக்கு வழியில்லை. ஆடிகாரா....' என்றார். 

அனிதாவை ஜாமீனில் எடுத்த வழக்கறிஞர் ச.தமிழ்வேந்தன் கூறுகையில், "சிறையில் வாடுவோருக்காக சட்ட உதவிகளை செய்து வருகிறேன். அனிதாவின் வாழ்க்கையில் ஒரு கும்பல் விளையாடிவிட்டது. அவரை சந்தித்து பேசியபோது அவர் சொன்ன தகவல்கள் என்னையே கண்கலங்க வைத்துவிட்டது. இதனால் அவருக்கு சட்டரீதியான உதவிகளை செய்து வருகிறேன். ஜோதி என்ற பெண்ணால் அவர் ஏமாற்றப்பட்டு இருக்கிறார். அதே பெண், அனிதாவுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான தகவல்களை சொல்லி உள்ளார். அனிதாவின் லேப்டாப்பில் அனைத்து உண்மைகளும் புதைந்து இருக்கின்றன. அதை எதிர்தரப்பினர் வைத்துக் கொண்டு அனிதாவை மோசமான பெண் போல சித்தரித்து விட்டனர். உண்மையில் அனிதாவை அவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதோடு போலீசிலும் சிக்க வைத்திருக்கிறார்கள். இதனால்தான் அனிதா வழக்கில் இதுவரை போலீஸரால் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்ய முடியவில்லை. 

 

 

அனிதாவுக்கு சென்னையில் மட்டுமல்லாமல் ராமநாதபுரம் மற்றும் அருப்புக்கோட்டையில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்கில் ஆஜராக சென்னையிலிருந்த அனிதாவை அழைத்துச் சென்ற போலீஸ்காரர்கள் கூட அவரிடம் அத்துமீறி  நடந்துள்ளனர். வேலியே பயிரை மேய்ந்தால் எங்கு நியாயம் கிடைக்கும். அனிதா வழக்கில் மறைந்திருக்கும் உண்மைகளை நிச்சயம் வெளியில் கொண்டு வருவோம். போலீஸ் சீருடையில் உலாவரும் உண்மை குற்றவாளிகளின் முகத்திரையை கிழிப்போம்" என்றார்.

இது தொடர்பாக கருப்பசாமியின் வழக்கறிஞர் சுரேசிடம் பேசினோம். "கருப்பசாமியின் நண்பர்கள் மூலம் அனிதா அறிமுகமாகியுள்ளார். அப்போது, கருப்பசாமியிடம் ஆசையாக பேசி அவரை அனிதா ஏமாற்றியுள்ளார். அனிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள், லேப்டாப் எல்லாம் நீதிமன்றத்தில் உள்ளன. அதை திரும்ப பெற அனிதா தரப்பினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அனிதாவால் ஏமாந்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். கருப்பசாமியை தேவையில்லாமல் அவர் வம்புக்கு இழுத்துள்ளார். சட்டப்படி அவரது குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வோம்" என்றார்.

எஸ்.மகேஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement