வெளியிடப்பட்ட நேரம்: 16:11 (13/10/2016)

கடைசி தொடர்பு:16:49 (13/10/2016)

தனியார் அடகு கடைகளில் மட்டுமல்ல... வங்கிகளிலும் இப்படி மோசடிகள் நடக்கும்!

திருச்சி : போலி நகைகளை வாடிக்கையாளர்கள் பெயரில் அடமானம் வைத்தது போல் கணக்கு காட்டி,வங்கி ஒன்று 65 லட்சம் வரை மோசடி நடந்துள்ளது புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை ரயில்நிலைய சாலையில் பாங்க் ஆப் திருவாங்கூர் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்றதாக வாடிக்கையாளர்கள் 31 பேர் மீது அடுத்தடுத்து புகார் கிளம்ப அதிர்ச்சியடைந்தனர் வாடிக்கையாளர்கள். இதுதொடர்பாக போலீஸில் வங்கி நிர்வாகம் புகார் அளிக்க 31 பேரையும் விசாரணைக்கு உட்படுத்தியது போலீஸ்.

விசாரணையில் எங்களுக்கு இந்த மோசடிக்கும் எந்த தொடர்பும் இல்லை என வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். நகை மதிப்பீடு செய்யும் அதிகாரி சிவக்குமார், எங்கள் பெயரில் போலி நகைகளை வைத்து பணத்தை மோசடி செய்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.  பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் லோகநாதனை சந்தித்து புகாரும் அளித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான முத்துக்குமாரிடம் பேசினோம். "என்னுடைய மனைவி பெயரில் இந்த வங்கியில் நகை வைத்திருந்தேன். நகை வைக்கும்போது, நகை மதிப்பீடு செய்யும் அதிகாரியான சிவக்குமார், சில ஆவணங்களில் கூடுதலாக கையெழுத்து வாங்கியிருக்கிறார். அதன்மூலம் போலி நகைகளை எங்கள் பெயரில் வைத்து பணத்தை சிவக்குமார் மோசடி செய்திருக்கிறார். வங்கி அதிகாரி சிவக்குமார் மோசடி செய்துள்ள நிலையில், 'எங்கள் வங்கிக்கணக்கை முடக்கி விட்டதாகவும், நாங்கள் தான் போலி நகையை வைத்து மோசடி செய்ததாகவும், வாங்கிய பணத்தைக் கட்டாவிட்டால் நகை பறிபோய் விடும். கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வங்கி அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். இதில் வங்கி அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம்," என்றார்.

வங்கி வாடிக்கையாளர் பிரதீபா, “இந்த வங்கியில தான் கடந்த 4 வருஷமா என்னோட நகைகளை அடகு வைச்சுட்டு வர்றேன். திடீர்னு நான் போலி நகையை வைச்சு 2.50 லட்ச ரூபாய் மோசடி செஞ்சுட்டதா போலீஸ் சொன்னாங்க. அப்புறம் தான் இதுல நகை மதிப்பீடு அதிகாரி முறைகேடு செஞ்சது தெரியவந்துச்சு. நகை மதிப்பீட்டு அதிகாரி சிவக்குமார் என் வீட்டு பக்கத்துல தான் இருக்காரு. கடைசியாக நகை அடகுவைக்கும்போது, சில படிவங்கள்ல கூடுதலாக கையெழுத்து வாங்கி நான், வைக்கறது மாதிரி, போலி நகையை வைச்சு பணத்தை எடுத்திருக்கார். இதேமாதிரி நிறைய பேரிடம் நடந்திருக்கு. எங்க வங்கி கணக்கெல்லாம் முடக்கீட்டாங்க," என்றார்.

இதுகுறித்து வங்கி வட்டாரத்தில் விசாரித்தோம். "போலி நகை மோசடி புகாரில் சிவக்குமார் மீது சந்தேகம் ஏற்பட, அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள் அதிகாரிகள். அப்போது மோசடி உறுதிப்படுத்தப்பட்டு, அவரிடம் இருந்து 10 லட்சம் வரை மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மீத பணத்தையும் செட்டில் செய்ய அவருக்கு வங்கி நிர்வாகம் அவகாசம் வழங்க.. அதற்குள் சிவக்குமார் தலைமறைவானார்," என சொல்லப்படுகிறது.
இதுதொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் பேசினோம். "வங்கி விபரங்கள் அனைத்தும் ரகசியமானவை. இது குறித்து எங்கள் உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றார்கள். அதுமட்டுமல்லாமல் நடந்த முறைகேடுகள் குறித்து காவல்துறையில் புகார் கொடுத்துள்ளோம். அவர்களும் விசாரணை நடத்திவருகின்றார்கள்," என்று மட்டும் சொன்னார்கள்.

தனியார் நிறுவனங்களால் ஏமாற்றப்படுகிறோம் என்று தான் வங்கிகளை நாடுகிறார்கள். வங்கிகளிலும் மோசடி செய்தால்...?

- சி.ய.ஆனந்தகுமார்

படங்கள்: ம.அரவிந்த்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்