Published:Updated:

`வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது!' -7 நாளில் 1000 கிமீ கடந்து வந்த தமிழக இளைஞர்கள்

``ஊரடங்கு உத்தரவால் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கிக்கொண்டோம். அரசுகள் உதவும்'னு காத்துக்கிடந்தோம். அது நடக்கல. அதனால் நடக்க ஆரம்பித்தோம்.  7 நாள்களில் 1,000 கி.மீ கடந்து திருச்சி வந்து சேர்ந்தோம்" என்கிறார்கள் 7 தமிழக இளைஞர்கள்.

மகராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் மாவட்டத்தில் இயங்கிவரும் தனியார் வேளாண் நிறுவனத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். அதில் திருவாரூரைச் சேர்ந்த விஜயன், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சோபன்பாபு, ராகுல், நித்திஷ், வரதன் மற்றும் பிரபாகரன் உள்ளிட்ட 7 பேரும் அடக்கம்.

இந்த நிலையில், கடந்த 24-ம் தேதி, கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்காரணமாக, இவர்கள் பணியாற்றிய நிறுவனமும், தங்கியிருந்த விடுதியும் மூடப்பட்டன. இதனால், அங்கு பணியாற்றிய இளைஞர்கள் தடுமாறிப் போனார்கள்.

தமிழக இளைஞர்கள்
தமிழக இளைஞர்கள்

அவர்கள் உதவிகள் கேட்கும் வீடியோக்கள் வெளியானது. அவர்களுக்குத் திருச்சி மற்றும் திருவாரூர் கலெக்டர்கள் உதவும்படி தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் தங்க இடமும், உணவு இன்றி தவித்த அந்த இளைஞர்களில் 7 பேர் மட்டும் நடந்தே தமிழகம் வருவதற்கு முடிவெடுத்தனர். அதன்படி, கடந்த 29-ம் தேதி இரவு மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரிலிருந்து தங்கள் நடைப்பயணத்தை தொடங்கினர்.

தொடர்ந்து நடக்க முடியாமல் சோர்ந்த இளைஞர்களுக்கு, திருச்சியைச் சேர்ந்த சிலர் உதவ அவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டபிறகு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நம்மிடம் பேசிய பிரபாகரன், ``குடும்பக் கஷ்டத்தால், வேலைக்குப் போனோம். திடீரென ஊரடங்கு போட்டதால் தவித்துப் போய்விட்டோம். மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகம் என்பதால் அக்கம் பக்கத்தினர்கூட எங்களுக்கு உதவ முன்வரவில்லை.

தமிழக இளைஞர்கள்
தமிழக இளைஞர்கள்

எங்களின் நிலை குறித்து திருவாரூர் மற்றும் திருச்சி கலெக்டருக்கும் மனுகொடுத்தோம். அவர்களும் எங்களுக்கு உதவ சென்னைக்குப் பரிந்துரை செய்தார்கள்.

எங்களைப் போல் வெளிமாநிலங்களில் சிக்கித் தவிப்பவர்களுக்கு தமிழக அரசு உதவுது'னும் சொன்னாங்க. ஆனால் சென்னையிலிருந்து ஒரு போன்கூட வரவில்லை. எவ்வித உதவியும் கிடைக்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உதவிய லாரி டிரைவர்கள்!

இனி இவர்களை நம்பி பலனில்லை என நடக்க ஆரம்பித்தோம். இடையில் எண்ணெய், காய்கறி உள்ளிட்ட சரக்கு லாரி டிரைவர்கள் உதவினாங்க. நடுவில் மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழக எல்லையில் கடுமையாக சோதித்தார்கள். எங்கள் நிலைமையை விளக்கிச் சொன்னபிறகு அனுமதித்தார்கள்.

கேரள இளைஞர்கள்
கேரள இளைஞர்கள்

7 நாள்கள், நடந்தும், லாரிகளில் பயணித்தும் திருச்சி வந்து சேர்ந்தோம். தொடர்ந்து, எங்களால் நடக்கமுடியாத நிலையில், திருச்சியில் செந்தில் மற்றும் அருண் என்பவர்களின் உதவி கிடைத்தது. அவர்கள் மூலம் திருச்சி மாவட்ட கலெக்டருக்கு மனு அளித்து, திருச்சியிலிருந்து காரில் சொந்த ஊர் வந்து சேர்ந்தோம்.

மலேசியாவில் தவிக்கும் தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தமிழர்!

அந்த 7 நாள்கள் பயணத்தில் நாங்கள் அனுபவித்த வலிகளை வார்த்தைகளில் சொல்ல முடியாது. எங்களைப் போல பலர் வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கிறார்கள் அவர்களுக்காவது தமிழக அரசு உதவணும்” என்றனர்.

திருச்சியில் தவிக்கும் கேரள இளைஞர்கள்!

கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சேர்ந்த சஜூ, நிஷா உள்ளிட்ட 5 பேர் செண்டை மேளம் இன்னிசைக் குழுவின் பயிற்சிக்காகத் திருச்சி வந்தனர். இவர்களும் ஊரடங்கு உத்தரவால் திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் சிக்கிக் கொண்டனர். மீண்டும் அவர்கள் கேரளா திரும்பிச் செல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில், கேரளா செல்ல உதவும்படி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனுக் கொடுத்தனர். இந்தச் சூழலில் சொந்த ஊர் செல்வது சரியானது இல்லை. உங்களுக்கு உதவுகிறோம் என மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு