Published:Updated:

`#janathacurfew அழைப்பு எதிரொலி’ - தேனி உழவர் சந்தையில் ஒரே நாளில் 70 டன் காய்கறிகள் விற்பனை!

தேனி உழவர் சந்தை
தேனி உழவர் சந்தை

நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக மக்கள் காய்கறிகள் வாங்க வந்ததே இதற்குக் காரணம்.

கொரோனா தொற்று பரவாமல் இருக்க, நாளை ஒரு நாள் சுய ஊரடங்குக்கு பிரதமர் மோடி அழைப்பு விட்டிருக்கும் சூழலில், இன்று காலை தேனி உழவர் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வழக்கத்தைவிட அதிகமான மக்கள் கூடியதால், சந்தைக்கு வந்திறங்கிய காய்கறிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.

வரிசையில் காந்திருந்த பொதுமக்கள்
வரிசையில் காந்திருந்த பொதுமக்கள்

தேனி நகரின் மீறு சமுத்திர கண்மாய் அருகே அமைந்துள்ளது உழவர் சந்தை. தினமும் அதிகாலை திறக்கப்படும் உழவர் சந்தைக்கு இன்று மக்கள் கூட்டம் அதிகமாக வந்தது. கைகளில் பைகளுடன் வரிசையில் காத்திருந்த பொதுமக்கள், எந்தவித அவசரமும் காட்டாமல், பொறுமையாகக் காய்கறிகளை வாங்கிச் சென்றனர். முன்னதாக, உழவர் சந்தை வாயிலில், தேனி நகராட்சி சார்பில் கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, கைகள் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

`இடுக்கியில் கொரோனா கண்காணிப்பில் 54 பேர்..!' - அச்சத்தில் தேனி மக்கள் #corona

கைகளைச் சுத்தம் செய்த பின்னரே, சந்தைக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். வழக்கமாக, தேனி உழவர் சந்தைக்கு தினமும் 2,000 பேர் வருவார்கள் என்றும், ஆனால், இன்று வழக்கைத்தைவிட அதிகமாக 5,000 பேர் வரை வந்திருக்கலாம் என்றும் உழவர் சந்தை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தினமும் 30 டன் அளவிலான காய்கறிகளே விற்பனையாகும். ஆனால், இன்று 70 டன் காய்கறிகள் ஒரே நாளில் விற்பனையானது. அதேபோல, காலை 9 முதல் 10 மணிக்குள் காய்கறிகள் அனைத்தும் விற்றுவிடும் சூழலில், கைகளைக் கழுவிய பின்னரே மக்கள் அனுமதிக்கப்பட்டதால், 12 மணி வரை விற்பனை நடைபெற்றுள்ளது.

நகராட்சி நிர்வாகம் சார்பில் கைகளைக் கழுவ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நகராட்சி நிர்வாகம் சார்பில் கைகளைக் கழுவ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொரோனா அச்சம்… 10,000 தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலைத் திட்டம்? - தேனி கலெக்டர் ஆலோசனை

நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக மக்கள் காய்கறிகள் வாங்க வந்ததே இதற்குக் காரணம். இது ஒருபுறம் என்றால், தேனி மாவட்டம் கம்பம் உழவர் சந்தை, நாளை வழக்கம் போல் இயங்கும் என சந்தை நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இது தொடர்பாக, சந்தை நிர்வாகத்திடம் கேட்டபோது, ``சந்தை மூடப்படுவது குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் வரவில்லை” எனப் பதிலளித்தனர். ஒருபுறம் மக்கள் அனைவரும் காய்கறிகளை வாங்கக் குவிந்துகொண்டிருக்கும் சூழலில், எந்த வித சலனமும் இல்லாமல், கம்பத்தில் நாளை உழவர் சந்தை செயல்படும் என எழுதி அறிவிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு