வெளியிடப்பட்ட நேரம்: 15:59 (19/10/2016)

கடைசி தொடர்பு:16:09 (19/10/2016)

அரசின் பெண்கள் திருமண உதவித்திட்டம்... A-Z தகவல்கள்.

ஐப்பசி மாதம் பிறந்தாச்சு உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு திருமணம் பேசியிருப்பீர்கள்.உங்கள் வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைகளுக்களுக்கு திருமணம் பேசியிருக்கிறீர்கள் எனில், அரசு பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு நிதிதிட்ட உதவிகளை செய்து வருகிறது.  பெண்களுக்கான மூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமண நிதிதிட்டம் பற்றி அறிய இங்கு இருக்கும் 1 முதல் 7 வரையிலான எண்களை வரிசையாக அழுத்தி,பயன் பெறுங்கள்.

விண்ணப்பம்

உங்கள் பகுதியில் இருக்கும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கிடைக்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் என்ற படிவத்தைப் பூர்த்திசெய்யவும். அதில் கேட்கப்படும் ஆவணங்களை இணைத்து, நீங்கள் வசிக்கும் பகுதி ஊரகம் எனில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், நகராட்சி என்றால் நகராட்சி ஆணையத்திலும், மாநகராட்சி என்றால் மாநகராட்சி ஆணையத்திலும் கொடுக்க வேண்டும்.

நிதி விவரம்

திருமணம் செய்துகொள்ளும் பெண் 10-ம் வகுப்பு வரை பள்ளியில் படித்திருந்தால் ரூபாய் 25,000 க்கான காசோலையும், தாலி செய்ய 4 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படும். மணப்பெண் பட்டயப் பயிற்சியோ அல்லது பட்டப் படிப்போ முடித்திருந்தால் ரூபாய் 50,000 க்கான காசோலையும், தாலி செய்ய 4 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பம் செய்பவரின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூபாய் 72,000 க்குள் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில், ஒரு பெண்ணுக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன் பெற முடியும்.

எப்போது விண்ணப்பிக்க வேண்டும்

திருமணத் தேதிக்கு 40 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். திருமணத் தேதியன்றோ அல்லது திருமணம் முடிந்த பின்போ அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டது.

தகுதி

மணப்பெண் 18 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும். பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு தேர்ச்சியோ அல்லது தோல்வியோ அடைந்திருக்க வேண்டும். தனியார் தொலைதூரக்கல்வி மூலம் படித்திருந்தால் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் என்றால் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. பட்டதாரி பெண்கள் எனில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியிலோ, பல்கலைகழகத்திலோ,தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இணைக்க வேண்டியவை

வருமானச் சான்று, திருமண அழைப்பிதழ், கல்விச்சான்று நகல் (மதிப்பெண் பட்டியல்), பள்ளி மாற்றுச்சான்று நகல்,

குறிப்பு

நீங்கள் விண்ணப்பித்த தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும். இது தொடர்பான மேலும் அதிக தகவல்களுக்கு உங்கள் பகுதியில் இருக்கும் மாவட்ட சமூகநலத்துறையையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையோ அணுகவும்.

 

 

 

-சு.சூர்யா கோமதி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்