வெளியிடப்பட்ட நேரம்: 17:01 (26/10/2016)

கடைசி தொடர்பு:18:52 (26/10/2016)

' அரசை நம்புவதைவிட, இதைச் செய்யுங்கள் மக்களே!'  -1 அடி உயரமும் 184 டி.எம்.சி மழை நீரும் 

மிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இன்னமும் தொடங்கவில்லை. 'நதிநீர் உரிமைகளுக்காகப் போராட வேண்டிய சூழலில், பெய்கின்ற நீரை உரிய முறையில் பாதுகாப்பது அவசியம்' என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். 

சென்னை வானிலை ஆய்வு மையத்தில் இருந்து வெளியான அறிக்கை ஒன்றில், ' அக்டோபர் 20-ம் தேதி தேதி முதல் வடகிழக்குப் பருவமழை பெய்யும்' எனத் தெரிவித்திருந்தது. அதன்பிறகும் மழை பெய்யாததால், ' 27-ம் தேதி பெய்யும்' என்றனர். பிறகு, ' 28-ம் தேதியில் இருந்து தொடங்கும்' என்றவர்கள், தற்போது, '30-ம் தேதியில் இருந்து பருவமழை துவங்குவதற்கு சாதகமான சூழல் உள்ளது' என அறிவித்திருக்கிறார் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்தர். இதுகுறித்துப் பேசும் வானியல் ஆய்வு மைய அதிகாரிகள், ' வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்து, விலகிக் கொள்ளும்போதுதான் தென்மேற்கு பருவமழை நிறைவு பெறும். அதன்பிறகு, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் அமையும். தற்போது அதற்கான அறிகுறிகளே தென்படவில்லை. பருவமழை தாமதமாவதற்கு காரணம், வடகிழக்கிலிருந்து காற்று வீசாமல், வடமேற்காக காற்று வீசுவதால்தான். மேலும், இம்முறை வழக்கமான மழை அளவைவிட பத்து சதவிகித அளவு குறைவாகவே இருக்கும்' என்கின்றனர். 

"மழை பெய்வதற்கான சாதகமான சூழல் உள்ளது என்றுதான் வானிலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எப்போது பெய்யும் என உறுதியாகத் தெரியவில்லை. மழை பெய்வதற்கு முன்னால், செய்யப்பட வேண்டிய சில முக்கியமான வேலைகள் இருக்கின்றன" என விளக்கினார் தி.மு.க செய்தித் தொடர்பு செயலாளரும் வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன். அவர் நம்மிடம், " காவிரி நதிநீர் உரிய நேரத்தில் வந்து சேராததால், டெல்டா மாவட்ட விவசாயிகள் கொடும் துன்பத்துக்கு ஆளானார்கள். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் கர்நாடக அரசு கண்டுகொள்ளவில்லை. நமக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவதற்குக்கூட மத்திய அரசு மறுக்கிறது. தற்போது பெய்ய இருக்கின்ற வடகிழக்கு பருவக்காற்று, நமக்கு முக்கியமான மழைப் பொழிவைத் தர இருக்கின்றது. ' வரப்புயர நீர் உயரும்; நீர் உயர நெல் உயரும்'  என்ற பாடலுக்கு  ஏற்றவாறு நெல் வயலின் வரப்புகளை உயர்த்த வேண்டும். அதிலும், போதிய அகலத்துடன் வரப்புகளை அமைத்தால் பெய்கின்ற மழையின் பெரும்பகுதியை நம்மால் தேக்கிவிட முடியும். 

தமிழ்நாட்டில் நெல் பயிரிடும் பரப்பளவு என்பது 42,63,220 ஏக்கர்கள். இதில், ஓர் அடி உயரத்துக்கு நீரைத் தேக்கினால், அனைத்து வயல்களிலும் மொத்தமாக சேர்த்து 184 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும். நமக்குக் கிடைக்கும் அதிகபட்ச ஆண்டு மழைப் பொழிவு என்பது மூன்று அடியாகும். அதில், ஓர் அடியைத் தேக்கி வைத்தாலேயே இவ்வளவு தண்ணீர் நமக்குக் கிடைக்கும். இதையொட்டி, பாரம்பரிய நெல்ரகத்தை  ஆவணி மாதம் நட்டுவிட வேண்டும். வரப்புகளை அகலகப்படுத்தும் வேலைகளை விவசாயிகளிடம் ஒப்படைத்துவிட்டு, அவர்களுக்கான செலவுத் தொகையை அரசு வழங்கலாம். இதனால் சாகுபடிக்கும் நீர் சேமிக்கப்படுவதோடு, பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே, கரையை உடைத்துக் கொண்டு வெள்ளம் பாய்ந்தது; வீடு இடிந்தது என்பன போன்ற அபயக்குரல்கள் எழுவதற்கான வாய்ப்புகளும் இருக்காது. அதேநேரத்தில், மீதமாகும் நீரை நிலப்பகுதிகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளுக்குள் ஒரு வடிகட்டி வாய்க்கால் வழியாக செலுத்தலாம். மிகக் குறைந்த செலவிலான திட்டம் இது. காவிரி டெல்டா பகுதியில் அணைகட்டி நீரை தேக்க முடியாது. 

ஆனால் நிலத்தடி நீராக சேமிக்க முடியும். எண்ணெய்க் கம்பெனிகள் நிலத்தடி நீரை மாசுபடுத்தி உப்புக் கரைசலாக மாற்றிவிட்டன. பெய்கின்ற மழைநீரை நிலத்தடிக்குள் செலுத்தினால் நிலத்தடி நீரின் அளவும் உயரும். நீரின் தரமும் சீராகும். 100 அடி ஆழத்தில் உள்ள கிணற்று நீர் 50 அடிக்கு உயர்ந்தால் நீர் இறைப்பதற்கு ஆகும் மின்சக்தி பாதியாகக் குறையும். இதனால், சந்தையில் இருந்து வாங்க வேண்டிய மின்சக்தியின் அளவு பெருமளவு குறையும். இதற்கான பணிகளில் அரசு விரைந்து செயல்பட வேண்டும். இதன் ஒருபகுதியாக, சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அழிக்க வேண்டியது அவசியம். அடுத்துச் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி. மணல் கொள்ளையைத் தடுப்பது. இதனால், நீரைத் தேக்கி வைப்பதில் பெரிய சிக்கல் ஏற்படுகிறது. கரூரில் மணல் அள்ளுவதற்கு எதிராக இன்றும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கொசஸ்தலை ஆறே உடைந்து போன செய்தியும் வெளியானது. ஆற்று மணல் கொள்ளையைத் தடுப்பதில் பொதுமக்கள் முனைப்போடு செயல்பட்டு போராட வேண்டும். வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்குள் குறைந்தபட்சமாக இந்தப் பணிகள் நடந்தால், விவசாயப் பணிகளில் எந்தவித சிரமமும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை" என்றார் விரிவாக. 

- ஆ.விஜயானந்த்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்