பாதுகாப்பில்லாத பட்டாசு கடைகளுக்கு அனுமதி...! கடுப்பான நீதிபதிகள்...!

சிவகாசி பட்டாசு குடோன் விபத்தில் 9 பேர் பலியான சம்பவத்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, விருதுநகர் ஆர்.டி.ஓ.செந்தில் குமரன், எஸ்.பி ராஜராஜன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள். 

பால்குட பாதுகாப்புக்குப் போன எஸ்.பி

எஸ்.பி. ராஜராஜனிடம் "நீதிமன்றம் ஆஜராகச் சொன்ன தேதியில் வராமல் இன்று வந்திருக்கிறீர்களே?" என்று நீதிபதி கேட்டார். அதற்கு எஸ்.பி. ராஜராஜன், "அ.தி.மு.க-வினர் 5 ஆயிரம் பேர் பால்குடம் எடுத்ததால் பாதுகாப்பு கொடுக்க வேண்டியிருந்தது. அதனால் நேற்று வர முடியவில்லை" என்றார்.

இதனால், கோபமடைந்த நீதிபதிகள், "கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து விருதுநகர் மாவட்டத்தில் நடந்த பல்வேறு வெடி விபத்துகளில் 58 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இதில்  16 வழக்குகளின் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. 25 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 16 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் விடுதலையாகி விட்டார்கள். ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் இயற்கையான முறையில் இறந்து விட்டார் என்று தகவல் அளித்து இருக்கிறீர்கள். ஏன், ஒரு வழக்கில் கூட தண்டனை வாங்கி கொடுக்கப்படவில்லை?” என்று கேள்வி எழுப்பினர்.

 

சி.பி.ஐ விசாரிக்கத் தகுதியான வழக்கு 

அதோடு, "இவ்வளவு மோசமாக போலீஸ் விசாரணை இருக்கிறது? ஏன் சாட்சிகளை ஒழுங்காக விசாரிக்கவில்லை?" என்று அடுக்கடுக்காக நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு அரசு வழக்கறிஞர், " வழக்கின் சாட்சிகள், பட்டாசு ஆலைகளின் முதலாளிகளுடன் சமாதானப் போக்கைக் கடைபிடித்து வருகின்றனர். இதனால் வழக்குக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்கள்" என்றார். அதற்கு நீதிபதிகள், "இந்த வழக்கு  சி.பி.ஐ விசாரிக்கத் தகுதியான வழக்காக இருக்கிறது" என்றனர்.

அதற்கு எஸ்.பி ராஜராஜன், " நான் கடந்த செப்டம்பர் 2015-ல் தான் விருதுநகர் எஸ்.பி.யாக பொறுப்பேற்று விசாரித்து வருகிறேன். இனிமேல் இதை தீவிரமாக ஆய்வு செய்து விசாரிக்கிறேன்" என்றார். 

"சரி டைம் எடுத்துக்கொண்டு தீவிரமாக விசாரணை செய்யுங்கள். இந்த வழக்கில் ஸ்கேன் சென்டர் நிறுவன உரிமையாளர் டாக்டர் நாகேந்திரன் ஸ்கேன் சென்டரை விதிமுறை மீறி நடத்தி வந்திருக்கிறார். அவரைக் கைது செய்யாமல் வழக்கு மட்டும் போட்டு விசாரணை செய்யுங்கள்" என உத்தரவிட்டார்.

டி.ஆர்.ஓ. முத்துக்குமாரிடம் " இதுவரை இறந்தவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கியிருக்கிறீர்களா?" என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு டி.ஆர்.ஓ. "மாவட்ட ஆட்சியர் சார்பில் அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது" என்றார். உடனே நீதிபதி, "மாவட்டத்தில் விபத்து நிவாரண நிதித்தொகையாக எவ்வளவு இருக்கிறது" என்றார்.

"4.5 கோடி இருக்கிறது" என்றார் டி.ஆர்.ஓ.

" அந்த நிதியில் இருந்து இடைக்கால நிவாரணத் தொகையாக, இறந்தவர்களின் குடும்பத்தினர் ஒவ்வொருக்கும் 3 லட்சம் வழங்க வேண்டும். இதை ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.  

அடுக்கடுக்கான கேள்விகள்...

இதேபோல திருச்சியில் 86 பட்டாசு கடைகள், ஷாப்பிங் மால்கள்,ஹோட்டல்கள்,பேருந்து நிலையம் அருகில் விதிமுறைகள் மீறி இயங்கி வந்ததை அடுத்து, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பழனிச்சாமி, கமிஷனர் ஆகியோரை நேரில் அழைத்திருந்தது நீதிமன்றம்.

"விதிமுறைகள் மீறி இயங்கும் பட்டாசுக் கடைகளின் புகைப்படங்களை காட்டி இதற்கு யார் லைசன்ஸ் கொடுத்தது? " என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு கலெக்டர் " டி.ஆர்.ஓ-தான் அனுமதி கொடுத்தார் "  என்றார்.

பதிலுக்கு நீதிபதிகள், " நீங்கள் ஏன் ஆய்வு செய்யவில்லை?" என்று கேட்டனர். போலீஸ் கமிஷனர் சார்பாக துணை கமிஷனர் மயில்வாகணன் ஆஜர் ஆகியிருந்தார். அவர் "நான் நாளை உடனடியாக அதை அகற்ற நடவடிக்கை எடுக்கின்றேன்" என்று கூறினார். "மாவட்ட ஆட்சியர், கமிஷனர் ஆகியோர் ஆய்வு செய்யாமலேயே அனுமதி கொடுக்கிறீர்கள். பொது மக்கள் உயிரோடு விளையாடுகிறீர்களா?" என்று நீதிபதிகள் கேட்டனர். உடனடியாக பாதுகாப்பு இல்லாமல் இயங்கும் அனைத்து பட்டாசு கடைகளையும் அகற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதேபோல கரூரிலும் 41 கடைகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருக்கிறது. அதிலும் விதிமுறை மீறல் இருக்கிறதா ? என்று உயர் நீதிமன்றம் அமைத்த வழக்கறிஞர்கள் குழு ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

 

- சண்.சரவணக்குமார் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!