மத்திய பல்கலைக்கழங்களில் இடதுசாரிகள் ஆட்சி!  -வெற்றிக்காக கூட்டு சேர்ந்த பா.ஜ.க, காங்கிரஸ்  | Left front wins pondy central university students election

வெளியிடப்பட்ட நேரம்: 15:11 (27/10/2016)

கடைசி தொடர்பு:15:39 (27/10/2016)

மத்திய பல்கலைக்கழங்களில் இடதுசாரிகள் ஆட்சி!  -வெற்றிக்காக கூட்டு சேர்ந்த பா.ஜ.க, காங்கிரஸ் 

த்திய பல்கலைக்கழகங்களில் நடக்கும் மாணவர் பேரவைத் தேர்தல்களில் தொடர்ச்சியாக இடதுசாரிகள் வெற்றி வாகை சூடி வருகின்றனர். அந்த வகையில், பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர் பேரவையையும் கைப்பற்றியுள்ளனர். ' எங்களை வீழ்த்துவதற்காக பா.ஜ.கவும் காங்கிரஸும் ஒன்றுசேர்ந்த அதிசயமும் இங்கு நடந்தது' என அதிசயிருக்கிறார்கள் மாணவர் பேரவை நிர்வாகிகள். 

பாண்டிச்சேரி மாணவர் பேரவைத் தேர்தல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட அந்தமான் போர்ட்பிளேரில் உள்ள மெரைன் கேம்பஸ் உள்பட ஒட்டுமொத்தமாக எட்டாயிரம் மாணவர்கள் தேர்தலில் பங்கேற்றனர். இதில், இந்திய மாணவர் சங்கத்தோடு அம்பேத்கர் மாணவர் பேரவையும் கை கோர்த்தன. இவர்களை எதிர்த்து மாணவர் காங்கிரஸ், ஏ.பி.வி.பி உள்ளிட்ட அமைப்புகள் களத்தில் இறங்கின. இந்தத் தேர்தலில், 41 இடங்களை இடது முன்னணியும் 27 இடங்களை காங்கிரஸ், ஏ.பி.வி.பி வென்றுள்ளன. இதில், மாணவர் பேரவை தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை இடதுசாரிகள் வென்றுள்ளனர். 

இந்திய மாணவர் சங்கத்தின் பாண்டிச்சேரி பிரதேச செயலாளர் ஆனந்திடம் பேசினோம். 

"மாணவர் பேரவைத் தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறோம். கவுன்சிலர்கள் மூலம் மேயர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவதைப் போலவே, அந்தந்த துறைகளில் இருந்து மாணவர் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் அளிக்கும் ஓட்டுகளின் அடிப்படையில், தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். காரைக்கால், மாஹி, ஏனாம், போர்ட்பிளேர் ஆகிய பகுதிகளில் உள்ள பல்கலைக்கழக மையங்களில் இருந்து கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தத் தேர்தலில் மாணவர் காங்கிரஸ் தனியாக எந்த இடத்திலும் போட்டியிடவில்லை. களத்தில் நின்றவர்களை அவர்கள் பக்கம் இழுத்துக் கொண்டார்கள். இதற்காக, ஏராளமாகச் செலவு செய்தார்கள். ஓர் ஓட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் வரையில் செலவு செய்தனர். முடிவில், மாணவர் காங்கிரஸ் பக்கம் 17 கவுன்சிலர்களும் ஏ.பி.வி.பிக்கு இரண்டு இடங்களும் கிடைத்தன. எங்களைத் தோற்கடிப்பதற்காக, ஏ.பி.வி.பியோடு இணைந்து மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகளும் வேலை செய்தனர். அவர்களின் முயற்சி கைகூடவில்லை. அம்பேத்கர் மாணவர் பேரவை அமைப்பினரும், எங்களுடன் இணைந்து கடுமையாகத் தேர்தல் வேலை பார்த்தனர். இதனால், அதிகப்படியான இடங்களை வென்றோம்"  என நெகிழ்ந்தவர், 

" மாணவர்களுக்கான பிரச்னைகளில், தொடர்ந்து போராடி வருகிறோம். எங்களின் போராட்டத்தால் பல வெற்றிகளைப் பெற்றுள்ளோம். அண்மையில், மாணவர் பேரவையின் சார்பில் 'வைடர்ஸ்டேண்ட்' என்ற புத்தகத்தைக் கொண்டு வந்தோம். இந்த இதழை மாணவர்களே தயாரித்தார்கள். ' இந்தப் புத்தகம் மத்திய அரசுக்கு எதிராக இருக்கிறது' என்றுகூறி, ' எங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு' போராட்டம் நடத்தினார்கள். புத்தகத்தை விநியோகம் செய்ய அனுமதிக்காமல், அறைக்குள் பூட்டி வைத்தனர். 'இது இடதுசாரி இயக்கங்களை முடக்கும் சதி' என்பதைப் புரிந்து கொண்டோம். அனைத்தையும் முறியடித்து புத்தகத்தை விநியோகம் செய்தோம். எங்களின் போராட்டக் குணங்களே, வெற்றியை உறுதி செய்தன" என்றார் உற்சாகமாக. 

' மத்திய பல்கலைக்கழகங்களில் நடந்த மாணவர் பேரவை தேர்தல்களில், எங்களுக்குக் கிடைத்த நான்காவது வெற்றி இது' என உற்சாகப்படுகின்றனர் மார்க்சிஸ்ட்டுகள். 

- ஆ.விஜயானந்த் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்