வெளியிடப்பட்ட நேரம்: 16:51 (31/10/2016)

கடைசி தொடர்பு:19:44 (31/10/2016)

'எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்' - கண்ணீர் கதை சொல்லும் மேட்டூர் அணை பூங்கா

மேட்டூர் என்றாலே அனைவருக்கும்  'டக்'கென்று ஞாபத்துக்கு  வருவது 'மேட்டூர் அணை'தான்! மேட்டூர் மட்டுமல்ல தமிழகத்துக்குமான அடையாளமாகவும் மேட்டூர் அணையைச் சொல்லலாம்.... ஏனெனில், இதுதான் தமிழகத்தின் மிகப்பெரிய அணை!

சிறப்புவாய்ந்த 'மேட்டூர் அணைப் பூங்கா' தற்போது எப்படி இருக்கிறது?  என்பதை அறிய ஒரு விசிட் அடித்தோம்.

பூங்கா பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்தால், சாலையின் இருபுறமும் வரிசையாகக் கடைகள் வரவேற்கின்றன. சுடச்சுட பொரித்து வைக்கப்பட்டிருக்கும் மீன்களின் வாசம் சுண்டி இழுக்கிறது. வந்த வேலையைக் கொஞ்சம் மறந்துவிட்டு, கடையோரமாக ஒதுங்கி மீன்களை டேஸ்ட் பார்த்துவிட்டு மறுபடியும் பூங்கா நோக்கி நடையைக் கட்டினோம்.

பிரம்மாண்டமான உயரத்தில், வானத்தை தொட்டுக்கொண்டு நிற்கும் மேட்டூர் அணையை அண்ணாந்து பார்க்கையில் கழுத்து வலிக்கிறது; அவ்ளோ உயரம்! ஹாலிவுட் படங்களில் பார்க்கும் காட்சிகளை நேரில் பார்த்தது போன்ற உணர்வு அது.   இரு பக்கமும் நிற்கும் யானை சிலைகள் நம்மை வரவேற்றது. அடர்த்தியாக சூழ்ந்திருக்கும் மரங்களில் அடைந்திருக்கும் பறவைகளின் ஓசை மனதுக்குள் உற்சாகத்தை ஊட்ட... துள்ளிக்குதித்து ஓடும் புள்ளிமான்கள், கூண்டுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கும் மலைப்பாம்புகளை வேடிக்கை பார்த்தபடியே நடக்க ஆரம்பித்தோம். அழகுக்காக ஆங்காங்கே நீர் ஊற்றுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன... ஆனால், தண்ணீர்தான் இல்லை

சின்னச் சின்னப் பூங்காக்களில் எல்லாம் கண்ணைக் கவரும் வகையில், நீருற்று, மலர்ச்செடி, சிலைகள்... என அலங்காரங்கள் செய்து வைத்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டின் மிகப்பெரிய பூங்காவில், சுற்றுலாவாசிகளைக் கவரும் விதத்தில் எதுவும் இல்லை. பாதி உடைந்த சிலைகள், குறைந்த எண்ணிக்கையிலான உயிரினங்கள், நீக்கமற நிறைந்திருக்கும் குப்பைகள்தான் பூங்காவை அலங்கரிக்கின்றன. குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளும் இல்லை. பூங்காவை சுற்றிப் பார்க்கும் ஆர்வத்துடன் வந்திருந்த நமது ஆசையை புஸ்ஸாக்குகிறது பூங்காவின் தற்போதைய நிலை. சோர்ந்துபோய் ஒரு மரத்தடியில் அமர்ந்து கண்களை மூடிய நேரத்தில், பிரம்மாண்டமான மேட்டூர் அணையே நம் மனக்கண் முன்னால் வந்து பேச ஆரம்பித்தது.....

"எவ்வளவோ தொலைவிலிருந்து என்னைப் பார்க்க வந்து சுற்றுலாவாசிகள் இப்படி ஏமாந்துபோறதை நெனச்சா எனக்கும் ரொம்ப வருத்தமாத்தான் இருக்குது. இவ்வளவு பேரு வந்து போற பார்க்ல இப்ப சரியான பராமரிப்பு இல்லை. அடர்த்தியான இந்த மரங்கள் மட்டும்தான் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்குது. இத வெட்டாம இருந்தாங்கன்னாலே போதும். கிருஷ்ணராஜசாகர் டேம் பார்க், பவானி சாகர் டேம் பார்க்கெல்லாம் மக்களைக் கவருகிற விதமா நிறைய வித்தியாசமா செஞ்சு வச்சிக்காங்க. இங்கேயும் பத்துப் பதினஞ்சு வருஷங்களுக்கு முன்னாடி வரை 50-க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகள், புள்ளிமான்கள், முதலைகள்னு நிறைய உயிரினங்கள் இருந்தது. பார்க்கும் நல்ல பராமரிப்போடு சிறுவர்களை கவரும் விதமா அழகாத்தான் இருந்தது. இப்ப ஒன்றிரண்டு புள்ளிமான்களும் ஒருசில மலைப்பாம்புகளும்தான் இருக்கு

இவ்ளோ பெரிய டேம் தமிழ்நாட்டுல இருக்குது. ஆனாலும், தமிழ் சினிமா சூட்டிங்னா கூட கர்நாடகாவுலா இருக்குற கிருஷ்ணராஜசாகர் டேம்லதான் போய் எடுக்கறாங்க. ஏன்? அந்த அணையை இதோட கம்பேர் பண்றப்ப.... இங்க எதுவுமே இல்ல. எவ்வளவோ செலவு பண்ணி  டேம் மேல 'நேம் லைட்' போட்டாங்க. ஆனா அதுகூட இப்ப எரியாமத்தான் இருக்கு. நிறைய அருவிகள் இருக்குது. ஆனா எதிலேயும் தண்ணி இல்ல. நீச்சல் குளம் கட்டி வச்சிருக்காங்க அதுவும் அப்படித்தான். ஏதாவது பண்டிகை நாள் வந்தாத்தான் இதை எல்லாம் சரி பண்ணுவாங்க. மத்த நாள்ல வந்துட்டுப் போற உங்கள மாதிரியான ஆட்களுக்கெல்லாம் ஏமாற்றம்தான்.ஒவ்வொரு முறை இங்கே வர்றப்பவும் ஏதாவது புதுசா பன்ணிருப்பாங்களா? அப்படிங்கிற எதிர்பார்ப்பும் ஆசையுமா நிறைய பேர் வர்றாங்க....  ஆனா 'போனமுறை வந்ததை  விடவும் கொறைஞ்சு மோசமாத்தான் இருக்குது'ன்னு புலம்பிக்கிட்டுத்தான் போறாங்க

முன்னாடி மேட்டூர்ல இருந்த 'சின்ன பார்க்' ரொம்ப அழகா இருக்கும். இப்பவும் அந்த சின்ன பார்க் இருக்கு... ஆனா சரியான பராமரிப்பு இல்லாம புதர் மண்டிப்போய் அடையாளம் இழந்து கிடக்கு. அந்த இடத்தைப் பாக்கறப்ப எல்லாம் கடல் மாதிரி தளும்பத் தளும்ப டேம் நிறையத் தண்ணீர், பச்சைப்பசேல் பூங்கானு செழிப்பா இருந்த என்னோட பழைய ஞாபகமெல்லாம் வந்து மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும். ஆனா, அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இதைக் கண்டுக்கிறதே இல்லை. ஒருவேளை, மேட்டூரைச் சேர்ந்த ஒருத்தரே மேட்டூர் தொகுதி  எம்.எல்.ஏ-வாக வந்தா இதையெல்லாம் சரி  பண்ணுவாங்கன்னு நெனைக்கிறேன். ஆயிரக்கணக்கில் செலவழிச்சு என்னப் பார்க்க வர்ற நீங்க ஏமாந்து போறீங்க.... இதே மாதிரி உள்ளூர்ல இருக்கிற சாமான்ய மக்களும் பொழுதுபோக்குன்னு என்னை வந்து பார்த்து ஏமாந்துதான் போறாங்க

அவங்களால காசு செலவு பண்ணி ஊட்டி, கொடைக்கானல்ன்னு போறதுக்குக்கெல்லாம் வசதி இல்ல. அதனால அஞ்சு ரூபா கொடுத்து இந்த பார்க்குக்குத்தான் குடும்பத்தோட வருவாங்க. அஞ்சு ரூபா அப்படிங்கிறதாலதான் என்னவோ இங்க ஒன்னுமே இல்லன்னுகூட அவங்க நினைக்கிற மாதிரிதான் நானும் சில நேரங்கள்ல நினைச்சுக்கிறேன். ஏன்னா.... பத்து வருமசா பார்க் அப்படியேதான் கெடக்குது. இப்பதான் பார்க்குக்கு வெளிய ஏதோ கட்டிட்டு இருக்கறாங்க. எந்த அதிகாரியும் என்னைப் பத்திக் கண்டுகிறதும் இல்ல...  எதுவும் நல்லதா  பண்றதாவும் தெரியல... ஏதோ இங்க இருக்கிற மரத்த மட்டும் விட்டு வச்சிருக்குறாங்க. அவங்களுக்கு என்னோட நிலைமை என்னன்னு தெரியும். அதனால நான் பெருசா எதுவும் சமாதானம் சொல்ல வேண்டியதில்ல.... ஆனா,  தூரத்துல இருந்து வர்ற உங்கள மாதிரி சுற்றுலாப் பயணிகள் மனசு சங்கடப் படுறதைத்தான் என்னால தாங்கிக்க முடியல..

அரசாங்கம் இதை அரசு உடனே கவனத்துல எடுத்துக்கிட்டு பூங்காவை நல்ல முறையில் பராமரிக்கும்னு நம்புறேன். அதனால அடுத்த முறை மேட்டூர் வர்றப்ப மறக்காம என்ன வந்து பாருங்க....'' என்றவாறே நன்றி கூறி நம் மனக்கண்ணில் இருந்து விடை பெற்று விலகியதுமேட்டூர் அணை!

திடுக்கிட்டு விழித்த அணையின் அந்தக்  கால நினைவுகளை அசைபோட்டபடியே நெகிழ்ச்சியோடு அங்கிருந்து கிளம்பினோம்!

- மா.விஜய் சூர்யா,  மாணவப் பத்திரிகையாளர்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்