வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (02/11/2016)

கடைசி தொடர்பு:11:32 (03/11/2016)

'இதுதான் ஆவின்!’ குற்றச்சாட்டுக்கள் பற்றி மனம் திறக்கிறார் ஆவின் வைத்தியநாதன்!

 


வின் பால் கலப்பட வழக்கில் ஏற்கெனவே சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்துள்ள வைத்தியநாதன், ஆவின் பால் டெண்டரில் மீண்டும் கால் பதிப்பதாக கடந்த 13.10.16  தேதியிட்ட ஜுனியர் விகடனில் செய்தி வெளியானது. தற்போது அந்தச் செய்திக்கு விளக்கம் தரும் வயைிலும், தான் குற்றமற்றவர் என்கிற வகையிலும் முதன் முறையாக விகடனிடம் மனம் திறந்திருக்கிறார் வைத்தியநாதன்.

"என் மீது போடப்பட்டுள்ளது எல்லாம் முழுக்க முழுக்க பொய் வழக்குகள். அதனை எதிர்த்து நான் வழக்கு தொடர்ந்திருக்கிறேன். அதில் நிச்சயம் நான் வெற்றி பெறுவேன். முக்கியமாக இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை நான் குற்றமற்றவன் என்று சட்டமே சொல்கிறது. அதுவரை அரசுத் துறை சார்பாக நடைபெறும் எந்த ஒரு டெண்டரிலும் நான் கலந்துகொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் எனக்கு அனுமதி வழங்கியுள்ளது. அது தொடர்பான உத்தரவு நகல் என்னிடம் உள்ளது.

எனது நிறுவனமான தீபிகா டிரான்ஸ்போர்ட் மீது 2,400  ரூபாய், சவுத் இந்தியா டிரான்ஸ்போர்ட் நிறுவனம் மீது 18 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 20 ஆயிரத்து 400 ரூபாய் மட்டுமே ஊழல் குற்றச்சாட்டாக உள்ளது. அதுவும், எங்கள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு நாங்கள் சம்பளம் தரவில்லை என்றும், அதனால், அவர்கள் ஆவின் வண்டியில் இருந்து பாலைத் திருடி விற்றுவிட்டதாகவும் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள். இது நம்பும்படியாகவா இருக்கிறது? இந்த அவதூறில் இருந்தும், குற்றச்சாட்டில் இருந்தும் நான் என்னை குற்றமற்றவன் என்று நிரூபித்து வெளியே வருவேன். அது தொடர்பான ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றன. என் மீதான வழக்குகள் ஒரு புறம் என்றாலும், ஆவின் நிறுவனம் எனக்கு எதிராகத் திரும்பியதற்கான காரணத்தையும் நான் சொல்லியே ஆகவேண்டும். 

ஆவின் நிறுவனத்தில் நடைபெறும் ஊழல் மற்றும் கலப்படங்களை RTI மூலமாக நான் சில ஆதாரங்களைத் திரட்டி வெளியே கொண்டுவந்ததால்தான், என் மீது இப்படி பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 

முக்கியமாக வேலூரில் உள்ள பால் உற்பத்தி ஆலையில், போதுமான எந்திரங்கள் இல்லாததால், பாலுடன் அதிக அளவில் தண்ணீர் சேர்க்கப்படுகிறது. பல நேரங்களில் அங்கு பால் கெட்டுப்போய் விடுகிறது. ஆனால், அவற்றை மறைத்து, பாலில் காஸ்டிக் சோடா, ஒரு குறிப்பிட்ட அளவில் கலந்து பால் விற்கப்படுகிறது. 

ஒரு நாளைக்கு மூன்று லட்சம் ரூபாய்க்கு ஐஸ் வாங்கி உள்ளதாகவும், கணக்கில் காண்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சில்லர் பிளேட்டில் (Chiller Plate) தண்ணீர் விடப்பட்டு, காஸ்டிக் சோடா, பிளீச்சிங் பவுடர் சேர்க்கப்பட்டதற்கான ஆய்வறிக்கை ரிப்போர்ட் என்னிடம் இருக்கிறது. இப்படி விற்கப்படும் பாலைக் குடிப்பவர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல விதமான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆவின் நிறுவனத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமாராக 31 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இவற்றில் சென்னை மாநகரில் மட்டும் 11 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் விற்கப்படுகிறது. மற்ற வெளி ஊர்களில் 11 லட்சம் லிட்டர் பால் விற்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 9 லட்சம் லிட்டர் பால் மிச்சமாகிறது. அதனைப் பவுடராகவும், வெண்ணெய்யாகவும், நெய்யாகவும் மாற்றுகிறார்கள். ஆனால், இவற்றில் பால் பவுடர் ஒரு வருடத்துக்கும் மேல் வரை ஸ்டாக் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதனால், இந்த பவுடருடைய அசிடிட்டி அதிகமாகி விடும். அந்த அசிடிட்டியை குறைப்பதற்காக, காஸ்டிக் சோடாவும், பிளீச்சிங் பவுடரும் கலந்து விற்பனை செய்கிறார்கள்.

காலாவதியான பால் பவுடர் கிட்டத்தட்ட 15 ஆயிரம் மெட்ரிக் டன் ஸ்டாக்கில் உள்ளது. அவற்றிலிருந்து 20 சதவீதம் தினமும் பாலில் கலந்து விற்பனை செய்கிறார்கள். இதனால்தான் ஆவின் பால், பல நேரங்களில், பல இடங்களில் கெட்டுப்போய் விடுகிறது. இப்படியான பால் பவுடரில் இருந்து தயாரிக்கப்படும் பால் மற்றும் உணவுப் பொருட்களை உட்கொள்பவர்கள் பலவிதமான நோய்களுக்கும் ஆளாகி விடுகிறார்கள். இது உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு முற்றிலும் எதிரானது. நாள்தோறும் விற்பனைக்கு வரும் பாலை ஆய்வுக்கு அனுப்பி சோதனை செய்தால், அதன் உண்மைத் தன்மை அனைவருக்கும் தெரியவரும்.

பாலின் விலை உயர்த்தப்பட்டதால்தான், பால் அதிக அளவில் விற்கப்படாமல் தேங்கி உள்ளது. அதனால், பாலின் விலையைக் குறைத்தால், நாள் ஒன்றுக்கு 9 லட்சம் லிட்டர் பால் மிச்சமாவதும், அதனால், அந்தப் பாலைப் பவுடராக மாற்றுவதும் முற்றிலுமாகக் குறையும்.

 ஆவினில் நடைபெறும் இந்த ஒட்டுமொத்தக் குற்றச்சாட்டுகளுக்கும், ஆவின் நிர்வாக இயக்குநரே முழு பொறுப்பேற்க வேண்டும். இந்த ஒட்டுமொத்த ஊழல் குறித்தும் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் பலவிதமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் வெளிச்சத்துக்கு வரும்" என்று ஆவின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். 

ஆவின் பால் நிறுவனத்தின் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து ஆவின் எம்.டி சுனில் பாலிவாலிடம் கேட்டோம். 

"ஆவின் பால் கொண்டு செல்லும் டேங்கர் லாரிகள் தொடர்பாக, இதற்கு முன்பு இல்லாத வகையில் மிகவும் நேர்த்தியாகவும், நேர்மையாகவும் டெண்டர் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இதில் பல புதிய யுக்திகளைப் பின்பற்றி தவறுகளும், மோசடிகளும் நடைபெறாமல் தடுத்து வருகிறோம். ஆவின் பால் டேங்கர் லாரிகள் டெண்டர் 2016-2018-ம் ஆண்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு சில விதிமுறைகள் இருக்கின்றன. அதில், கறுப்பு பட்டியலில் இருக்கும் நிறுவனங்களின் பெயர்கள், எந்தவித பாகுபாடுமின்றி நிச்சயமாக நிராகரிக்கப்படும். இப்படி பல புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்ததால், பழைய யுக்திகளைக் கொண்டு மீண்டும் ஆவினுக்குள் நுழைய முடியாமல் போனதில், ஆவினுக்கு எதிராக வைத்தியநாதன் இப்படிப் பேசுகிறார் என்றுதான் நான் சொல்வேன். அவர் சொல்லும் அவதூறு பற்றி, பொதுமக்கள் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.

ஆவின் நிறுவத்தின் தயாரிப்பும், தரமும் ஒருபோதும் குறையவில்லை. குழந்தைகள் குடிக்கும் பால் விவகாரத்தில், அரசும், அதிகாரிகளும் அத்துமீறுகிறார்கள் என்று சொல்வது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. கொள்முதல் செய்யப்படும் ஆவின் பால், மிச்சப்படும்போது, அவற்றைப் பவுடராக மாற்றி வைக்கிறோம். அந்த பால் பவுடர் ஒரு ஆண்டுகள் வரை ஸ்டாக் வைத்திருக்க முடியும். ஆனால், அதற்குள் எல்லா பால் பவுடர்களும் பயன்படுத்தப்பட்டுவிடுகின்றன.

வேலூரில் பாலில் தண்ணீர் கலக்கப்படுவதாக சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மைக்குப் புறம்பானது. அங்கு எல்லாவிதமான எந்திரங்களும் இருக்கின்றன. பாலில் காஸ்டிக் சோடா கலப்பது என்பதெல்லாம் அபத்தம். ஆவின் பால் கவர் BIS ஸ்டாண்டர்டு முறையில்தான் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆவினுக்கு எதிராக, அவர் சொல்லும் குற்றச்சாட்டுகள் எல்லாம் ஆதாரமற்றது. 

வைத்தியநாதனிடமிருந்து கற்றுக்கொண்ட அனுபவத்தைக் கொண்டு, ஆவின் நிறுவனத்துக்கென்று சொந்தமாக 66 டேங்கர் வாகனங்களும், 15 ரூட் வாகனங்களும் வாங்கியிருக்கிறோம். இதற்காக 110 ஓட்டுநர்களைப் புதிதாக பணியில் சேர்த்திருக்கிறோம். இப்போது அனைத்து ஆவின் வாகனங்களிலும் GBS கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஆவின் வண்டியில் பிளாஸ்டிக் சீல்களுக்கு பதிலாக, மெட்டல் சீல் பயன்படுத்தப்படுகிறது. இதெல்லாம் நாம் கற்றுக்கொண்ட அனுபத்தில் இருந்து திருத்திக்கொண்ட பாடங்கள்" என்று நிதானமாகவும் தெளிவாகவும் விளக்கம் அளித்தார்.

எது எப்படியோ... உடனடி நடவடிக்கை எடுத்து பச்சிளம் குழந்தைகளின் வயிற்றில் பால் வார்த்தால் சரி!

- ரா.அருள் வளன் அரசு

நீங்க எப்படி பீல் பண்றீங்க