`சொந்த மண்ணை மிதிச்ச பிறகுதான் உயிரே வந்துச்சு!' - இலங்கையிலிருந்து தமிழகம் திரும்பிய 713 பயணிகள்

ஊரடங்கால் இலங்கையில் தவித்து வந்த 6 வெளிமாநிலத்தவர்கள் உட்பட 713 பயணிகள், இந்திய கப்பற்படைக்குச் சொந்தமான ஜலஸ்வா கப்பல் மூலம் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
கொரோனா ஊரடங்கால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேலை செய்து வந்தவர்கள், சுற்றுலாப் பயணிகளாகச் சென்றவர்கள் எனப் பலரும் அவரவர் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். கடந்த சில நாள்களாக விமானப் போக்குவரத்து தொடங்கிய நிலையில், விமானம் மூலம் சென்று வருகின்றனர். தமிழகத்தில் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு நேற்று முதல் மண்டலங்களுக்குட்பட்ட மாவட்டங்களுக்கு இடையேயும் பேருந்துப் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சில மாவட்டங்களில் மட்டும் பொதுப்போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் தங்கி வேலை செய்து வந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் நெல்லை, தூத்துக்குடி, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலம் அவரவரின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கால் சிக்கித் தவித்து வருபவர்கள் அவரவரின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கையிலிருந்து 6 வெளிமாநிலத்தவர்கள் உட்பட 713 பேர் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஜலஸ்வா கப்பல் மூலம் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். நேற்று மாலை 6 மணிக்கு கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இக்கப்பல், இன்று காலை 9.30 மணி அளவில் தூத்துக்குடி துறைமுகத்தின் நிலக்கரி இறங்குதளத்தின் ஒன்றாவது தளத்துக்கு வந்தடைந்தது.

10 மணிக்கு பயணிகள், தனிமனித இடைவெளியுடன் ஒவ்வொருவராக இறங்கினர். பயணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட எஸ்.பி அருண் பாலகோபாலன், துறைமுக சபை தலைவர் ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர், துறைமுகத்தின் பயணிகள் காத்திருப்பு மற்றும் பரிசோதனை அரங்கில் அமர வைக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, உணவு இடைவேளைக்குப் பிறகு அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 25 பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் பேசினோம், ``’வந்தே பாரதம்’ திட்டத்தின் மூலம் ஊரடங்கால் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வந்த இலங்கை, கொழும்பு துறைமுகத்திலிருந்து 713 பேர் இந்திய கப்பற்படைக்குச் சொந்தமான கப்பலில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதில் 574 பேர் ஆண்கள், 139 பேர் பெண்கள் ஆவர். இதில், 6 பேர் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அனைத்துப் பயணிகளுக்கும் கொழும்பு துறைமுகத்தில் கொரோனா உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்ட பிறகே கப்பலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், இங்கும் அவர்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
அதைத் தொடர்ந்து, 25 பேருந்துகளில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கும் அவரவர் மாவட்டங்களுக்குச் சென்ற பிறகு சில நாள்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். இதே கப்பல் வரும் 7-ம் தேதி மாலத்தீவில் தவித்து வரும் சுற்றுலாப் பயணிகளுடன் மீண்டும் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரவுள்ளது. அதேபோல, வரும் 17-ம் தேதி இரானில் இருந்தும் வேறொரு கப்பல் மூலம் இந்தியப் பயணிகள் அழைத்துவரப்பட உள்ளனர்” என்றார்.

கொழும்பிலிருந்து கப்பலில் பயணித்த சென்னை பெரம்பூரைச் சேர்ந்த கனகராஜிடம் பேசினோம், ``மூணு மாசத்துக்கு முன்னால இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாகப் போனேன். ஊருக்குத் திரும்புவதற்கு இரண்டு நாளுக்கு முன்னால கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கையில செலவுக்காக வச்சிருந்த பணம் தீர்ந்துபோனது. சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டப்பட்டேன்.
நான் டயாபட்டிக் நோயாளி என்பதால் மருந்து, மாத்திரைகளுக்காகவும் ரொம்ப கஷ்டப்பட்டேன். இந்தியாவுக்கு திரும்ப உதவிசெய்திட இலங்கைத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டேன். இந்தியாவில் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று சொன்ன பிறகு, உரிய முறையில் ஒரு தகவல் கேட்டால்கூட பதில் சொல்ல மாட்டேங்கிறாங்க.

கடைசி வரையிலும் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாதோ எனத் தவிச்சுக்கிட்டு வந்த நிலைமையில ஒருவழியா இப்போ தமிழ்நாட்டின் கடற்கரை நுழைவுவாயிலான தூத்துக்குடி மண்ணை மிதிச்சது, பெற்ற தாய் மடியில் தலை வச்சது மாதிரி உணர்றேன். இப்பதான் உயிரே வந்திருக்கு. எனக்கு மட்டுமல்ல எங்களுடன் பயணித்து வந்த பெண்கள், மாணவர்கள், முதியவர்கள் என அனைவரும் மகிழ்ச்சியாகவே உள்ளோம்” என்றார் உற்சாகத்துடன்.