வெளியிடப்பட்ட நேரம்: 14:23 (05/11/2016)

கடைசி தொடர்பு:14:52 (05/11/2016)

ரயில் பயணமென்றால் ஒரு பெண்ணுக்கு இதுதான் நிகழுமா?!

ஜூலை 31, 2016... எக்ஸ்பிரஸ் ரயில் ஏ.சி கம்பார்ட்மெண்டில் தாயும், மகளும் ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த இரவுப் பயணத்தில் தாய் மற்றும் மகள் இருவரையும் உடல்ரீதியில் தொட்டு தவறாக நடக்க முயற்சிக்கிறார், ரயில்வேயில் பணியாற்றும் மூத்த அதிகாரி.

ரயிலில் பயணிப்பவர்கள் தவறு செய்தால், ரயில்வே அதிகாரிகளை நாடுவோம். அதிகாரியே தவறாக நடக்கும்போது? ஆனாலும் தன் எதிர்ப்பை பலமாகத் தெரிவித்து அவரைக் கண்டித்த அந்தப் பெண், அவர் மீது புகாரும் கொடுத்தார். அதற்கு ஏதும் பலனில்லை என்ற சூழ்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்ற வழக்கு, கடைசியில் வாபஸ் ஆகிவிட்டதுதான் கொடுமை.


இதற்கு அந்தப் பெண் சொல்லியிருக்கும் காரணம், இந்தச் சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே என்பதற்கு மற்றுமோர் உதாரணமாக வந்து விழுந்திருக்கிறது. என் குடும்ப சூழ்நிலை காரணமாக, மேற்கொண்டு அந்த வழக்கை நடத்த முடியாத நிலையில் இருக்கிறேன் என்பதுதான் அவர் சொல்லியிருக்கும் பதில். 

இங்கே குடும்பச் சூழ்நிலை என்பது போதிய பணவசதி அல்ல.... மேற்கொண்டு வழக்கை நடத்த உறவுகளும் சமூகமும் அவருக்குக் கைகொடுக்காதது தான்.

தன்னிடமும், தன் அம்மாவிடமும் தகாத முறையில் நடந்து கொண்ட அந்த ரயில்வே அதிகாரிக்கு எதிராக முதலில் ரயில்வே போலீஸிடம்தான் புகார் கொடுத்தார் அந்தப் பெண். ஆனால், வழக்குப் பதிவு செய்வதற்கே பெரிதாகத் தயங்கியது ரயில்வே போலீஸ். தன்னுடைய முடிவில் தைரியமாக அந்தப் பெண் நிற்கவே, வேறு வழியின்றிதான் வழக்கைப் பதிவு செய்தது ரயில்வே போலீஸ்.

ஆனால், சம்பந்தபட்ட நபர் ரயில்வே துறையின் மூத்த அதிகாரி என்பதால், மேற்கொண்டு வழக்கை நடத்துவதற்கு துளியும் ஆர்வம் காட்டவில்லை ரயில்வே போலீஸ். இதுமட்டுமல்ல,  இப்படி  வழக்கு தொடர்ந்ததில் அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் தந்தை ஆகியோருக்கே விருப்பமில்லை. ஆனாலும், தனி மனுஷியாக போலீஸுடன் போராடி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வைத்தார் அந்தப் பெண்.


விஷயம் பெரிதாகிக் கொண்டிருப்பதை உணர்ந்த அந்த அதிகாரி, அந்தப் பெண்ணுடன் சமரசம் செய்துகொள்வதற்காக பலவகையிலும் முயற்சி செய்தார். ஆனால், அதற்கு அந்தப் பெண் கொஞ்சமும் ஒப்புக் கொள்ளவில்லை. தன்னுடைய முடிவில் உறுதியாகவே நின்றார். இதையடுத்து உயர் நீதிமன்ற படியேறிய அந்த ரயில்வே அதிகாரி, இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரினார்.

கூடவே, அந்தப் பெண்ணுடன் சமரசம் செய்து கொண்டதாகவும் கூறினார். ஆனால், இதை ஏற்காத நீதிமன்றம், வழக்கை விசாரிக்கும் பொறுப்பிலிருந்து ரயில்வே போலீஸை விலக்கிவிட்டு, மத்திய குற்றப்பிரிவு போலீஸாரை களத்தில் இறக்கியது. அந்தப் பெண்ணின் பாதுகாப்பு மற்றும் குடும்பச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ரகசிய விசாரணைக்கும் அனுமதி அளித்தது நீதிமன்றம். 
இத்தகைய சூழலில்தான் வழக்கையே திரும்பப் பெற்றுவிட்டார் அந்தப் பெண்.

‘‘என் வருமானத்தை நம்பிதான் என் மொத்தக் குடும்பமும் இருக்கிறது. கோர்ட், கேஸ் என்று அலைவதில் என் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லை. இதனால் திருமண வாழ்க்கை பாதிக்க நேரும் என்பதால், வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்று தன்னுடைய மனுவில் தெரிவத்துள்ளார் அந்தப் பெண்.

இந்த விஷயம் பற்றி வருத்தம் பொங்கப் பேசும் சென்னையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்  ஷீலு, நம் சமூகத்தில் ஒரு பெண், சாதாரண ஓர் அதிகாரிக்கு எதிராக தொடுக்கும் வழக்கை பதிவு செய்வதே சிரமம். அதிலும் மூத்த அதிகாரி ஒருவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வைத்து, அந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு விசாரணை வரை எடுத்து செல்வது அரிதிலும் அரிது. ஆனால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்திருந்தால் மற்ற பெண்களுக்கு நம்பிக்கை வந்திருக்கும். ஆனால், அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

 


இந்த விஷயத்தில் அந்தப் பெண்ணின் கணவன் மற்றும் தந்தை இருவரும் ஒத்துழைக்கவில்லை என்று தெரியவருகிறது. இதில் அவர்கள் இருவரையும் குற்றம் சொல்வதற்கு ஒன்றுமில்லை... ஒட்டுமொத்த சமூகத்தின் மீதுதான் நாம் குற்றம்சாட்டவேண்டும். குற்றங்களுக்கு எதிராகப் பெண்கள் போராட வேண்டும் என்றுதான் பலரும் எதிர்பார்க்கிறார்கள்... பேசுகிறார்கள். அதுவே போராடும் அந்த பெண், நம்வீட்டை சேர்ந்தவளாக இருந்தால், ஏற்றுக்கொள்ள மாட்டோம். நம் குடும்ப மானம் போகும் என்கிற பொதுபுத்திக்கு மாறிவிடுவோம். துணிச்சலான நடவடிக்கைகள் எடுக்கும் பெண்களைக்கூட இந்தச் சமூகம், இப்படிப்பட்ட பொதுபுத்தியின் அடிப்படையில் பேசி தடைபோடுகிறது. முன்னேறும் பெண்களையும் பின்னே இழுத்துப்போடுகிறது. 

 

தன்னிடம் தவறாக நடந்துகொண்டவனை எதிர்த்து போராடுவதற்குக்கூட, திருமண வாழ்க்கை எனும் ஒன்று மிரட்டுகிறது என்றால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எப்படி குறையும்? இது, தவறு செய்பவர்களுக்கு கூடுதல் தைரியத்தையே கொடுக்கும். 

அந்தப் பெண்ணின் கணவன், தகப்பன் இருவரும் சராசரியாக யோசிக்கிறார்கள். இதுபோன்ற மனநிலையை உருவாக்கி வைத்திருக்கும் சமூகத்தின் தவறுதான் இது. நாளைக்கு ஏதாவது பிரச்னை வந்தால் நம்மால் சமாளிக்க முடியுமா என்கிற பயமே இதுபோன்றவர்களை போராடும் மனப்பக்குவத்தில் இருந்து பின் வாங்க வைக்கிறது. இச்சமூகம் மாறவிட்டால், நம் பெண்களுக்கு இதுபோன்ற குற்றங்கள் அனுதினமும் நடந்துகொண்டேதான் இருக்கும். அதற்கு நீங்களும் ஒரு காரணமாக இருப்பீர்கள் என்பதை மறக்கவேண்டாம் என்று நிதர்சனத்தை எடுத்து வைக்கிறார் ஷீலு.


எந்த வழக்காக இருந்தாலும் ஆண், பெண் என பாகுபாடு இல்லாமல் உயர்ந்தவர் கை ஓங்கியும், தாழ்ந்தவர் கை இறங்கியும் இருப்பதையே பெரும்பாலான வழக்குகளில் பார்க்க முடிகிறது. காவல் நிலையங்களில் பல வழக்குகள் முதல் தகவல் அறிக்கையாக (எஃப்.ஐ.ஆர்) கூட பதிவாவது இல்லை. அப்படியே பதிவானாலும் பல வழக்குகள் வாபஸ் பெறப்படுகின்றன. பல வழக்குகள் நீதிமன்றங்களில் நீண்டகால வழக்காக தொடர்கின்றன. ஒரு குற்றம் நடக்கிறதெனில் அதற்கு உரிய தண்டனையை பெற்றுத்தர இயலாததற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று, காலம் தாழ்த்தப்படும் நீதி, இன்னொன்று குற்றவாளிகளால் அச்சுறுத்தப்படுவது. காவல் நிலையங்கள் புகார் அளித்தவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கினாலும் வழங்காவிட்டாலும் சமூகத்தைப் பொறுத்தவரை நீதிமன்றம் செல்வோருக்கு உரிய மரியாதை கிடைக்காத சூழல்தான் நிலவுகிறது. வழக்குகள் தொடர்வதால் பொருளாதார ரீதியாக பெரும் தொகையை செலவு செய்யவும் நேர்கிறது.


இதோடு நின்று விடுவதில்லை. நீதிமன்றம் வாய்தா வைக்கும் போதெல்லாம் ’வாதி’ தன் எல்லா பணிகளையும் விட்டுவிட்டு நீதிமன்ற வாசலில் நிற்க வேண்டும். குற்றம் நேர்ந்த சமயத்தில் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு நிகரான மனஉளைச்சலை நீதிக்காக அலையும்போது பெற வேண்டி இருக்கிறது.

ஒரு குடும்பத்தில் உறுப்பினராக இருக்கும் ஒருவர், இத்தகைய பிரச்னையை சந்திக்கும்போது அவர், தேவையற்ற பொருட்செலவையும், நேர விரயத்தையும் மனஉளைச்சலையும் பெறுவதோடு அல்லாமல் தன் குடும்பத்தினருக்கும் அவற்றையெல்லாம் கொடுக்க நேர்கிறது. அடிப்படையில் இந்த காரணங்களுக்காகவே வாதியின் குடும்ப உறுப்பினர்களும் அவருக்கு உதவுவதில் தயக்கம் காட்டுகின்றனர். 

நீதி நிலைநிறுத்தபட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேபோல நீதிக்காக போராடும் நிலை இல்லாமல் அது எளிதில் பெற கூடிய வழியில் இருந்தால்தான் குற்றங்களும் குறையும்!


என்றுதான் விடியுமோ ?!


- கே. அபிநயா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்