வெளியிடப்பட்ட நேரம்: 16:33 (05/11/2016)

கடைசி தொடர்பு:17:11 (05/11/2016)

“ ‘காஷ்மோரா’ படமும்... காலியாகும் கஜானாவும்!'' சுட்டிக்காட்டும் ஸ்டாலின்..!

கோபாலபுரத்துக்கு இன்று காலை வழக்கம்போல் தனது தந்தையைப் பார்க்கவந்த ஸ்டாலின் கையோடு, ‘ஜூனியர் விகடன்’ புத்தகத்தை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றார். சிறிது நேரத்தில், ஸ்டாலின் பெயரில் ஓர் அறிக்கை வெளியானது. அதில், ‘‘9-11-16 தேதியிட்ட ‘ஜூனியர் விகடன்’ மிஸ்டர் கழுகு பகுதியில் இடம்பெற்றிருக்கும் ஒரு செய்தி, நம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. நாட்டு மன்னர் ஒருவரின் அரண்மனையில் மன்னருக்கு நெருக்கமான அரண்மனைவாசிகள் சிலர், செல்வமிதப்பில் மிதக்கிறார்கள். ஊழல் மற்றும் கொள்ளையடித்ததன் மூலம் கிடைத்த கரன்சி நோட்டுக்கள், தங்கம், வைடூரிய நகைகளை அந்த அரண்மனையில் சுரங்கம் அமைத்து பாதுகாப்பாக வைக்கிறார்கள்.

‘காஷ்மோரா’ படத்தில் இருக்கும் பிரமாண்ட அந்த அரண்மனைக்குள், வெளியில் இருந்து யாரும் உள்ளே நுழைய முடியாது. ஒரு நாள் மன்னருக்கு உடல்நிலை சரியில்லாமல் அவரை சித்தர் குடிலுக்கு கொண்டுபோகிறார்கள். சில மாதங்கள் சிகிச்சை நடைபெறுகிறது. அதற்குள் அரண்மனைவாசிகள் மன்னர் மீண்டும் வந்து பழைய மாதிரி சுறுசுறுப்புடன் ஆட்சி செய்வாரா என்கிற சந்தேகத்துடன் பங்களாவில் இருந்த கஜானாவை காலி செய்கிறார்கள். இதற்காக டெல்டா பகுதியில் இருந்து வெள்ளை நிறக் கார்களில், வெள்ளை நிற உடுப்புகளுடன் வரும் அவர்கள், நகரின் மையப்பகுதியில் இருக்கும் அந்த அரண்மனை வீட்டில் இருந்து வெளியேறும் வாகனத்துக்கு முன்னும் பின்னும் காவலாகச் செல்கின்றனர்.

அந்த வீட்டில் இருந்து வெளியேறும் வாகனத்துக்குக் காவலர்களும் சல்யூட் வைத்து, எந்தச் சோதனையும்  செய்யாமல் அனுப்புகிறார்கள். கரன்சிகள், வைரங்கள், பத்திரங்கள், நகைகள் என்று பெரிய பங்களாவில் இருந்த அனைத்துப் பொருட்களையும் துடைத்து மூட்டைக்கட்டி எடுத்துச் சென்றதாகக் காவலர்கள் பேசிக்கொள்கிறார்கள். மத்திய அரசின் சி.பி.ஐ. இந்த விவரங்களையே புகாராகக் கொண்டு விசாரணை செய்தால், நாட்டுக்குப் பல உண்மைகள் தெரியவரும். சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின் வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும். இந்தக் கட்டுரையைப் படித்தமாத்திரத்திலேயே இது எந்த பங்களா, யாருக்குச் சொந்தமான பணம், யார் துணையோடு எங்கே எடுத்துச்செல்கிறார்கள் என்ற அனைத்து விவரங்களும் தமிழகத்தில் உள்ள அனைவரும் எளிதாகவே புரிந்துகொள்ள முடியும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை வெளிவந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், “இன்றைய ‘ஜூனியர் விகடனி’ல் வந்துள்ள செய்தியின் பின்னணி குறித்து ஊடகத் துறையினர் முழுமையாக விசாரித்து உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும்’’ என்று தெரிவித்து ‘ஜூனியர் விகடன்’ புத்தகத்துடன் காரில் ஏறிச் சென்றார்.

- அ.சையது அபுதாஹிர்
படங்கள்: சு.குமரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்