சங்கரன்கோவிலில் பணம் வென்றுள்ளது: விஜயகாந்த்

சென்னை:  சங்கரன்கோவிலில் உழைப்புக்கும், பணத்துக்கும் நடந்த போட்டியில் பணம் வென்றுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "சங்கரன்கோவில் இடைத்தேர்தல் என்பது கரன்சிக்கும், கட்சிகளுக்கும் இடையே நடந்த போட்டியாகும்.

ஆளும் கட்சி பணத்தை வாரி இறைத்தது. எதிர்க்கட்சிகள் அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. வாக்காளர்களை சந்தித்து நேரில் வாக்குகள்தான் கேட்க முடிந்தது. உழைப்பிற்கும், பணத்துக்கும் நடந்த போட்டியில் பணம் வென்றுள்ளது.

தேர்தல் கமிஷன் சங்கரன்கோவில் இடைத்தேர்தலை அறிவிப்பதற்கு முன்பே அதிமுக சுமார் ஒன்றரை மாதங்களாக அதிகாரத்தை பயன்படுத்தி சலுகைகளை வாரி வழங்கியது. அரசின் இலவசத் திட்டங்கள் தேர்தல் அறிவிப்புக்கு முன்னாலேயே செயல்படுத்தப்பட்டன. 32 அமைச்சர்களும் தங்கள் பரிவாரங்கள் புடைசூழ அங்கேயே முகாமிட்டு தேர்தல் வேலைகளில் ஈடுபட்டனர். அதிகார துஷ்பிரயோகத்தில் இருந்து அளவற்ற வாக்குறுதிகள் வரை தாராளமாக வழங்கப்பட்டன. இதைப் போல ஒரு இடைத்தேர்தல் இதுவரை நடந்ததே இல்லை.

இந்த இடைத்தேர்தலில் எவ்வளவோ இன்னல்களுக்கு இடையில் தங்கள் நேரத்தையும், உழைப்பையும் செலவழித்து பாடுபட்ட கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், மகளிர் அணியினருக்கும் எவ்வளவு பாராட்டினாலும் ஈடாகாது. அவர்களின் தூயத் தொண்டிற்கு எனது உளங்கனிந்த பாராட்டுக்கள். எவ்வளவோ ஆசாபாசங்களுக்கு இடையிலும் உறுதியாக நின்று தே.மு.தி.கவிற்கு வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு எனது இதயமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இன்றைக்கு தாங்கள் வெற்றி பெற்று விட்டதாக அதிமுகவினர் மார்தட்டிக் கொள்ளலாம். ஆனால் கடந்த திமுக ஆட்சியின்பொழுது நடைபெற்ற 11 இடைத்தேர்தல்களில் ஒன்றிலாவது அதிமுகவால் வெற்றி பெற முடிந்ததா?

ஆகவே, இந்த இடைத்தேர்தல் முடிவைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இடைத்தேர்தல் முடிவுகள் பொதுத் தேர்தல்களின் மக்கள் கருத்தை பிரதிபலிப்பதில்லை என்பது வரலாறு. இடைத்தேர்தல் என்பது தமிழ்நாட்டில் ஒரு சடங்குபோல் ஆகிவிட்டது. எனினும் மக்கள் பிரச்னைகளுக்காக தேமுதிக தொடர்ந்து போராடும்," என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!