நல்லாட்சிக்கான நற்சான்றிதழே சங்கரன்கோவில் வெற்றி: ஜெ.

சென்னை: 'சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றிபெற வைத்ததோடு, திமுக வேட்பாளர் உட்பட மற்ற அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்தது, நல்லாட்சிக்கு அளிக்கப்பட்ட நற்சான்றழ்,' என்று முதலவர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதிமுக ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்களை கோடிட்டுக் காட்டி, கழக வேட்பாளர் எஸ்.முத்துச்செல்வியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும், திமுக வேட்பாளர் உட்பட மற்ற அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்றும் நான் சங்கரன்கோவில் வாக்காளப் பெருமக்களிடத்திலே கேட்டுக் கொண்டேன்.

சங்கரன்கோவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.கருணாநிதி, நடைபெறுவது இடைத்தேர்தல் அல்ல; எனது ஆட்சியின் செயல்பாடுகளை 'எடை' போடுகின்ற தேர்தல் என்று கூறியிருந்தார்.

எனது அன்பான வேண்டுகோளினை ஏற்று, எனது ஆட்சியின் செயல்பாடுகளை, மக்கள் நலத் திட்டங்களை, வளர்ச்சித் திட்டங்களை எல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, 2006 முதல் 2011 வரை நடைபெற்ற திமுக ஆட்சியின் அராஜகங்களை மனதில் நிலை நிறுத்தி, நல்ல எடை போட்டு, இந்த இடைத் தேர்தலில் கழக வேட்பாளர் எஸ்.முத்துச்செல்வியை 68,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்திருக்கிறீர்கள்.

அதுமட்டுமல்லாமல், தி.மு.க வேட்பாளர் உட்பட மற்ற அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்து, நல்லாட்சிக்கு நற்சான்றளித்த சங்கரன்கோவில் வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது என்பதையும், சங்கரன்கோவில் மக்கள் சங்கடமின்றி வாழும் வகையில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!