இடிந்தகரையில் முள்ளிவாய்க்கால் நடவடிக்கை: உதயகுமார் | கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி காலவரையற்ற போராட்டம் மேற்கொண்டுள்ள போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், இடிந்தகரையில் 'முள்ளிவாய்க்கால்' நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்ட நேரம்: 16:02 (21/03/2012)

கடைசி தொடர்பு:18:15 (21/03/2012)

இடிந்தகரையில் முள்ளிவாய்க்கால் நடவடிக்கை: உதயகுமார்

வள்ளியூர்: கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி காலவரையற்ற போராட்டம் மேற்கொண்டுள்ள போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், இடிந்தகரையில் 'முள்ளிவாய்க்கால்' நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் அனுமதியைத் தொடர்ந்து, கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகள் முழுவீச்சி நடைபெற்று வருகிறது.

அதேவேளையில், இடிந்தகரையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். அங்கு, அணு உலை எதிர்ப்புக் குழு தலைவர் புஷ்பராயன், ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்பட 15 பேர் இன்று மூன்றாவது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

கூடங்குளத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தமிழக போலீஸாருடன், மத்திய படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலவரம் குறித்து கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் அளித்துள்ள பேட்டியில் கூறியது:

"இடிந்தகரையில் முள்ளிவாய்க்கால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. நாங்கள் 15 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் நேற்று முன்தினம் முதல் படகுகளிலும் நடந்தும் வந்து, எங்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். உண்ணாவிரதப் பந்தலில் திரண்டு இருப்பவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்.

எங்கள் பகுதியில் நேற்று முதல் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால், தண்ணீரும் வரவில்லை. பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வர அனுமதிக்கப்படவில்லை.

இடிந்தகரையில் 144 தடை உத்தரவு நீடிக்கிறது. இதனால், வெளியில் இருந்து உள்ளேயும், உள்ளேயிருந்து வெளியேயும் எவராலும் போக முடியாத நிலை நீடிக்கிறது. எங்களுக்கு ஆலோசனைச் சொல்வதற்கான நேற்றிரவு வந்த வழக்கறிஞர்கள் குழுவும் கூடங்குளத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இது, எல்லாவற்றுக்கும் 30, 40 காவல் வாகனங்கள் அவ்வப்போது ஊர் எல்லைக்கு வந்து, மக்களிடையே பீதியையும் பதற்றத்தையும் உருவாக்கிவிட்டு திருப்பிப் போய்விடுவது முதலான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

தங்கள் வாகனங்கள் மீது கல்லேறிந்து தாக்குவதாக, அப்பாவி மக்கள் மீது பொய்களை ஊடகங்கள் மூலம் காவல்துறை பரப்புகிறது. மக்கள் வன்முறையில் ஈடுபடுவதாக நம்பவைத்து, அடக்குமுறையைக் கையாள்வதே இதன் நோக்கம்.

இடிந்தகரையில் ஆயுதம் தயாரிக்கிறார்கள் என்றெல்லாம் பொய்ப் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. ஊரில் உள்ளவர்களை தொலைபேசியை தொடர்புகொண்டு, 'அவருடன் பேசாதீர்கள்... இவர் பேச்சை கேட்காதீர்கள்... அவர்கள் உளவாளிகள்' என்றெல்லாம் சொல்லி, பீதியைக் கிளப்பும் வேலையும் நடந்துகொண்டே இருக்கிறது. எங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் அனைத்து வேலைகளும் செய்யப்பட்டு வருகிறது.

நாங்கள் ஜனநாயக நாட்டில் தான் இருக்கிறோமா என்று சந்தேகம் வரும் அளவுக்கு தமிழக அரசின் காவல்துறையும், மத்திய அரசின் உளவுத்துறையும் எங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இங்கிருப்பவர்கள் எல்லாம் தமிழர்களா, இந்தியர்களா என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு இருக்கிறது நிலவரம். இவற்றையெல்லாம் கண்டு உண்மையில் நான் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறேன். ராஜபக்ஷே செய்யாத வேலைகளைக் கூட இந்த அரசாங்கம் செய்வதாகவே கருதும் அளவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழர்களாகிய நாங்கள், அனாதைகளாக தெருவில் இருக்கிறோம்.

ஊரில் பதற்றமும் பீதியுமாக இருப்பதால், மாணவர்களால் சரியாக பரீட்சை எழுந்த முடியாத அளவுக்கு அழுத்தத்தில் இருக்கிறார்கள்.

கூத்தப்புளியில் இருந்து பெண்கள் உள்பட 150 பேர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்;  ஏன் இவர்களை திருச்சி சிறையில் கொண்டு செல்ல வேண்டும். இங்கேயே அருகில் உள்ள சிறையில் வைக்கலாமே.

கடலூர் சிறையில் வழக்கறிஞர் சிவசுப்பிரமணியம் தலைமையில் 5 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.  அணு உலை எதிர்ப்பு போராளி முகிலன் நிலை என்ன என்று இதுவரை தெரியவில்லை.

இந்த அராஜகம் போதாது என்று நேற்று நள்ளிரவு என் பள்ளிக்கூடத்தை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். அரசின் காவல்துறையினருக்கு தெரியாமல் இதெல்லாம் நடந்திருக்காது.

நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜேந்தர் பிதாரி என்னிடம் தொலைபேசியில் பேசினார். என்னை மட்டும் தனியாக சரணடையுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், என்னுடன் இருக்கும் இந்த பலலயிரக்கணக்கான மக்கள், என்னை தனியாக விடுவதற்கு அனுமதிக்கவில்லை. கைது நடவடிக்கை என்றால், அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பது இங்குள்ள அனைவரின் விருப்பம். இதை அவரிடம் எடுத்துச் சொன்னேன். அதற்கு, 'இதுதான் எனது கடைசி அழைப்பு' என்று மிரட்டல் தொனியில் பேசினார்.

ஐ.ஜி. ராஜேஷ், 24 மணி நேரத்தில் உதயகுமார் கைது செய்யப்படுவார் என்று பேசியிருக்கிறார். நான் கைதாக தயாராக இருக்கிறேன்.  வன்முறைகளைத் தவிர்க்கவே விரும்புகிறோம். அதனால் தான் அமைதி வழியில் போராடுகிறோம். எங்கள் அனைவரையும் கைது செய்ய வாகனங்களை அனுப்புங்கள் என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன்.

எங்களுக்கு நேர்ந்துள்ளதைப் பார்க்கும்போது, இந்த நாட்டை பாசிச சக்திகள் ஆள்வது போல் தெரிகிறது.
 
இடிந்தகரை உண்ணாவிரதப் பந்தலில் இருக்கும் ஆயிரக்கணக்கானோரில் பெண்கள் 70 சதவீதம் பேர். அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் கஞ்சி, தண்ணீர்தான் உணவு. வேறு எதுவும் இல்லை. இந்த மக்கள் மீது எந்த சுகாதார அதிகாரிகளுக்கும் கவலை இல்லை. அரசின் கவலையெல்லாம், எங்களை வன்முறைக்குத் தூண்ட வேண்டும் என்பதும், அதன்பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான்.

இது ஒரு முள்ளிவாய்க்கால் நடவடிக்கையாகவே நாங்கள் பார்க்கிறோம். தமிழ் மக்களால் பார்க்க வேண்டாம்; எங்களை மக்களாக கூட அரசு பார்க்கவில்லை. அவ்வளவு வேதனைகளைப்பட்டு வருகிறோம். ஹிட்லரின் கொடுமைகளை விட அதிகமாகவே அராஜகப்போக்குகள் காணப்படுகிறது.

நாங்கள் என்ன பயங்கரவாதிகளா? இந்த நாட்டின் பிரஜைகள் தானே? எங்கள் வாழ்வாதார பாதுகாப்புக்காகவே நாங்கள் போராடி வருகிறோம்," என்றார் உதயகுமார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்