வெளியிடப்பட்ட நேரம்: 08:57 (24/03/2012)

கடைசி தொடர்பு:08:57 (24/03/2012)

கூடங்குளம்: உண்ணாவிரதத்தை கைவிட உதயகுமார் நிபந்தனை

வள்ளியூர்: இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை 6-வது நாளாக தொடர்ந்துள்ள போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், நேர்மையான குழுவை அரசு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அணுமின் நிலையப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் 17 பேர் மற்றும் கூட்டப்புளியைச் சேர்ந்த 165 பேர் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறையின் நடவடிக்கையைக் கண்டித்தும், அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என வலியுறுத்தியும், இடிந்தகரையில் போராட்டக்குழுவை வழிநடத்தும் எஸ்.பி.உதயகுமார், புஷ்பராயன் உள்பட 15 பேர் கடந்த திங்கள்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.

மருத்துவப் பரிசோதனை...

இந்த உண்ணாவிரதம் இன்று 6-வது நாளை எட்டியுள்ள நிலையில், திருநெல்வேலி மருத்துவக் குழுவைச் சேர்ந்த டாக்டர் கே.சி.ராமலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், சண்முகசடையப்பன் மற்றும் இரண்டு செவிலியர்கள் வெள்ளிக்கிழமை இடிந்தகரைக்குச் சென்றனர். உதயகுமார், புஷ்பராயன் உள்பட 15 பேரிடம் அவர்கள் பரிசோதனைகளைச் செய்தனர்.

உதயகுமாரும், புஷ்பராயனும் சோர்வாக இருந்தாலும், அவர்களுக்கு உடல்ரீதியாக இதுவரை எந்தப் பாதிப்பும் இல்லை என்று மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.

அதேவேளையில், உண்ணாவிரதம் இருந்துவரும் 15 பேரில் 5 பெண்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் மருத்துவக் குழு அறிவுறுத்தியது. ஆனால், அவர்கள் மருத்துவமனையில் சேர மறுத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு மருந்து, மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் 15 பேருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.

உண்ணாவிரதத்தைக் கைவிட நிபந்தனைகள்:

நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி காந்திய வழியில் போராட்டம் நடத்திவரும் தங்கள் மீது 150-க்கும் அதிகமான பொய்வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த உதயகுமார் முன்வைத்த நிபந்தனைகள்:

* போராட்டக்குழுவினர் மீதான வழக்குகள் அனைத்தையும் நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும்.

* நிலவியல், நீரியல், கடலியல் தொடர்பாக தமிழக மற்றும் இந்திய நிபுணர்கள் ஆய்வு செய்து அறிவித்த தகவல்களின்படி தங்களால் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்த உண்மைத் தன்மையை அறிய உண்மையான, நேர்மையான குழுவை நியமிக்க வேண்டும்.

* அணு உலை விபத்து காப்பீடு தொடர்பாக இந்தியா - ரஷியா இடையிலான ரகசிய ஒப்பந்தத்தை வெளியிட வேண்டும்.

* அணுக்கழிவை என்ன செய்யப் போகிறார்கள் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க