நீங்கள் கஸ்டமரா.... நான் கஸ்டமரா... உள்ளே வெளியே விளையாடிய வங்கிகள் | Non - customers Struggle to exchange old notes in Bank

வெளியிடப்பட்ட நேரம்: 12:43 (14/11/2016)

கடைசி தொடர்பு:12:51 (14/11/2016)

நீங்கள் கஸ்டமரா.... நான் கஸ்டமரா... உள்ளே வெளியே விளையாடிய வங்கிகள்


 500, 1000 ஆயிரம் நோட்டுகளை மாற்ற பொதுமக்களை வங்கிகள் அலைக்கழித்து வருகிறது. அதில் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சில வங்கிகள் பணத்தை மாற்ற வாய்ப்பு கொடுப்பதால் வாடிக்கையாளர்கள் இல்லாதவர்கள் நேற்று பணத்தை மாற்ற முடியாமல் தவித்தனர். 

கடந்த 8-ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பால் மக்கள், வங்கிகள் முன்பு புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற தவமிருக்கின்றனர். ஒரு நாளைக்கு ஒரு வங்கியில் வாடிக்கையாளர்கள் இல்லாதவர்கள் கூட 4,000 ரூபாய் வரை மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இன்று 4,500 ரூபாய் வரை மாற்றலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. ஆனால் இந்த அறிவிப்பை பெரும்பாலான வங்கிகள் பின்பற்றவில்லை.

சென்னையை அடுத்த திருநின்றவூர், நத்தமேடு கிராமத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நேற்று 2,000 ரூபாய் மட்டுமே மாற்ற முடியும் என்று வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை பெறவும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அடுத்து திருநின்றவூரில் உள்ள சில தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளின் அறிவிப்பு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எங்கள் வங்கியின் வாடிக்கையாளர்கள் என்றால் மட்டுமே நீங்கள் பணத்தை மாற்ற முடியும் என்று தெரிவித்தது. அடுத்து ஒரு வங்கியின் முன்பு பணப்பற்றாக்குறை காரணமாக மாற்ற முடியாது என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதுபோன்ற அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

இன்னொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியும், தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே 2000 ரூபாய்க்கு 100,50,20,10 ரூபாய் நோட்டுகளை வழங்கியது. மற்றவர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய்க்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இரண்டை கொடுத்தது. அதை எப்படி எங்களால் மாற்ற முடியும் என்று வங்கி ஊழியர்களிடம் கேட்டதற்கு எங்களிடம் இருப்பது இதுதான் என்று அடாவடியாக பதில் அளித்தனர். இதனால் வேறுவழியின்றி மக்கள் அதை வாங்கிச் சென்றனர். திருநின்றவூரை அடுத்த வேப்பம்பட்டு உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி ஆகிய தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் சிட்டி யூனியன் வங்கியிலும் கஸ்டமரா, நான் கஸ்டமரா என்ற கேள்விகளை கேட்டு மக்களை விரட்டியடித்தன. மேலும் இந்த பகுதியில் உள்ள எந்த ஏ.டி.எம்களும் செயல்படவில்லை. இதனால் மக்கள் பணமில்லாமல் பரிதவித்தனர்.

பணத்தை மாற்ற வங்கிக்குள் நுழையும்போதே அங்குள்ள ஊழியர்கள் கேட்கும் கேள்வி, நீங்கள் கஸ்டமரா....நான் கஸ்டமரா என்பதுதான். கஸ்டமர் இல்லை என்றால் சில வங்கிகள் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் பணத்தை கையில் வைத்துக் கொண்டு அதை மாற்ற முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர்.

இதுகுறித்து வங்கி வட்டாரங்கள் கூறுகையில், "நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் எங்கள் வங்கியில் போதிய பணம் இருப்பில் இல்லை. இதனால் வாடிக்கையாளர்கள் மட்டும் பணத்தை டெபாசிட் செய்துவிட்டு அதை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொண்டனர். மேலும், ஊழியர்கள் பற்றாக்குறையால் வாடிக்கையாளர்களைத் தவிர மற்றவர்களுக்கு பணத்தை மாற்றிக் கொள்ள இயலவில்லை" என்றனர்.

ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் கூறுகையில், "இன்றைய சூழ்நிலையில் பணத்தேவைக்கு மக்கள் சிரமப்படாமலிருக்க அனைத்து வங்கிகளிலும் தங்களுடைய பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று  அறிவித்துள்ளோம். அதை வங்கிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மக்களை வங்கிகள் அலைகழித்தால் உடனடியாக எங்களைத் தொடர்பு கொள்ளலாம். அதன்பேரில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பணப்பற்றாக்குறை என்ற காரணத்தை எந்த வங்கிகளும் சொல்லக் கூடாது. ஏனெனில் தேவையான பணம் அனைத்து வங்கிகளுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது" என்றனர். 

- எஸ்.மகேஷ்  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்