'ஜெயலலிதா மீண்டும் வந்து ஆட்சி செய்யணும்..!' விஜயகாந்த்தின் விருப்பம்

கரூர் : "எல்லோரும் முதலமைச்சரை பார்க்க போறாப்புல போய் அப்போலோவுல நின்னு மீடியாவுல போஸ் கொடுக்க போறாங்க. அதுபோல்,நான் போகமாட்டேன். அவங்க உடல்நிலை நல்லா ஆகனும். மறுபடியும் வந்து ஆட்சி செய்யணும். அதுக்குப் பிறகு நான் வீட்டுல வேணும்னா போய் அவங்களைப் பார்க்கிறேன்" என விஜயகாந்த் பேசினார்.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளுக்கு இன்னும் சில தினங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அரவக்குறிச்சி தொகுதி மறுதேர்தல் பிரசாரங்கள் கிட்டத்தட்ட கிளைமேக்ஸ் நெருங்கி இருக்கிறது. ஏற்கெனவே ஸ்டாலின், பிரேமலதா உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டுள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்துக்கு வருவாரா மாட்டாரா என எதிர்பார்க்கப்பட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 15 நிமிடங்கள் மட்டுமே அவர் பேசினார்.

அவர் பேசுகையில்,  "நான் காசு கொடுக்கவும் மாட்டேன். ஆட்சிக்கு வந்தால் காசு வாங்கவும் மாட்டேன். என் கட்சி வேட்பாளர் படித்தவர், பண்பானவர். அவருக்கு ஓட்டு போடுங்கள். அ.தி.மு.க.வுல நிக்கறாரே, நெல்லை பாலாஜியா, திருப்பதி பாலாஜியா?...ஓ செந்தில் பாலாஜி. அவர் கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்து கொள்ளையடித்தவர். இப்போதும் எம்.எல்.ஏ.வாகி கொள்ளையடிக்க உங்ககிட்ட காசு கொடுத்து ஓட்டுக் கேட்டு வர்றார். அவருக்கு ஓட்டு போடாதீங்க

அதேபோல், தி.மு.கவுல கே.சி.பின்னு ஒருத்தர் வர்றார். அவர் கே.சி.பி இல்லை. ஜே.சி.பி. அவர் கொள்ளை கொள்ளையா மணலை சுரண்டி, கோடி கோடியா சம்பாதிச்சவர். அவரும் உங்களை ஏமாத்தி, காசு கொடுத்து ஜெயிக்கப் பார்க்கிறார். மக்களே நீங்க ரெண்டு பேரையும் நம்பாதீங்க. இரண்டு பேரும் மணல் திருடர்கள். திருடர்களுக்கு ஓட்டு போடுவீங்களா? இல்லை நல்ல ஆளுக்கு ஓட்டு போடுவீங்களா?. அவங்களை ஜெயிக்க வச்சா, திரும்பவும் மணல் திருடுவாங்க.

என்னை ஏன் முதலமைச்சரை போய் பார்க்கலைன்னு கேட்கிறாங்க. நான் ஏன் அவரை அங்க போய் பார்க்கணும். எல்லோரும் முதலமைச்சரை பார்க்க போறாப்புல போய் அப்போலோவுல நின்னு மீடியாவுல போஸ் கொடுக்கப் போறாங்க. அதுபோல், நான் போகமாட்டேன். அவங்க உடல்நிலை நல்லா ஆகணும். மறுபடியும் வந்து ஆட்சி செய்யணும். அதுக்குப் பிறகு நான் வீட்டுல வேணும்னா போய் அவங்களை பார்க்கிறேன்" என்றார்.

-  துரை.வேம்பையன்,

படங்கள்: என்.ஜி.மணிகண்டன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!