எடப்பாடி துறையில் கைவைத்த ஓ.பி.எஸ்!  -ரெய்டின் அதிர்ச்சி பின்னணி 

மிழக நெடுஞ்சாலைத்துறையின் மூத்த அதிகாரியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ரெய்டு நடவடிக்கை பாய்ந்துள்ளது. ‘ முதல்வர் துறையை கையில் வைத்திருக்கும் ஓ.பி.எஸ் அனுமதியின் பேரிலேயே ரெய்டு நடவடிக்கைகள் நடந்துள்ளன’ என அதிர வைக்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தில். 

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 15-ம் தேதி சேலம், அழகாபுரம், சென்னை கே.கே.நகர் மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் திடீர் ரெய்டு நடத்தினர். சுமார் நான்கு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ரெய்டில், 25.68 லட்ச ரூபாய்களும் கணக்கில் காட்டப்படாத ஏராளமான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அதிரடிக்கு ஆளானவர், நெடுஞ்சாலைத்துறையின் தலைமைப் பொறியாளராக இருந்த கே.ஜெயராமன். துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கைக்குரியவர். அவர் மீது ரெய்டு நடவடிக்கை பாய்ந்ததை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளே ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர். “ கட்டுமானம் மற்றும் பராமரிப்புத்துறையின் தலைமைப் பொறியாளராக பதவியில் இருந்தவர் ஜெயராமன்.

1981-ம் ஆண்டு துறைக்குள் காலடி எடுத்து வைத்தவர், கடந்த ஜனவரி 31-ம் தேதிதான் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். நெடுஞ்சாலைத்துறையில் கட்டுமானப் பிரிவு என்பது வளம் கொழிக்கும் துறை. இந்தப் பதவிக்கு வருவதற்காகவே கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்யும் அதிகாரிகள் இருக்கிறார்கள். கடந்த ஆறு ஆண்டுகளாக நெடுஞ்சாலைதுறை அமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். அவருக்கும் அவரைச் சேர்ந்தவர்களுக்கும் மிகவும் அனுசரணையாக இருந்தார் ஜெயராமன். ஒரே ஊர்க்காரர்கள் என்பதால், இயல்பாகவே அவரிடம் சில பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன. எந்தப் பணியாக இருந்தாலும், ஜெயராமனைத் தாண்டி எதுவும் போகாது என்ற அளவுக்குச் செயல்பட்டுவந்தார்” என விவரித்தவர்கள், 

“ எங்கள் துறையைப் பொறுத்தவரையில், போலியாக பில்கள் போடுவது என்பது சகஜமான ஒன்று. ஒப்பந்ததார்களோடு இணக்கமாக இருந்து பல வேலைகளை சாதிப்பார்கள். அப்படித்தான், ஜெயராமனும் சிலரை கைக்குள் போட்டு வைத்திருந்தார். ஒருமுறை சாலைப் பணிகளுக்காக 1,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தப் பணியில் அவருக்குக் கிடைத்த 2 சதவீத கமிஷனில் பெரும்பாலான இடங்களில் நிலங்களை வாங்கிப் போட்டார். கூடவே, சாலைப் பணிகளுக்கான பில்களையும் போலியாகத் தயாரித்தார். இதைப் பற்றி அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களே, சில தனியார் அமைப்புகளிடம் கொடுத்துவிட்டார்கள். அவர்கள், இதைக் கையில் வைத்துக் கொண்டு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அனுப்பினார்கள். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். இதையடுத்தே, ஜெயராமன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது” என விவரித்தார்கள். 

“அவரது வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பண்டல் பண்டலாக கைப்பற்றப்பட்டுள்ளன. 'ஜெயராமன் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது' என நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காகவே, ரெய்டு நடத்தப்பட்டது என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தாலும், இதற்குப் பின்னணியில் சில முக்கியமான விஷயங்களும் இருக்கின்றன. சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, ஓ.பன்னீர்செல்வம் வசமிருந்த பொதுப் பணித்துறை, எடப்பாடி பழனிச்சாமிக்குக் கொடுக்கப்பட்டது. இதில் ஓ.பி.எஸ் மிகுந்த கவலையில் இருந்தார். தற்போது முதல்வரின் அதிகாரங்கள் அனைத்தும் ஓ.பி.எஸ் கைகளில் இருக்கின்றன. கடந்த ஆறு ஆண்டுகளாகவே நெடுஞ்சாலை மற்றும் சிறுமுகங்கள் துறை அமைச்சராக இருக்கிறார் எடப்பாடி. அவருக்கு உறுதுணையாக ஜெயராமன் போன்று சில அதிகாரிகள் இருந்தார்கள். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவது குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவிக்கப்பட்டது. அவரும், ரெய்டு நடத்துவதற்கு சிக்னல் கொடுத்துவிட்டார். இந்த வழக்கில் ஜெயராமன் கொடுக்கும் வாக்குமூலமும் மிக முக்கியமானது. எடப்பாடியின் முக்கியத்துவத்தை குறைப்பதற்காகவே ரெய்டு நடத்தப்பட்டது. சேலம், சென்னை, உளுந்தூர்பேட்டையில் நடத்தப்பட்ட ரெய்டுகளும் அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளும், எடப்பாடியை குறிவைத்தே நடத்தப்படுகின்றன” என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தில். 

" நெடுஞ்சாலைத்துறையின் ஓய்வு பெற்ற அதிகாரி மீது, அவர் பணியில் இருந்த காலத்திலேயே புகார் கொடுத்தோம். அதைப் பற்றியெல்லாம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. தொடர்ச்சியாக சட்டரீதியான போராட்டத்தை முன்னெடுத்ததன் விளைவாக, வேறு வழியில்லாமல் ரெய்டு நடவடிக்கை பாய்ந்துள்ளது. இது வெறும் கண்துடைப்பாக மாறிவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறோம்" என்கின்றனர் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர். 

- ஆ.விஜயானந்த்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!