கோவை, 'மக்கள் டாக்டர்' மறைந்தார்!

கோவையில் 20 ஆண்டுகளுகளுக்கும் மேலாக 20 ரூபாய் கட்டணம் மட்டுமே பெற்று, மருத்துவம் பார்த்து வந்த 'மக்கள் டாக்டர்' என அழைக்கப்படும் பாலசுப்பிரமணியம் நேற்று இயற்கை எய்தினார். அவருக்கு வயது 67. அவரது கிளினிக் முன்பாக பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

கோவையில் ஏழை எளிய மக்களின் குடும்ப மருத்துவராக திகழ்ந்த ‘’20 டாக்டர்'' என்று மக்களால் அழைக்கப்படுபவர் மக்கள் மருத்துவர் பாலசுப்பிரமணியம். இவர் கோவை, ஆவாரம்பாளையம் சாலையில் கிளினிக்  நடத்தி வந்தார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக  அப்பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். மருத்துவம் பார்க்க தன்னிடம் வரும் ஏழை, எளிய மக்களிடம் கட்டணமாக வெறும் 20 ரூபாய் மட்டுமே வசூல் செய்வதால் இவரை ஆவாரம்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் ”20 ரூபாய் டாக்டர்” என்றே அழைப்பார்கள். இவர் திடீரென நேற்று மாரடைப்பால் காலமானார். 

இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் இவரது கிளினிக்கு மருத்துவம் பார்க்க வந்த ஏழை , எளிய மக்கள் டாக்டர் காலமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். கிளினிக் வாசலிலேயே மெழுகுவத்தி ஏந்தி பொதுமக்கள் அஞ்சலியும் செலுத்தினர். கோவை மாநகரில் சாதாரண ஆலோசனைக்கு கூட 200 ரூபாய் 300 ரூபாய் என மருத்துவர்கள் கட்டணம் வசூல் செய்கின்றனர். இந்த நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காகவே வாழ்ந்து மருத்துவம் செய்து, மக்கள் மருத்துவராக இருந்த டாக்டர் பாலசுப்புரமணியம் இறப்பு செய்தி கோவை பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

- தி.விஜய்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!