கார்டன் திரும்புகிறாரா முதல்வர் ஜெயலலிதா?! - அப்போலோ அலர்ட்

'அப்போலோ மருத்துவமனையில் இருந்து முதல்வர் டிஸ்சார்ஜ் ஆகலாம்' என்ற தகவலால் கார்டன் வட்டாரத்தில் சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது. ' முதல்வர் வீடு திரும்புவது குறித்து எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகலாம்' என்கின்றனர் மருத்துவமனை வட்டாரத்தில். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 57 நாட்களைக் கடந்து, நோய்த் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகிறார். ' காய்ச்சல் மற்றும் நீர்ச் சத்து குறைபாடு' என தொடக்கத்தில் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்பிறகு, நுரையீரல் தொற்று, சிறுநீரகத் தொற்று என அடுத்தடுத்த சிரமங்களுக்கு ஆளானார். இதையடுத்து, முதல்வருக்கு சிகிச்சை அளிப்பதற்காக, லண்டன் மருத்துவர் டாக்டர்.ரிச்சர்ட் ஜான் பீலே வரவழைக்கப்பட்டார். அவருடைய சிகிச்சை முறைகள் தொடர்ந்து கொண்டிருக்கும்போதே, டெல்லி எய்ம்ஸ் மருத்துமனையின் புகழ்பெற்ற மருத்துவர்கள் கில்னானி, அஞ்சன் திரிக்கா உள்ளிட்டவர்கள் அப்போலோ வந்தனர். இவர்களுடைய கண்காணிப்பால், முதல்வர் இயல்பு நிலைக்குத் திரும்பியதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதுவரையில் பத்துக்கும் மேற்பட்ட அறிக்கைகளை வெளியிட்ட அப்போலோ மருத்துவமனை, கடந்த சில நாட்களாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரதாப் ரெட்டி, பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ' முதல்வர் வீடு திரும்புவதை அவரே உறுதி செய்வார். அவர் கையில்தான் அனைத்தும் உள்ளது. நடப்பவற்றை நன்றாக உணர்ந்து கொள்கிறார்' எனப் பேட்டியளித்தார். ஆனாலும், கார்டன் வட்டாரத்தில் இருந்து எந்த அசைவுகளும் இல்லை. 

" முதல்வருக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த பிஸியோதெரபி நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கை, கால் மற்றும் முகத்துக்கு அளிக்கப்பட்ட தீவிர பயிற்சியால், எழுந்து நிற்கும் அளவுக்கு அவரைத் தயார்படுத்தும் வேலையில் இறங்கினர். இதில் ஓரளவு பலன் கிடைத்துள்ளது. ஆனால், தொடர்ச்சியான பயிற்சி முறைகள் தேவைப்படுகின்றன. சுவாசக் கோளாறுதான் நீடித்துக் கொண்டே இருக்கிறது" என விவரித்த கார்டன் ஊழியர் ஒருவர், " நோய்த் தொற்று பெருமளவு குறைந்துவிட்டது. முன்பிருந்த அபாயக் கட்டத்தில் இருந்து முதல்வர் மீண்டுவிட்டார். எனவே, 'கார்டனில் இருந்தபடியே அன்றாடப் பணிகளில் ஈடுபடலாம்' என மருத்துவர்கள் உறுதியாகக் கூறிவிட்டனர். இருப்பினும், ' சில நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கியிருப்பது நல்லது' என சசிகலா நினைக்கிறார். நுரையீரல் தொற்றுக்காக அளிக்கப்பட்ட மருந்துகளின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சை முறைகள் தொடந்து கொண்டிருக்கிறது. நல்ல புரதச் சத்து நிரம்பிய மருத்துவமனை உணவுகளே வழங்கப்பட்டு வருகின்றன. ட்ரக்கியோஸ்டமி குழாய்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் அகற்றப்படலாம். தேவைப்படும் சமயங்களில் மட்டும் வென்ட்டிலேட்டர் அளிக்கப்படுகிறது. அவற்றில் இருந்தும் முழுமையாக விடுபட்டு, பழைய நிலைக்குத் திரும்புவார் முதல்வர்" என்றார். 

" சிறுதாவூர் பங்களாவில் மினி மருத்துவமனை அளவுக்கு சில வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக நேற்று அங்கிருப்பவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக, அப்போலோவில் உள்ள வசதிகள், அப்படியே தொடர வேண்டும் என்பதுததான் சசிகலாவின் விருப்பம். அதற்கேற்ப, மருத்துவ உபகரணங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. முதல்வர் சிறுதாவூரில் சிகிச்சை பெறுவதற்கே வாய்ப்பு அதிகம் எனவும் சொல்கின்றனர். போயஸ் கார்டனிலும் சில உள்கட்டமைப்பு வசதிகள் செய்து முடிக்கப்பட்டுவிட்டன. முதல்வருக்கு அடுத்து தேவைப்படும் வசதிகளை, டாக்டர்.சிவக்குமார் ஏற்பாடு செய்துவிட்டார். எனவே, அப்போலோவில் இருந்து எந்த நிமிடத்திலும் முதல்வர் கார்டன் திரும்பலாம் என்பதுதான் உண்மை. ' இன்று மாலை அவர் கார்டன் திரும்பலாம்' என்ற தகவலும் பரவிக் கொண்டிருக்கிறது. அதற்கான பணிகள் அனைத்தும் மிக ரகசியமாக செய்யப்பட்டு வருகின்றன. முதல்வர் வீடு திரும்பிய பிறகே, அப்போலோவில் இருந்து அறிவிப்பு வெளியாகலாம். தேவையற்ற பதற்றம் ஏற்படுவதை சசிகலா விரும்பவில்லை" என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

'கார்டன் ஜோதிடர்கள் கணித்துக் கொடுத்த நல்லநேரத்தில், எந்த நிமிடத்தில் அப்போலோவில் இருந்து வாகனம் கிளம்பும்' என ஆவலோடு காத்திருக்கின்றனர் அ.தி.மு.க தொண்டர்கள். 

- ஆ.விஜயானந்த் 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!