வெளியிடப்பட்ட நேரம்: 12:51 (19/11/2016)

கடைசி தொடர்பு:14:25 (20/11/2016)

20 ரூபாய் டாக்டர் மரணம்... ஏழை மக்கள் கதறல்!

டாக்டர்

இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவமனைக்கு சென்றாலே சொத்தை இழந்து விடுவோம். அந்தளவுக்கு பணம் நம்மிடம் இருந்து பிடுங்கப்பட்டு விடும். 'ரமணா ' திரைப்படத்தில் வருவது போல பல மருத்துவமனைகள் நாடு முழுவதும் நிரம்பிக் கிடக்கின்றன. சாதாரண மக்கள், அரசு மருத்துவமனைக்கு சென்றால் கூட பல விஷயங்களுக்குப் பணத்தை அழ வேண்டியது இருக்கிறது.  இதற்கு பயந்து கொண்டே உடலுக்கு ஏதாவது அசவுகர்யம் ஏற்பட்டால் கூட, மருத்துவமனையை நாடாமல் நடமாடிக் கொண்டிருக்கும் உயிர்கள் பல உண்டு. அப்புறம் பார்த்துக்கலாம்னு... தானா குணமாகுதுனா காத்திருக்கும் மக்களும் நிறையே பேர். 'மருத்துவர்களை கடவுளுக்கு நிகர் ' என்பார்கள்.  நோயாளி உயிர் பிழைத்தால் டாக்டர்களின் கையை பிடித்துக் கொண்டு  'நீங்கதான்யா எங்க தெய்வம்' என்றும் சொல்வார்கள். அப்படி மருத்துவத்துறையில் தெய்மாக உலவி வந்த மருத்துவர் ஒருவர் மரணமடைந்து விட, மக்கள் கதறி விட்டனர். 

கோவை ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் டாக்டர். பால சுப்பிரமணியம். ஆவாரம்பாளையத்தில் மருத்துவமனை நடத்தி வந்தார். மருத்துவமனை என்றால் என்னவோ பெரிய கட்டிடத்தில் இயங்கும் என்று நினைத்து விடாதீர்கள். பத்துக்கு பத்து அடி அறைதான் அந்த மருத்துவமனை.  தொடக்கத்தில் சிகிச்சையளிக்க இவர் வாங்கிய பீஸ் வெறும் 2 ரூபாய்தான். நாளைடைவில் பணத்தின் மதிப்பு குறைய குறைய தனது பீஸ் தொகையை உயர்த்தினார். அப்படி உயர்த்தி உயர்த்தி 20  ரூபாய்க்கு கொண்டு வந்தார். இதுதான் சிகிச்சை அளிக்க இவர் வாங்கிய அதிக பீஸ். 

நாளைடைவில் இவரது பெயரே மறைந்து போய் 20 ரூபாய்  டாக்டர் என்றே நிலைத்து விட்டது. பிரமாண்டமான மருத்துவமனைகள் நிறைந்த கோவை நகரில், 20 ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கவும் மக்களுக்கு ஒரு டாக்டர் கிடைத்தார். இதனால், சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள, ஏராளமான ஏழை மக்கள் டாக்டர். பாலசுப்பிரமணியத்திடம்தான் சிகிச்சை பெற வருவார்கள். 
சும்மா கையை பிடிச்சு பார்க்குறதுக்கே ரூ.100 வாங்கும் காலக்கட்டத்தில், 20 ரூபாய் வாங்கினால் எதிர்ப்பு கிளம்பாமல் இருக்குமா?. கிளம்பவும் செய்தது. கோவை நகரில் பல மருத்துவர்களும் பாலசுப்பிரமணியத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மறைமுக இடையூறுகளையும் ஏற்படுத்தினர். ஆனால், டாக்டர் பாலசுப்ரமணியம் மாறவில்லை மசியவில்லை. கடைசி வரை 20 ரூபாய்தான் வாங்கிக் கொண்டு சிகிச்சை அளித்தார். இதனால், இவருக்கு மக்கள் டாக்டர் என்ற பெயரும் உண்டு. 

பல சமயங்களில் 'டாக்டர் எங்கிட்ட உங்களுக்கு கொடுக்க 20 ரூபாய் கூட இல்லனு' சொல்ற நோயாளிகளும் உண்டு. அந்த நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளும் டாக்டரே வாங்கிக் கொடுப்பார். டாக்டரின் வெள்ளை மனசு அறிந்த அவரது பல நண்பர்களும் அவருக்கு உதவியாக இருந்துள்ளனர். மருத்துவமனைக்கு செல்லவில்லையென்றால், தன்னை நம்பி வரும் ஏழை நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காகவே ஒரு நாள் கூட டாக்டர் விடுப்பும் எடுத்ததில்லை. இந்த நிலையில் நேற்று நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, டாக்டர். பாலசுப்ரமணியம் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். டாக்டர் மரணம் அடைந்தது தெரியாமல், நேற்று மாலை வழக்கம் போல் அவரை நம்பியிருந்த நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்தனர். மருத்துவமனை பூட்டிக் கிடந்துள்ளது. ஒரு நாள் கூட வராமல் இருக்க மாட்டாரே... என்னவாச்சுனு தெரியவில்லையேனு விசாரித்துள்ளனர். 

அப்போதுதான் டாக்டர் இறந்து போன விஷயம் தெரிய வந்துள்ளது. இதையடுத்து பல நோயாளிகள் கதறி அழுதனர். பலர் அவரது உடலை பார்க்க வீட்டுக்கு ஓடினர். ஆவாரம்பாளையத்தில் பல இடங்களில் 'ஏழைகளின் தெய்வம் எங்கள் ஐயாவுக்கு இதய அஞ்சலி ' என கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. டாக்டர் மருத்துவம் பார்த்து வந்த பத்துக்குபத்து அறையிலும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் இப்போதும் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

டாக்டர். பாலசுப்ரமணியம் மருத்துவத்துறையின் நிஜ கடவுள்!

-எம்.குமரேசன்,தி.விஜய்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்