மதனுக்கு டிச.,5-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

வேந்தர் மூவிஸ் பட அதிபர் மதனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பண மோசடி வழக்கில் கடந்த ஆறு மாதங்களாக போலீசாரால் தேடப்பட்டு வந்த வேந்தர் மூவிஸ் பட அதிபர் மதன், திருப்பூரில் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். திருப்பூரில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து, மதனை அவரது வழக்கறிஞர் தினேஷ் சந்தித்துப் பேசினார். வழக்கறிஞரைத் தொடர்ந்து, மதனின் தாயார் மற்றும் அவரது இரு மனைவிகளும் சந்தித்து பேசினர்.

இதனைத் தொடர்ந்து, மதன் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு, அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி முன் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற நேரம் முடிந்துவிட்டதால், நீதிபதி பிராகாஷ் வீட்டில், அவர் ஆஜர்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பட அதிபர் மதனை விசாரித்த நீதிபதி, அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார். இதனால், டிசம்பர் 5-ம் தேதி வரை மதனை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், மதனுக்கு உடலில் காயங்கள் இருந்ததால், அவரை மருத்துவ பரிசோதனை செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது. இதனையடுத்து, மீண்டும் அவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, அதன் பிறகே புழல் சிறையில் அடைக்கப்படுகிறார்.

தமிழ்த் திரைப்பட உலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகக் கொடிகட்டி பறந்த வேந்தர் மூவிஸ் தயாரிப்பாளர் மதன், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, கடந்த மே மாதம் 28-ம் தேதி "நான் கங்கையில் ஜீவ சமாதியாகப் போகிறேன்" என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானார். இந்நிலையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு திருப்பூரில் பதுங்கியிருந்த மதனை போலீசார் இன்று கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!