வெளியிடப்பட்ட நேரம்: 16:32 (23/11/2016)

கடைசி தொடர்பு:16:46 (23/11/2016)

எந்த பொறுப்பிலும் இல்லாத ஜெயலலிதா திட்டத்தை செயல்படுத்த ஆணையிடலாமா?

எந்த பொறுப்பிலும் இல்லாத ஜெயலலிதா திட்டத்தை செயல்படுத்த ஆணையிடலாமா என பா.ம.க. கேள்வி எழுப்பி உள்ளது.

இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக ரூ.1000, ரூ.500 தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் முடங்கிக்கிடப்பதால், அவற்றில் உறுப்பினராக உள்ள உழவர்களுக்கு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மூலம் பயிர்க்கடன் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. உழவர் நலன் கருதி கேரள அரசின் வழியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

அதேநேரத்தில், இப்படி ஒரு ஆணையைப் பிறப்பிக்க முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிகாரம் உள்ளதா?  ஜெயலலிதா ஆணைப்படி செயல்படுத்தப்படும் இத்திட்டம் செல்லுமா? என்ற வினாக்கள் எழுந்துள்ளன. இந்திய நிர்வாக அமைப்பின்படி, அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான அரசாணைகளை சம்பந்தப்பட்ட துறைகளின் செயலர்கள் தான் பிறப்பிப்பார்கள் என்றாலும், அத்தகைய அரசாணைகளை பிறப்பிக்கும்படி துறை செயலாளர்களுக்கு உத்தரவிடுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தான். அந்த வகையில் தான்,‘‘ரூபாய் தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையிலும், பயிர்க்கடன் பெற்று விவசாயிகள் சாகுபடி செய்யும் வகையிலும் ஒரு முன்னோடித் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன’’ என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. முதலமைச்சரின் இந்த ஆணைப்படி மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் வழங்கப்படுகிறது.

உழவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற தமிழக அரசின் நோக்கம் நல்லதாக இருக்கலாம். இப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றுதான் பாட்டாளி மக்கள் கட்சியும் வலியுறுத்தி வந்தது. ஆனால், இந்த நோக்கத்தை நிறைவேற்ற தமிழக அரசு கடைபிடித்த வழிகள் தான் தவறானவையாக உள்ளன. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, தம்மால் அரசு பணிகளை கவனிக்க முடியவில்லை என்றும், தமது பணிகளை மூத்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கும்படியும் தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவுக்கு பரிந்துரை செய்திருந்தார். அதனடிப்படையில் முதலமைச்சர் ஜெயலலிதா வசம் இருந்த காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாற்றியும், அமைச்சரவைக் கூட்டங்களை நடத்துதல் போன்ற ஜெயலலிதாவின் அனைத்துப் பணிகளையும் அவரே கவனித்துக் கொள்வார் என்றும் கடந்த 11.10.2016 அன்று தமிழக ஆளுநர் ஆணை பிறப்பித்திருந்தார். அதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியில் ஜெயலலிதா நீடிக்கும் போதிலும் அதிகாரம் இல்லாதவராகவே தொடர்கிறார். அரசின் அன்றாட நிர்வாகத்தில் அவரால் தலையிட முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 166 (3) பிரிவின்படி ஜெயலலிதாவுக்கு உள்ள அதிகாரங்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்படி ஓர் ஆணையை முதல்வரின் பொறுப்புகளைக் கவனித்துக் கொள்ளும் ஓ.பன்னீர்செல்வத்தால் மட்டும் தான் பிறப்பிக்க முடியும். பன்னீர்செல்வத்திடம் வழங்கப்பட்ட பொறுப்புகளை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 166 (3) பிரிவின்படி ஜெயலலிதாவுக்கு மாற்றம் செய்து ஆளுநர் ஆணை பிறப்பித்தால் மட்டுமே, இப்படி ஓர் ஆணையை பிறப்பிக்கும் அதிகாரம் ஜெயலலிதாவுக்கு மீண்டும் கிடைக்கும். ஆளுநரால் அதிகார மாற்றம் செய்யப்படாத நிலையில், இப்படி ஓர் ஆணையை ஜெயலலிதா பிறப்பிக்க முடியாது. ஒருவேளை ஜெயலலிதா ஆணையிட்டு  அதனடிப்படையில் அரசுத்துறை செயலாளர்கள் அரசாணை வெளியிட்டிருந்தால் அது செல்லுபடியாகாது.
முதலமைச்சர் ஜெயலலிதா முழு உடல் நலத்துடன் இருந்தபோதே, தமிழக அரசு நிர்வாகம் முடங்கிக் கிடந்தது. முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவரது பொறுப்புகள் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு மாற்றப்பட்ட பிறகு அரசு நிர்வாகம் முற்றிலுமாக முடங்கி விட்டது. இதற்குக் காரணம் ஜெயலலிதாவால் மட்டும் தான் அரசு நிர்வாகம் இயங்க வேண்டும்; அவரைத் தவிர மற்றவர்கள் எதையும் செய்துவிடக்கூடாது என்று முதலமைச்சருக்கு நெருக்கமானவர்கள் நினைப்பது தான். இப்போது கூட இந்த உத்தரவை பன்னீர் செல்வம் பிறப்பித்திருந்தால் எந்த சிக்கலும் இல்லை; இன்னும் கேட்டால் அவர் தான் பிறப்பித்திருக்க வேண்டும். மாறாக, அரசின் செயல்பாடுகள்அனைத்தும் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தான் நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தால் தான் இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது. 

ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கை இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது ஆகும். இதனால் தேவையற்ற குழப்பங்கள் தான் ஏற்படும். எனவே, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இவ்விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசு நிர்வாகத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க