வெளியிடப்பட்ட நேரம்: 15:16 (24/11/2016)

கடைசி தொடர்பு:17:53 (23/07/2018)

‘இந்த புகைப்படத்தை கண்டிப்பாக வெளியிட வேண்டும்’ கரகரத்த கருணாநிதி!

அன்பழகன்

தி.மு.க தலைவர் கருணாநிதியை இன்று நண்பகல் தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் சந்தித்தார். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உடல்நிலை சரியில்லாமல் டாக்டர்கள் ஆலோசனைப் படி கோபாலபுரம் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்து வருகிறார் கருணாநிதி. அவரது உடல் முழுவதும் சிறிய கொப்புளங்கள் ஏற்பட்டதால் அதற்காக அவருக்குச் சிகிச்சை அளிக்கபட்டு வந்தது. இதனால் அவரைப் பார்க்க யாரும் வரவேண்டாம் என்று தி.மு.க தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. எனவே, யாரும் அவரை பார்க்க வரவில்லை. உடல் நலக்குறைவாக இருந்த போதிலும் அன்றாட அரசியல் நிலவரம் தொடர்பாக தொடர்ந்து அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றார். 

இந்நிலையில், தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், கருணாநிதியைப் பார்க்க வேண்டும் என்று இரண்டு முறை அனுமதி கேட்டிருக்கிறார். தி.மு.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன், தமிழக  காங்கிரஸ் கமிட்டித் தலைவர்  திருநாவுக்கரசர் என பலர்  பார்க்க அனுமதி கேட்டும் கருணாநிதியிடம் இருந்து சாதகமான பதில் வரவில்லை.

 இந்த நிலையில் கருணாநிதியின் உடலில் இருந்த கொப்புளங்களின் தாக்கம் குறைந்திருப்பதால்  அவரது  உடல்நி்லையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, பேராசிரியரைச் சந்தித்துப் பேசலாம் என்று முடிவு செய்தார். பேராசிரியரை வரச்சொல்லுங்கள் என்று கருணாநிதி கூறியிருக்கிறார். இதையடுத்து அன்பழகனுக்கு இந்தத் தகவல் தெரிவிக்கபட்டது, இதையடுத்து இன்று காலை கோபாலபுரம் வீட்டுக்கு பேராசிரியர் அன்பழகன் வந்தார். மாடியில் இருந்த கருணாநிதியின் அறைக்கு சென்றார். அப்போது அங்கே மு.க.ஸ்டாலினும் இருந்தார். பத்து நிமிடம் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. கருணாநிதியின் உடல்நிலை குறித்து அன்பழகன் அவரிடம் விசாரித்தார்.

 மருந்து, மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறார். உடலை கவனித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார். உடல் நலக்குறைவுக்குப் பின்னர் நெருங்கிய உறவினர்களைத் தவிர வேறு யாரையும் சந்திக்காமல் இருந்த கருணாநிதி பேராசிரியரைச் சந்தித்தபிறகு தெளிவுடன் காணப்பட்டார் என்கிறார்கள்.  இன்று மாலை தி.மு.க வின் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. அதை காரில் இருந்தே கருணாநிதி கண்டுகளிக்க உள்ளாராம். 

- அ.சையது அபுதாஹிர்


டிரெண்டிங் @ விகடன்