ஜெயலலிதா உடல்நிலை : முதன்முதலாக இரண்டு ஊடகவியலாளர்கள் அப்போலோ மருத்துவமனைக்குள் செல்ல அனுமதி! | Jayalalithaa health condition : Television channel editors visit Apollo

வெளியிடப்பட்ட நேரம்: 10:11 (05/12/2016)

கடைசி தொடர்பு:12:19 (05/12/2016)

ஜெயலலிதா உடல்நிலை : முதன்முதலாக இரண்டு ஊடகவியலாளர்கள் அப்போலோ மருத்துவமனைக்குள் செல்ல அனுமதி!

ஜெயலலிதா உடல்நிலை

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தீவிரக் கண்காணிப்பில் இருந்து வருகிறது. 70 நாட்களுக்கும் மேலாக அப்போலோ மருத்துவமனையில், அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் நேற்று மாலை திடீரென பின்னடைவு ஏற்பட்டது. இதய நோய் நிபுணர்கள் முதல்வர் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் முதல்வருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்றும், அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

முதல்வர் உடல்நிலை கவலைப்படத்தக்க வகையில் இருப்பதாக அதிகாரபூர்வமாக வந்த தகவலால் தமிழகம் பரபரத்தது. அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் அப்போலோவில் குவிய ஆரம்பித்தனர். தமிழகம் முழுவதும் ஒருவித பதற்றமான சூழல் ஏற்பட்டது.

தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் மகாராஷ்டிராவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தார். இரவே அப்போலோ வந்த அவர், முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்தார். மத்திய அரசின் சார்பில் அமைச்சர்கள் தொடர்ந்து தமிழக நிலையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.  சென்னை உட்பட முக்கிய நகரங்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் போலீஸார் அலர்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். விடுப்பு எடுக்காமல் அவர்கள் அனைவரும் பணிக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இயல்பு நிலை நீடிக்க போதுமான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

முதல்வருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அது குறித்து வெளி வரும் செய்திகள் மக்களிடையே பீதியை அதிகரித்து விடக்கூடாது. தமிழகத்தின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு வரக்கூடாது என்று தமிழக அரசு வட்டாரமும், அ.தி.மு.க மேலிடமும் கருதியதாகத் தெரிகிறது.


இதையடுத்து இரண்டு முக்கிய தொலைக்காட்சி சேனல்களின் ஆசிரியர்களை அப்போலோ வரும்படி அ.தி.மு.க தலைமை அழைத்திருக்கிறது. இதையடுத்து ’தந்தி’ தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே, ’புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகை செல்வன் இருவரும் நேற்று நள்ளிரவு அப்போலோவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களிடம் மருத்துவமனை வட்டாரத்தின் சார்பில் முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான் முதல்வருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவலும், தொடர்ந்து முதல்வர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ரத்த நாள அடைப்பை சரி செய்ய முயற்சி மேற்கொண்டதாகவும், 24 மணி நேரம் கழித்துத்தான் முதல்வர் உடல் நிலையில் அடுத்தகட்ட முன்னேற்றம் குறித்து தெரிய வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முதல்வர் உடல் நலம் பெற்றுவர பிரார்த்திப்போம்...

 

- கே.பாலசுப்பிரமணி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்